கிராமங்களில் வசிப்போர் நிச்சயமாக பசும் சீம்பாலைப் பற்றி அறிந்திருப்பார்கள். இளம் மஞ்சள் வண்ணத்தில் ஏலக்காய், சுக்கு மணத்துடன் இனிக்கும் சீம்பாலின் ருசி அலாதியானது. தற்போது நகரங்களில் செயற்கையான சீம்பால்களை வெட்டி வைத்து விற்பனை செய்கிறார்கள். ஆனால், பசு வளர்ப்பவர்களிடம் இருந்து நீர் கலக்காத கெட்டிப்பாலாக கிடைக்கும் சீம்பாலே சிறந்தது. இந்த சீம்பால் என்பது என்ன? இதன் மருத்துவ குணங்கள் குறித்துப் பார்ப்போம்.
சீம்பால் என்பது என்ன?: பிறக்கும் குழந்தைகளுக்கு எப்படி பிரசவித்த உடன் தாயிடமிருந்து முதலில் வெளிவரும் சத்துக்கள் நிறைந்த தாய்ப்பால் அவசியமோ, அதேபோல் பசுக்கள் கன்று ஈன்ற பின் சுரக்கும் பால் மிகவும் சத்துக்கள் நிறைந்த பாலாக கன்றின் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமாகிறது. கன்றை ஈன்ற பசு முதல் மூன்று நாட்கள் அளிக்கும் பால் வெண்ணிறமாக இல்லாமல், அடர்ந்த நிறமாக இருக்கும். சீம்பால் எனப்படும் அந்தப் பாலில் கொழுப்பு சத்து குறைவாகவும், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் புரதச்சத்துக்கள் அதிகமாகவும் இருக்கும். புதிதாக ஈன்ற கன்று நோய் எதிர்ப்பு சக்தி இன்றி சோர்வாக இருக்கும். சீம்பாலைக் குடிப்பதால் அந்தக் கன்றின் வளர்ச்சி வேகமாகவும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகவும் இருக்கும். கன்று ஈன்று மூன்று நாட்கள் கழிந்ததும் மாடு சுரக்கும் பால் வெண்ணிறமாக மாறும்.
சீம்பால் சாப்பிடுவதால் நமக்குக் கிடைக்கும் நன்மைகள்: சீம்பாலில் வைட்டமின்கள், புரதம், தாதுக்கள் உள்ளன. ஆகவே, நாம் சீம்பாலை உட்கொள்வதன் மூலம் வயதானால் ஏற்படும் சுருக்கங்கள் நீங்கி, இளமையாக இருக்க உதவி செய்கிறது என மருத்துவ ஆய்வுகள் கூறுகிறது. மேலும், நாள்பட்ட மலச்சிக்கலையும் சரியாக்கும். நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரித்து, உடலில் அஜீரண பிரச்னைலிருந்து விடுபட வைக்கிறது. கால்சியம் குறைபாட்டால் வரும் மூட்டு வலி மற்றும் எலும்புகளில் ஏற்படும் உபாதைகளைத் தடுக்கும். சருமப் பொலிவுக்கு உதவுகிறது.
எப்படிப் பயன்படுத்துவது?: சாதாரணமாகப் பருகும் பால் போல இதைக் காய்ச்சுவது சரியல்ல. இதில் அதிகம் நீர் விடாமல் கருப்பட்டி அல்லது வெல்லம் கலந்து சுக்கு சேர்த்து ஆவியில் வேகவிட்டால் கட்டியாக மாறும். இதை ஆறியதும் துண்டுகள் போட்டு உண்ணலாம். பொதுவாக, இந்த சீம்பால் இயற்கையாகவே அதிகமாக சுரக்கும் என்பதால் வணிக ரீதியில் இதை விற்பனை செய்வோரும் உண்டு. அல்லது தங்கள் சுற்றத்தாருக்கு மட்டும் பகிர்வோரும் உண்டு. கிடைப்பது அரிதாகையால் கிடைத்தால் தவிர்க்காமல் வாங்கி உண்பது உடல் நலத்துக்கு சிறந்தது. குறிப்பாக, இது குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்றது. எனினும், எந்த உணவாக இருந்தாலும் நம் உடலுக்கு பொருந்துகிறதா என அறிந்து அதை உபயோகிப்பது சாலச்சிறந்தது.