

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இந்த உணவுப் பொருளுக்கு இப்படி ஒரு சக்தியா? என்று வியந்து போவீர்கள். ஒரு நூற்றாண்டு காலமாக மனிதர்களை பாதிக்கும் மோசமான உயிர்க்கொல்லி நோய்களில் முதன்மையாக புற்றுநோய் உள்ளது. பெரிய அளவில் முன்னேற்றம் அடைவதாக செய்திகள் வெளிப்பட்டாலும், புற்றுநோய் சிகிச்சைக்கு கண்டுபிடிக்கப்பட்ட பல மருந்துகள் இன்றும் சோதனை நிலையிலே உள்ளன. அவை எப்போது அங்கீகாரம் பெற்று பயன்பாட்டிற்கு வரும் என்ற கவலை நீண்ட காலமாக உள்ளது.
தற்போது உள்ள சிகிச்சை முறைகளும் மிகவும் விலை உயர்ந்ததாக உள்ளன். இந்த நோயின் வகைகளை ஆரம்ப காலத்திலேயே நாம் கண்டறியாவிட்டால் சிகிச்சை அளிப்பது கடினமாக மாறும். கீமோதெரபி, கதிர்வீச்சு மற்றும் நோயெதிர்ப்பு சிகிச்சை போன்ற முறைகள் புற்றுநோய் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் பலன் கொடுத்தாலும், அதன் பக்கவிளைவுகள் பல உடல்நல பாதிப்பையும் ஏற்படுத்துகின்றன. இந்த சூழலில் மருத்துவ விஞ்ஞானிகள் ஒரு ஆராய்ச்சி மூலம் நம்பிக்கைக்குரிய கண்டுபிடிப்பை செய்துள்ளார்கள்.
ஆய்வின் படி, நம்மூர் சந்தையில் எளிதாக கிடைக்கும் பட்டன் வகை காளான்களில், புற்றுநோயை கட்டுப்படுத்தும் ரசாயனங்கள் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரசாயனப் பொருட்கள் உடலில் ஏற்படும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கின்றன, அது மட்டுமல்லாமல் இதயம் தொடர்பான தொந்தரவுகளையும் குறைப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரித்து ஆரோக்கியமாக இருக்க வைக்கிறது.
புற்றுநோய் எதிர்ப்பு கவசமாக:
பட்டன் காளான்களில் பாலிசாக்கரைடுகள், டெர்பெனாய்டுகள், பீட்டா -குளுக்கன்கள், ஸ்டீராய்டுகள், பாலிபினால்கள், ஃபிளாவனாய்டுகள், புரதங்கள் மற்றும் பெப்டைடுகள் போன்ற உயிரியல் ரீதியாகச் செயல்படும் ரசாயனங்கள் உள்ளன. இந்த உயிரியல் ரசாயனங்கள் புற்றுநோயை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
தேசிய மருத்துவ நூலகத்தின் அறிக்கையின்படி, பட்டன் காளான்கள் இரைப்பை புற்றுநோயைத் தடுப்பதில் அதிக செயலாற்றுகிறது. மேலும் பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவைச் சீராக வைக்க உதவும் ஊட்டச்சத்துக்கள் இதில் இருப்பதால் மார்பகப் புற்றுநோய் அபாயத்தையும் குறைக்கிறது.
தினசரி காளான்களை எவ்வளவு சாப்பிடலாம்?
1966ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை, சோதனை செய்யப்பட்ட 202 புற்றுநோய் ஆய்வுகளின் முடிவில், ஒரு நாளைக்கு 18 கிராம் அளவில் பட்டன் காளான்களை சாப்பிடுவது, புற்றுநோயின் அபாயத்தை சுமார் 45% குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் காளானில் உள்ள சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியான எர்கோதியோனைன் என்ற ரசாயனம் செல்கள் சேதமடைவதைத் தடுக்கிறது.
காளான்களில் புற்றுநோயைத் தடுக்கும் குணம் உள்ளது மட்டுமல்லாது, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் பல வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆண்டி ஆக்சிடன்ட்களும் உள்ளன. உதாரணமாக, சிப்பி காளான்களில் வைட்டமின்கள் பி12 மற்றும் டி நிறைந்துள்ளன.
மருத்துவர்களின் அறிவுரை:
புற்றுநோய் சிகிச்சையில் தற்போது செயல்முறையில் உள்ள கீமோதெரபி அல்லது கதிர்வீச்சு போன்ற சிகிச்சைகள், நோயாளிகளுக்கு கடுமையாக பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றன. இதனால் சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு நோயெதிர்ப்பு அமைப்பு பலவீனமாகிடும். இந்த சூழ்நிலையில் உணவில் காளான்களைச் சேர்ப்பது இயற்கையான பாதுகாப்புகளை வலுப்படுத்த உதவும். இருப்பினும், புற்றுநோய் நோயாளிகள் சிகிச்சையாக காளான்களை மட்டுமே நம்பியிருக்கக் கூடாது. மற்ற சிகிச்சை முறைகளையும் தொடர வேண்டும்.
பிரிட்டன் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் கூற்றுப்படி, காளான்கள் புற்றுநோய் வராமல் தடுக்கும் என்பதற்கும் புற்றுநோயை முழுமையாகக் குணப்படுத்தும் என்பதற்கும் இன்னும் ஆதாரங்கள் வேண்டும் என்கிறது.
புற்றுநோயாளிகள் தங்களின் வழக்கமான மருத்துவச் சிகிச்சையோடு, மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று காளான்களை உணவாகச் சாப்பிடுவது அவர்களின் உடல் நலத்திற்குப் பயனுள்ளதாக இருக்கும்.