நடைப்பயிற்சி என்பது நாம் சுறுசுறுப்பாக இருப்பதற்கான ஒரு சிறந்த வழி. இது முதுகு வலியைக் குறைத்தல், உடல்நிலை மற்றும் மனநிலை மேம்படுத்துதல் உட்பட பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. ஆனால், நடைப்பயிற்சியை ஒரு உடற்பயிற்சியாகப் பார்க்கும்போது, வெளியே நடப்பது நல்லதா அல்லது டிரெட்மில்லில் நடப்பது நல்லதா என்ற கேள்வி எழுகிறது. இந்தப் பதிவில் எங்கு நடப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
வெளியே நடப்பது:
வெளியே நடப்பது இயற்கையின் அழகை ரசிக்க ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. பறவைகளின் ஒலி, மரங்களின் நிழல், தூய்மையான காற்று என இயற்கை வழங்கும் அனைத்தையும் அனுபவிக்கலாம். இது மன அழுத்தத்தை குறைத்து மனதிற்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது.
வெளியே நடக்கும்போது பல்வேறு வகையான நிலப்பரப்புகள் மற்றும் சாய்வுகள் இருப்பதால், உடலின் பல்வேறு தசைகள் பயிற்சி பெறுகின்றன. இது உடல் சமநிலையை மேம்படுத்தி, உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. மேலும், வெளியே நடப்பதால் சூரிய ஒளியிலிருந்து உடலுக்குத் தேவையான விட்டமின் டி உற்பத்தியாக உதவுகிறது. விட்டமின் டி எலும்புகளை வலுப்படுத்துவதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
பூங்கா அல்லது சாலையில் நடக்கும்போது மற்றவர்களுடன் தொடர்புகொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. இது சமூக வாழ்க்கையை மேம்படுத்தி மனச்சோர்வைத் தடுக்கிறது. வெளியே நடப்பது ட்ரெட்மிலில் நடப்பதை விட அதிக கலோரிகளை எரிக்கிறது. ஏனெனில், வெளியே நடக்கும்போது உடலில் காற்று எதிர்ப்பு அதிகமாக இருக்கும்.
வெளியே நடப்பதில் சில தீமைகளும் உள்ளன. வாகனங்கள், விலங்குகள் போன்றவற்றால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக, இரவு நேரத்தில் நடக்கும்போது பாதுகாப்பு குறித்து கவனமாக இருக்க வேண்டும். மழை, காற்று, வெயில் போன்ற காலநிலை மாற்றங்கள் வெளியில் நடப்பதை பாதிக்கலாம். மேலும், காற்று மாசுபாடு, சத்தம் போன்ற சுற்றுப்புறச் சூழல் வெளியே நடப்பதைக் கடினமாக்கலாம்.
ட்ரெட்மில்லில் நடப்பது:
ட்ரெட்மிலில் நடப்பது வெளியே நடப்பதை விட பாதுகாப்பானது. ஏனெனில், இது ஒரு கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் அடங்கிவிடும். நம் விருப்பப்படி வீட்டிலோ அல்லது ஜிமிலோ எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நடைபயிற்சி செய்யலாம். காலநிலை, சுற்றுப்புறச் சூழல் போன்றவை இதை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை.
ட்ரெட்மில் சாதனத்தில் பல்வேறு வகையான பயிற்சி திட்டங்களை நாம் முயற்சிக்க முடியும். இது நடைப்பயிற்சியை மேலும் சுவாரசியமாக மாற்றும். மூட்டு வலி உள்ளவர்களுக்கு ட்ரெட்மில்லில் நடப்பது நல்லது. ஏனெனில், இது மூட்டுகளில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கிறது. சீரான வேகத்தில் நடக்க விரும்புபவர்களுக்கு ட்ரெட்மில் ஒரு சிறந்தத் தேர்வாகும்.
ட்ரெட்மில்லில் நடப்பதன் தீமைகள் என்று பார்க்கும்போது, இது எப்போதும் சீரான வேகத்தில் இயங்குவதால், விரைவில் உடல் சோர்வடைய வாய்ப்புள்ளது. ட்ரெட்மிலில் நடக்கும் போது இயற்கை அழகை ரசிக்க வாய்ப்பில்லை. இது மனதிற்கு சலிப்பை ஏற்படுத்தலாம். மேலும், இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட செயல் என்பதால், உங்களது சமூகத் தொடர்புகளை குறைக்கும் வாய்ப்புள்ளது.
எது நல்லது?
அவுட்டோர் வாக்கிங், ட்ரெட்மில் வாக்கிங் இரண்டிற்கும் தனித்தனி நன்மை, தீமைகள் உண்டு. இதில் எது உங்களுக்கு ஏற்றது என்பதை நீங்களே முடிவு செய்ய வேண்டும். வசதி மற்றும் பாதுகாப்பை நீங்கள் விரும்பினால், ட்ரெட்மில் வாக்கிங் சிறந்தது. இயற்கையை ரசித்து மன அமைதியைப் பெற விரும்பினால் வெளியே சென்று நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். இதில் நீங்கள் எதைத் தேர்வு செய்தாலும் தொடர்ச்சியாக நடக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். குறைந்தது வாரத்திற்கு 150 நிமிடங்கள் நடப்பது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.