
விரதம் இருப்பவர்கள் வெங்காயம் பூண்டு போன்றவற்றை தவிர்ப்பார்கள். சமண சமயத்தை பின்பற்றுபவர்கள் பூண்டு, வெங்காயத்தை அறவே உட்கொள்வதில்லை. சாதாரண மனிதர்கள் வெங்காயம் பூண்டு தினமும் சமையலில் சேர்த்துக் கொள்கிறார்கள். ஆனால் சிலருக்கு வெங்காயம் பூண்டு மிக அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தும். Auto immune blisters எனப்படும் தன் உடல் தாக்க கொப்புளங்கள் உள்ளவர்களுக்கு வெங்காயம் பூண்டு ஒத்துக் கொள்ளாது. அது ஏன் என்பது பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.
தன் உடல் தாக்க கொப்புளங்கள் என்றால் என்ன? (Auto immune blisters)
இது ஒரு அரிதான உடற்கோளாறு ஆகும். ஒரு மனிதரின் உடலில் நோய் எதிர்ப்பு அமைப்பு அதன் சொந்த ஆரோக்கியமான செல்கள் திசுக்கள் அல்லது உறுப்புகளை தவறாக தாக்கும்போது தன்னுடல் தாக்க நோய் ஏற்படுகிறது. ஆட்டோ இம்யூன் புல்லஸ் (Auto Immune Bullous Diseases) கோளாறுகள் உள்ளவர்களுக்கு, உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு , சருமம், வாய், மூக்கு மற்றும் உடலின் பிற பாகங்களுக்குள் பாதிப்புகளை ஏற்படுத்தி கொப்பளங்களை உருவாக்குகின்றன. இது பொதுவாக 60 முதல் 80 வயதுக்கு உட்பட்டவர்களை அதிகமாக பாதிக்கிறது.
பாதிப்புகள்:
ஆட்டோ இம்யூன் பிளிஸ்டர்கள் உள்ளவர்களுக்கு, அது, கைகள், தொடைகள் மற்றும் வயிற்றில் அரிப்புக் கொப்பளங்களை உருவாக்குகிறது. மூக்கு, தொண்டை, பிறப்புறுப்புகளின் உட்புறத்தையும் பாதிக்கிறது. கர்ப்ப காலத்தில் குழந்தை பிறந்த உடனே சில பெண்களை பாதிக்கிறது. இந்தக் குறைபாடு உள்ளவர்கள் வெங்காயம் மற்றும் பூண்டை உண்ணும்போது அவர்களுடைய உடலில் நோயின் பாதிப்பு அதிகரிக்கிறது. இந்தக் கொப்புளங்கள் தொற்று நோய்களை ஏற்படுத்தும். தொண்டை அல்லது நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தி உணவை சாப்பிடவும் விழுங்கவும் சிரமத்தை ஏற்படுத்தும். வாய்ப்பகுதிகளில் ஈறு நோய் மற்றும் பல் இழப்பையும் ஏற்படுத்தும்.
ஆட்டோ இம்யூன் பிளிஸ்டர்கள் உள்ளவர்கள் ஏன் வெங்காயம், பூண்டு சேர்க்கக் கூடாது?
வெங்காயம் மற்றும் பூண்டு இரண்டிலும் அல்லிசின் என்கிற சேர்மங்கள் உள்ளன. அவை மேக்ரோ பேஜ்கள் மற்றும் லிம்போஸைட்டுகள் போன்ற சில செல் வகைகளை தூண்டுகின்றன. இதனால் உடலின் நோய் எதிர்ப்பு செயல்பாட்டு மேம்படுத்தப்படும். தொற்று நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கு உதவும். ஆனால் எதிர்மறையாக தன்னுடல் தாக்கக் கொப்புளங்களை கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கிறது.
பூண்டு அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது சாதாரண மனிதர்களுக்கு நன்மையை ஏற்படுத்தினாலும் தன்னுடல் தாக்க கொப்புளங்கள் நோய்க் குறி கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு மண்டலத்தின் அம்சங்களை தூண்டி ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தும். வெங்காயம் மற்றும் பூண்டில் உள்ள புரதங்கள் உடலில் பல விதமான அலர்ஜியை தோற்றுவிக்கும்.
வெங்காயம் மற்றும் பூண்டில் உள்ள சல்ஃபர் பொதுவாக உடலை அதிகமாக வெப்பமடைய செய்கிறது. கொப்புளங்கள் உள்ளவர்களுக்கு இது, வெப்பத்தை இன்னும் அதிகரிக்கவே செய்யும். பெருங்குடல் அழற்சி, நெஞ்செரிச்சல், குடல் அழற்சி, சரும வெடிப்புகள், சிவத்தல் போன்றவற்றை அதிகமாக ஏற்படுத்தும். மேலும் இவர்கள் பால் பொருள்கள், தக்காளி சார்ந்த உணவுப் பொருட்களை மிக மிக குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும். இது அவர்களின் உடல் நோய் தன்மையை அதிகரிக்கின்றன.
வெங்காயம் மற்றும் பூண்டு வாயில் உள்ள புண்கள் அல்லது கொப்பளங்களை எரிச்சல் அடைய செய்யும். உணர்திறன் வாய்ந்த திசுக்களை எரிச்சல் அடைய செய்யும். பச்சையாக அல்லது சரியாக சமைக்கப்படாத வெங்காயம் மற்றும் பூண்டு சிலருக்கு இரைப்பை குடல் எரிச்சலுக்கு வடிவமைக்கும். வெங்காயம் மற்றும் பூண்டில் டைசல்பைடுகள் போன்ற சேர்மங்கள் உள்ளன. இது உடலில் உள்ள கொப்பளங்களை அதிகரிக்கச் செய்யும். சரும செல்களுக்கு இடையே பிரிவை ஏற்படுத்தும். எனவே தன்னுடல் தாக்கக் கொப்புளங்கள் உள்ளவர்களுக்கு வெங்காயம் பூண்டு ஒத்துக் கொள்ளாது.