

நாய், பூனை, முயல், பறவை போன்ற செல்லப் பிராணிகள் குழந்தைகளுக்கு அன்பு, பொறுப்பு உணர்வு, சமூகத் திறன் ஆகியவற்றை வளர்க்க உதவுகின்றன. ஆனால் அவற்றுடன் நெருக்கமான தொடர்பு இருக்கும்போது சில ஒவ்வாமை, தொற்றுநோய், ஒட்டுண்ணி மற்றும் காயங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே செல்லப்பிராணிகளே கூடாது என்பதல்ல. அவற்றை சரியான முறையில் பராமரிப்பதே பாதுகாப்பான வழி.
செல்லப்பிராணி என்றால் ஆபத்தா?
இல்லை. ஆரோக்கியமாகப் பராமரிக்கப்படும் செல்லப்பிராணியுடன் பாதுகாப்பான முறையில் பழகுவது குழந்தைக்கு பல நன்மைகளைத் தரலாம். ஆனால் வெளிப்புறத்தில் ஆரோக்கியமாகத் தோன்றும் விலங்குகள்கூட சில கிருமிகளைச் சுமந்து இருக்கலாம். குறிப்பாக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், தங்கள் கைகளை வாயில் வைக்கும் பழக்கத்தால் சில தொற்றுகளுக்கு அதிகம் ஆளாகலாம்.
செல்லப்பிராணிகளின் ரோமங்கள் மட்டும்தான் ஒவ்வாமை ஏற்படுத்துமா?
செல்லப்பிராணியால் ஏற்படும் ஒவ்வாமை ரோமத்தால் மட்டும் உருவாகாது. தோல் துகள்கள், உமிழ்நீர், சிறுநீர் போன்றவற்றில் உள்ள புரதங்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். மூக்கடைப்பு, தும்மல், கண்களில் அரிப்பு, தோல் அரிப்பு அல்லது ஆஸ்துமா அறிகுறிகள் அதிகரித்தல் போன்றவை ஏற்படலாம். ஏற்கெனவே ஆஸ்துமா அல்லது ஒவ்வாமை உள்ள குழந்தைகளிடம் பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
கிருமிகள் எப்படிக் குழந்தையை அடைகின்றன?
விலங்கின் மலம், சிறுநீர், உமிழ்நீர், உடல் திரவங்கள், கூண்டு, உணவுப் பாத்திரம் அல்லது பொம்மைகள் மூலமாக சில கிருமிகள் மனிதர்களுக்குப் பரவலாம். வயிற்றுப்போக்கு, தோல் தொற்று மற்றும் சில பூஞ்சைத் தொற்றுகள் இவ்வாறு பரவக்கூடும். விலங்கைத் தொட்ட பிறகு மட்டுமல்லாமல், அதன் பொருட்களைக் கையாண்ட பிறகும் கைகளைச் சோப்பும் தண்ணீரும் கொண்டு கழுவ வேண்டும்.
செல்லப் பிராணிகளிடம் இருக்கும் ஒட்டுண்ணிகள் எப்படி பரவுகிறது?
நாய், பூனை போன்றவற்றில் உள்ள சில குடல் ஒட்டுண்ணிகளின் முட்டைகள் அவற்றின் மலத்தில் இருக்கலாம். அவற்றின் மலம் படிந்த மண் அல்லது விளையாட்டு இடத்துடன் தொடர்பு கொள்ளும் குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. உண்ணிகள், ஈக்கள் போன்ற வெளிப்புற ஒட்டுண்ணிகளும் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் சில நோய்களைப் பரப்பக்கூடும்.
நாய்–பூனை கடித்தால் சாதாரண காயமா?
