

இந்தியாவில் நீரிழிவு நோயாளிகள்:
இந்தியாவில் 20 கோடிக்கும் அதிகமான நீரிழிவு நோயாளிகள் உள்ளதாக தரவுகள் கூறுகின்றன. இங்கு ஏழு பெரியவர்களில் ஒருவர் நீரிழிவு நோயாளியாக உள்ளார். மேலும் 43% பேர் கண்டறியப்படாத நீரிழிவு நோயாளிகள் உள்ளனர். ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் நீரிழிவு நோய் மற்றும் அதன் மோசமான பாதிப்புகளால் இறந்துள்ளனர். இந்தியாவில் டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் 95,600 பேர், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தெரிவித்துள்ளது. ஆசியாவிலேயே டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை அதிகம் கொண்ட நாடாக இந்தியா உள்ளது.
ஊறுவிளைவிக்கும் பழச்சாறுகள்:
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகளை கொடுப்பதற்காக பெரும்பாலும் பழச்சாறுகளை குழந்தைகளுக்கு கொடுக்கிறோம். பழங்களில் உள்ள ஊட்டச்சத்துகளை எளிதில் பெறுவதற்கு பழச்சாறுகளை அருந்துவது உதவிகரமாக இருக்கும் என்று நாம் நினைக்கலாம்.
ஆனால் பழச்சாற்றில் ஒளிந்திருக்கும் தீமைகள் பற்றி நாம் எதுவும் அறிவது இல்லை. ஆரோக்கியமான பானங்கள் என்று அறியப்படும் பழச்சாறுகள் எவ்வாறு நீண்டகால ஆரோக்கியத்தில் கேடு விளைவிக்கின்றன என்பதை அறிந்து கொள்வோம்.
இந்திய வீடுகளில் தயாரிக்கப்படும் பழச்சாறுகளில் கிட்டத்தட்ட ஒரு மேஜைக் கரண்டி அளவிற்கு சர்க்கரை சேர்க்கப்படுகிறது , இது கிட்டத்தட்ட 35கி முதல் 50 கி வரை இருக்கலாம். இதே கடைகளில் இருந்து வாங்கப்படும் பழச்சாறுகளில் இன்னும் அதிகமாக சர்க்கரை சேர்க்கப்பட்டு இருக்கலாம். இப்போது பழச்சாறு வகைகளிலும் கேனில் உள்ள கோலா வகைகளும் ஒரே மாதிரியான மோசமான பண்புகளை கொண்டுள்ளன. கோலாவை தவிர்ப்பதாக கூறி அதிக சர்க்கரை மிகுந்த பழச்சாறுகளை சாப்பிடுவதால் எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக உடலில் இன்சுலின் எதிர்ப்பை அதிகரித்து , நீரிழிவு நோயை விரைவாக கொண்டு வர ஒரு பயிற்சியாக இருக்கும்.
இவற்றை விட மோசமானது டெட்ரா பேக்குகளில் கிடைக்கும் பழச்சாறுகள், கேன்கள் மற்றும் பாட்டிலில் அடைக்கப்பட்ட பழச்சாறுகள்.
இவை , முழுக்கவும் பெரும்பாலும் சீனியும் புளிக்காடியும் சேர்த்த கலவையாக உள்ளது. இந்த பானங்களின் பாக்கெட் பின்னாடி ஒட்டியுள்ள, பாக்கெட்டுகளில் உள்ள பழச்சாறு அளவுகள் 20% க்கும் குறைவாகவே இருக்கின்றன. பெரும்பாலும் சர்க்கரை மற்றும் இனிப்பூட்டிகளே இதில் அதிகம் உள்ளது.
பழச்சாறு கோலாவை போல அதிக சர்க்கரை நிறைந்ததா?
பழச்சாறு தயாரிக்கும் முறைகளில், பழங்களில் உள்ள சத்துக்கள் வெளியேறி விடுகின்றன. பழச்சாறு தயாரிக்கும் போது பழங்களின் அளவைவிட அதிகமாக பால் அல்லது தண்ணீர் சேர்க்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாக செயற்கை சர்க்கரை சேர்க்கப்படுகிறது. இந்த சர்க்கரை தான் ஒட்டு மொத்தமாக பழச்சாறில் இருந்து கிடைக்கும் நன்மைகளை கெடுத்து விடுகிறது. இந்த முறையில் பழச்சாறு தயாரிக்கும் போது இயற்கையாக பழங்களில் உள்ள நார்ச்சத்துக்கள் வெளியேறி விடுகின்றன.
அதிக சர்க்கரை சேர்ப்பதால் கிட்டத்தட்ட இது ஒரு சர்க்கரை பானமாக மாறிவிடுகிறது, கிட்டத்தட்ட கார்பனைட் கோலா பானங்களுக்கு இணையான ஒரு பானமாக இதை எடுத்துக் கொள்ளலாம். பழங்களில் உள்ள ஊட்டச்சத்துகளை எடுத்துக் கொள்ள நார்ச்சத்து தேவைப்படுகிறது. பழத்தை பிழிந்து நீர்த்துப்போகச் செய்யும் போது நார்ச்சத்துகளின் பலன் இல்லாமல் போய்விடுகிறது.
குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு:
பழச்சாறுகளின் முதன்மை நுகர்வோர்களாக குழந்தைகள் உள்ளனர். நாமும் வளரும் குழந்தைகள் என்று, அவர்களுக்கு அதிக ஊட்டச்சத்து கொடுக்க தினமும் ஒரு பழச்சாறை கொடுத்து வளர்கிறோம். பழச்சாறுகளில் சேர்க்கப்படும் சர்க்கரை குழந்தைகளின் வளர்ச்சிதை மாற்றத்தில் சீர்கேடுகளை விளைவிக்கின்றன. இவை விரைவிலேயே அவர்களுக்கு நீரிழிவு நோய் வரக் காரணமாகின்றன. இதனால் சிறு வயதிலேயே அவர்கள் கடுமையான உடல்நலப் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
தீர்வுகள்:
பழச்சாறு உற்பத்தியாளர்கள் சரியாக தரநிலைகளை பின்பற்றுகிறார்களா என்று ஆய்வு செய்ய வேண்டும். மேலும் அதில் பயன்படுத்தப்படும் பொருட்களில் சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்த அதிக கட்டுப்பாடுகளையும் , புதிய விதிமுறைகளையும் அரசு வகுக்க வேண்டும்.
குழந்தைகளை பழச்சாறு குடிக்கும் முறையில் இருந்து மாற்ற வேண்டும். ஒரு வேளை அவ்வாறு குடிக்க ஆசைப்பட்டால், அதில் செயற்கை சர்க்கரை சேர்க்காமல் செய்து கொடுங்கள். பெரும்பாலும் பழங்களை உரித்தோ, நறுக்கியோ சாப்பிட கற்றுக் கொள்ளுங்கள். கடைகள் மற்றும் பேக்கில் இருக்கும் பழச்சாற்றை தவிர்த்து விடுங்கள்.