உலகளவில் மக்கள் அதிகம் பாதிக்கப்படுவது பல் நோய்களால்தான். சரியாக பற்களை பராமரிக்காததே 90 சதவீத பல் பிரச்னைகளுக்குக் காரணம் என்கிறார்கள்.
ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு வாய்வழி ஆரோக்கியம் அவசியமானது. பற்களில் ஆரோக்கியக் குறைபாடு நேர்ந்தால் அது இரத்த அழுத்தம் தொடங்கி, இதயம் மற்றும் நுரையீரல் சார்ந்த பிரச்னைகள் வரை உபாதைகள் ஏற்படுத்தும் என்கிறார்கள் இத்தாலிய மருத்துவ பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.
காலையில் எழுந்ததும் பேஸ்ட் இல்லாமல் வெறும் பிரஷைக் கொண்டு அல்லது விரலை வைத்து முதலில் பல் துலக்கினால், 65 சதவீதம் பிளேக்கும், 55 சதவீதம் வாய் கிருமிகளும் வெளியேறுவதாக அமெரிக்க டென்டல் அசோஷியேஷன் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். பின்னர் வழக்கமான புளோரைடு கலந்த பேஸ்ட் கொண்டு பல் துலக்கலாம்.
2021ம் ஆண்டு அமெரிக்கன் ஹார்ட் அசோஷியேஷன் நடத்திய ஆய்வு ஒன்றில் ஈறு நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒப்பிடும்போது ஆரோக்கியமான ஈறுகளைக் கொண்டவர்கள் குறைந்த இரத்த அழுத்தத்தைக் கொண்டிருப்பதாக கண்டறிந்தனர்.
ஆரோக்கியமான இதயத்துக்கு வாய்வழி சுகாதாரமும் முக்கியமானது. பொதுவாக ஈறு நோய் உள்ளவர்களில் 70 சதவீதம் பேருக்கு இதய நோய்கள் வரும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
தினமும் காலை, இரவு என இரண்டு நேரமும் 3 முதல் 4 நிமிடங்கள் பல் துலக்க, ஆரோக்கியமான வாய் நலன் காக்கலாம். பல் துலக்கும்போது ஈறுகளையும் சேர்த்து துலக்க வேண்டும். பல் துலக்கும்போது படுக்கை வசத்தில் பல் துலக்குவது நல்லது. அதுவும் அதிக அழுத்தம் கொடுக்காமல் பிரஷ் செய்தாலே போதும்.
உங்கள் பற்களின் ஆரோக்கியம் உங்களை ஞாபக மறதி நோயிலிருந்து காப்பாற்றுகிறது. பற்களின் ஈறுகளில் பிரச்னை ஏற்படுவதற்கும் ஞாபக மறதி ஏற்படுவதற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதை ஜப்பான் பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
பற்களின் ஈறுகளில் பிரச்னை ஏற்படுவதற்கு பாக்டீரியாக்கள்தான் காரணம். அதை தவிர்க்க சிறந்த வழி சாப்பிட்ட பிறகு வாய் கொப்பளிப்பதுதான்.
தண்ணீர் அடிக்கடி பருகினால் பற்களில் தங்கியிருக்கும் உணவு துகள்கள் வெளியேறி பற்கள் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை உங்கள் பற்களில் தண்ணீர் பட வேண்டும்.
ஆரோக்கியமான பற்களைப் பராமரிப்பது என்பது வெறும் துலக்குதல் மற்றும் கொப்பளித்தலை விட ஊட்டச்சத்துக்களை வழங்கும் சமச்சீர் உணவுகளை உட்கொள்வதிலும் அடங்கியுள்ளது.
ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி, சிட்ரஸ் பழங்கள், கேரட் மற்றும் செலரி, பச்சை காய்கறிகள், வெங்காயம், காளான், பாதாம், வால்நட் போன்ற கொட்டை உணவுகள் அனைத்தும் பல் ஆரோக்கியத்திற்குச் சிறந்த உணவுகள். இந்த உணவுகளில் நீர் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது உமிழ்நீர் உற்பத்தியைத் தூண்டி பற்களின் ஆரோக்கியத்திற்கு வழிவகை செய்கிறது.
பால், பாலாடைக்கட்டி மற்றும் தயிர் போன்ற பால் பொருட்களில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. பற்களை வலுப்படுத்த இந்த தாதுக்கள் அவசியம்.
கீரைகளில் கால்சியம், வைட்டமின் கே மற்றும் ஃபோலிக் அமிலம் உள்ளிட்ட வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிரம்பி உள்ளன. இவை பல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
கோழி, மீன் மற்றும் முட்டை போன்ற புரதம் நிறைந்த உணவுகள் வாயில் உள்ள திசுக்களை சரிசெய்ய உதவுகின்றன. வலுவான பல் பல் எனாமல் வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன.
காபி, தேநீர், சிவப்பு ஒயின் மற்றும் அதிக நிறமிகள் சேர்க்கப்பட்ட உணவுகள் நமது பற்களைக் கறைபடுத்தி வெண்மையாக உள்ள பற்களின் நிறத்தை மங்கச் செய்கின்றன.
புகைபிடித்தல் அல்லது புகையிலை மெல்லுதல் ஆகியவை பற்களின் மஞ்சள் நிறத்திற்கு வழிவகுக்கிறது. இதனை தவிர்க்க அவ்வப்போது மஞ்சள் தூள் கலந்து பல் துலக்குவது நல்ல பலன் தரும்.
நமது பற்கள் மற்றும் வாய் பகுதியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு வழக்கமான பல் பரிசோதனைகளை தகுந்த மருத்துவர்களிடம் தகுந்த இடைவெளியில் மேற்கொள்வது அவசியம். இதன் மூலம் பல் பிரச்னைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அவை மோசமடையாமல் இருக்க தகுந்த சிகிச்சைகளைப் பெற முடியும்.