
உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் நம் உடலுக்குள் ஓடிக் கொண்டிருக்கும் இரத்த அளவும் அதன் ஆரோக்கியமும் பாதுகாக்கப்பட வேண்டும். குறிப்பாக ரத்தத்தில் உள்ள ஹுமோகுளோபின் (hemoglobin) எண்ணிக்கை சரியான அளவில் இருக்க வேண்டும். உடலில் ஏற்படும் வளர்ச்சி மாற்றத்தில் ஆரம்பித்து நாம் மூச்சு விடுதல், உடல் நீரியல் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் உடலின் வெப்பத்தை கட்டுப்படுத்தும் செயல் வரை அனைத்திற்கும் நமக்கு ஆரோக்கியமான ரத்தம் தேவை.
நல்ல உடல் நலத்துடன் உள்ள ஒரு மனிதனின் ரத்தத்தில் ஒரு கன மில்லி மீட்டரில் 45 முதல் 50 லட்சம் சிவப்பணுக்கள் இருக்கும். இந்த சிவப்பணுக்களின் சைட்டோபிளாசத்தில் ஹீமோகுளோபின் என்ற நிறமி உள்ளது. இது தான் ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தை கொடுக்கிறது.100 கிராம் ரத்தத்தில் 17 கிராம் ஹீமோகுளோபின் இருக்கும்.
சில நேரங்களில் சில உடல்நல குறைபாடுகளின் போது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும். குறிப்பாக இரத்த சோகை எனும் அனிமீயா ஹுமோகுளோபின் (hemoglobin) அளவு குறைவதால் வரும் ஒரு நோய்.
ரத்த சோகை என்றால் உடலில் போதிய ரத்தம் இல்லை என்று பொருள். உடலின் ஹீமோகுளோபின் அளவை மூன்று வகையாக பிரிக்கிறார்கள். பொதுவாக இது 14 g/ dl அளவுக்கு அதிகமாக இருக்க வேண்டும். (அதாவது ஒரு டெசி லிட்டருக்கு 14 கிராம் ஹீமோகுளோபின்) சராசரியாக 10-12 g/dl அளவில் இருக்க வேண்டும். ஆபத்தில்லாத அளவு என்றால் 8-9.9 g/dl அளவு இருக்க வேண்டும். 8 g/dl அளவுக்கு குறைவாக இருந்தால் அது ஆபத்தான அளவு விரைவில் அனீமியா எனும் இரத்த சோகை வரும்.
அண்மையில் பள்ளிகளில் பரிசோதிக்கப்பட்ட போது 60 சதவீத பள்ளிகளில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கு ஹீமோகுளோபின் (hemoglobin) அளவு 8g/ dl அளவில் இருப்பது தெரிய வந்துள்ளது. இது அவர்களை சோர்வுடன் வைத்திருந்து கற்பதில் தேக்கநிலையை ஏற்படுத்தும். அவர்கள் சுறுசுறுப்பாக இயங்க ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வேண்டும். ஹுமோகுளோபின் என்பது நம் சிவப்பு அணுக்களில் உள்ள இரும்புச் சத்து நிறைந்த புரதமாகும். நம் உடல் முழுவதும் ஆக்ஸிஜனை கொண்டு செல்லும் பொறுப்பு இந்த புரதத்திற்கு உரியது.
இரத்தத்தில் ஹுமோகுளோபின் அளவு குறையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.
தினமும் உங்களது உணவில் சரிவிகித உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். உணவில் அதிகளவில் காய்கறிகள் மற்றும் பழங்களை எடுத்து கொள்ள வேண்டும். அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும்.
சிகப்பு இரத்த அணுக்களை உருவாக்க தேவையாக இருப்பது பி காம்ப்ளக்ஸ் வைட்டமினான போலிக் அமிலம். இந்த அமிலம் குறைவாக இருந்தால், இரத்தத்தில் ஹுமோகுளோபின் அளவு தானாகவே குறைந்து விடும். எனவே, போலிக் அமிலம் குறையாமல் இருக்க பச்சை இலை காய்கறிகள், முளைத்த பயிறு, முழு தானியங்கள், நிலக்கடலை, ஈரல் இறைச்சி, வாழைப்பழம், பீன்ஸ், கொண்டை கடலை போன்றவைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறையாமல் பராமரிக்க உதவுகிறது.
இரத்தத்தில் உள்ள ஹுமோகுளோபினை அதிகரிக்க பீட்ருட் மிகவும் நல்லது. இதிலுள்ள இரும்புச் சத்து, போலிக் அமிலம், பொட்டாசியம், நார்ச்சத்து போன்றவை உடலில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. இரத்த சோகை உள்ளவர்கள் பீட்ரூட் சாறு பருகலாம்.
மாதுளம் பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம், புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இவை ரத்தத்தில் உள்ள ஹுமோகுளோபின் எண்ணிக்கை அதிகரித்து, ஆரோக்கியமான ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.
இரத்தத்தில் ஹுமோகுளோபின் அளவு குறைகிறது என்றால் உடலில் இரும்புச் சத்து குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். எனவே, இரும்புச் சத்து நிறைந்த பேரீச்சம் பழம், தானியங்கள், பாதம், வால் நட், பூசணி விதைகள் போன்ற பருப்பு மற்றும் கொட்டைகள், கீரைகள், மீன் மற்றும் சிவப்பு இறைச்சி போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
உடலின் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வெல்லம் உதவுகிறது. காரணம் அதிலுள்ள இரும்புச்சத்து மற்றும் போலேட் அமிலம்.
வைட்டமின் சி குறைபாடு இருந்தால் அதுவும் ரத்தத்தில் ஹுமோகுளோபின் அளவை குறைக்கும்.எனவே, அதனை சரிசெய்ய வைட்டமின் சி சத்து நிறைந்த பழங்களை குறிப்பாக ஆரஞ்சு, எலுமிச்சை, பப்பாளி, நெல்லிக்காய், பப்ளிமாஸ் பழம், தக்காளி, ஸ்ட்ராபெரி போன்ற பழங்களை சாப்பிட வேண்டும்.
குழந்தைகள் தினம் ஒரு மணி நேரத்திற்கு விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும்; 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடலுக்கு உழைப்பு கொடுக்கும் போது அது உடல் முழுவதும் ஆக்ஸிஜனை அதிகரிக்கும். அதனால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். எக்காரணத்தை கொண்டும் காலை உணவை தவிர்க்க கூடாது. உணவில் அதிகப்படியாக சர்க்கரை மற்றும் உப்பை சேர்க்கக்கூடாது. பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். குளிர்பாணங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)