பொதுவாக அதிகாலையில் வாக்கிங் செல்வது உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால், குளிர்காலத்தில் அதிகாலையில் யாரெல்லாம் வாக்கிங் செல்லக்கூடாது என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
1. இதய நோயாளிகள்: குளிர்கால அதிகாலை நேரங்களில்தான் மாரடைப்புகள் அதிகம் நிகழ்கிறது. குளிர்காலத்தில் வெப்பநிலை குறைவாக இருக்கும். அதனால் இதயத்தின் இரத்த நாளங்கள் சுருங்கும். இது உடல் முழுவதும் செல்லக்கூடிய இரத்த ஓட்டத்தை பாதிக்கும். இதயத்துக்கு செல்லக்கூடிய ஆக்சிஜனுடைய அளவு குறையும். அந்த நேரத்தில் இதயம் அதிகமாக வேலை செய்வதால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
2. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள்: உடல் குளிர்ச்சியாக இருக்கும்போது நரம்பு மண்டலத்தின் செயல் அதிகரித்து இரத்த அழுத்தத்தையும் கூட்டுகிறது. மேலும், இரத்தத்தை அடர்த்தியாக்குகிறது. இதனால் இதயம் வேகமாக துடிக்கத் தொடங்கும். அதனால் இவர்கள் குளிர்கால அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சியை கைவிடவேண்டும்.
3.ஆஸ்துமா நோயாளிகள்: இவர்களுக்கு பனி மற்றும் குளிர்காலத்தில் மூச்சு விட சிரமமாக இருக்கும். சுற்றுச்சூழல் மாசுபாட்டுடன் சேர்ந்து, குறைந்த வெப்ப நிலையில் குறைந்த அளவே வியர்க்கும். அதனால் உடம்பில் இருக்கும் அதிகப்படியான நீரை வெளியேற்ற முடியாமல் நுரையீரல் திணறும்.
4. காய்ச்சல், சளி, இருமல், நிமோனியா போன்ற நோய்கள் இருப்பவர்கள்: இவர்களும் குளிர்கால அதிகாலை நேரத்தில் வெளியில் சென்றால் உடல்நலக் குறைபாடு அதிகரிக்கும்.
5. மூட்டுவலி உள்ளவர்கள்: குளிர்காலத்தில் வெப்பநிலை குறையும்போது முழங்கால்கள், வழக்கத்தை விட விறைப்பாக இருக்கும். கால் மூட்டுகள் உறைந்து கடுமையான வலி இருக்கும். முழங்கால் மூட்டுகளில் உள்ள இரத்த நாளங்கள் சுருங்குகின்றன. மேலும் குறைந்த இரத்த ஓட்டம் அந்தப் பகுதிகளை இன்னும் குளிர்ச்சியாகவும் கடினமாகவும் ஆக்குகிறது.
6. சொரியாசிஸ் போன்ற தீவிர சரும நோய் உள்ளவர்கள்: சூரிய ஒளியில் வைட்டமின் டி அதிகம் உள்ளது. வைட்டமின் டி இல்லாத அதிகாலை வானிலை இவர்கள் உடல் நிலையை இன்னும் மோசமாக்கும்.
மேற்கண்ட நபர்கள் வாக்கிங் செல்லும்போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்:
இவர்கள் அதிகாலையில் இல்லாமல் சூரியன் உதித்து ஆறு மணிக்கு மேல் வாக்கிங் செல்வது நன்று. அப்போதும் காதுகளை நன்றாக மூடிக்கொள்ள வேண்டும்.
நல்ல இதமான சூடான உல்லன் வகை துணிகளை அணிந்து கொள்ள வேண்டும். தெர்மல், ஸ்வெட்டர், சால்வை, க்ளவ்ஸ், சாக்ஸ், ஷூ போன்ற இதமான உடைகளை அணிவது நல்லது.
காலையில் எழுந்தவுடனே வாக்கிங் செல்ல கிளம்பாமல் சற்று நேரம் வீட்டிலேயே ரிலாக்ஸ் செய்து விட்டு, உடலை வெப்பமாக்க சில லேசான உடற்பயிற்சிகளை செய்த பின்பு இவர்கள் வெளியே செல்லலாம். வீட்டிலேயே மூச்சுப் பயிற்சி செய்து விட்டு அதன் பின்பு வாக்கிங் செல்வது நன்று.