அப்படிப் பார்க்கக்கூடாது. குழந்தைகள் விலங்குகளால் கடிக்கப்படுவதற்கும் கீறப்படுவதற்கும் அதிகம் ஆளாகிறார்கள். குறிப்பாக முகம் மற்றும் தலைப்பகுதி காயங்களுக்கு குழந்தைகளிடம் கூடுதல் கவனம் தேவை. கடித்த அல்லது கீறிய இடத்தை உடனடியாக சோப்பும் ஓடும் தண்ணீரும் கொண்டு குறைந்தது 15 நிமிடங்கள் நன்றாகக் கழுவி, உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
வெறிநாய் கடியை தடுக்கும் தடுப்பூசிகள் என்ன?
செல்ல நாய்க்கு உரிய காலத்தில் வெறிநாய்த் தடுப்பூசி போடுவது மிக முக்கியம். அதேபோல் குழந்தைகளின் வழக்கமான தடுப்பூசிகள் அனைத்தும் வயதுக்கேற்ப முழுமையாக இருக்க வேண்டும். விலங்கு கடித்தால், 'நாய்க்கு தடுப்பூசி போட்டிருக்கிறது' என்று மட்டும் நினைத்து மனிதருக்கான சிகிச்சையைத் தவிர்க்கக் கூடாது. காயத்தின் தன்மையைப் பொறுத்து மனிதருக்கான வெறிநாய்த் தடுப்பூசியும், சில நேரங்களில் குறிப்பிட்ட பாதுகாப்பு மருந்தும் தேவைப்படலாம்.
செல்லப்பிராணியின் தடுப்பூசி அட்டவணை ஏன் முக்கியம்?
செல்லப்பிராணியை வீட்டிற்கு அழைத்து வந்தவுடன் கால்நடை மருத்துவரிடம் பரிசோதனை செய்ய வேண்டும். அதன் இனத்திற்கும் வயதிற்கும் ஏற்ப தடுப்பூசிகள், குடற்புழு நீக்கம், உண்ணி மற்றும் பூச்சிக் கட்டுப்பாடு ஆகியவை முறையாகப் பின்பற்றப்பட வேண்டும். ஆரோக்கியமான விலங்கு என்பது குழந்தைக்கும் பாதுகாப்பான சூழலின் ஒரு முக்கிய அங்கமாகும்.
வீட்டுப் பராமரிப்பில் இருக்க வேண்டிய விதிகள் என்ன?
செல்லப்பிராணிகளின் உணவுப் பாத்திரம், படுக்கை, கூண்டு, விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அவற்றை சமையலறை அல்லது உணவு தயாரிக்கும் இடத்தில் கொண்டு வரக்கூடாது. நாய் அல்லது பூனையின் மலத்தை உடனடியாக சுகாதார முறையில் அகற்ற வேண்டும். குழந்தைகள் பிராணிகளின் மலம் இருக்கும் பகுதிகளில் விளையாடக் கூடாது. பூனை மணற்பெட்டியையும் முறையாகச் சுத்தம் செய்ய வேண்டும்.
குழந்தைக்கு சொல்லித்தர வேண்டிய 'செல்லப்பிராணி ஒழுக்கம்' என்ன?
விலங்கு சாப்பிடும்போது அதைத் தொந்தரவு செய்யக்கூடாது. தூங்கும் விலங்கைத் திடீரெனத் தொடக்கூடாது. அதன் உணவைப் பிடுங்கக்கூடாது. முகத்திற்கு அருகில் கொண்டு வந்து முத்தமிடுவதையும் தவிர்க்க வேண்டும். எந்த செல்லப்பிராணியாக இருந்தாலும் சிறு குழந்தைகளை அதனுடன் தனியாக விடக் கூடாது, நம் மேற்பார்வை எப்போதும் அவசியம். இது பிராணிகளின் மீதான அன்புக்கும் பாதுகாப்புக்கும் இடையிலான முக்கியமான எல்லை.
செல்லப்பிராணி வளர்ப்பதன் உண்மையான பொறுப்பு என்ன?
செல்லப்பிராணி வாங்குவது குழந்தைக்கு பரிசு கொடுப்பது போல மட்டும் இருக்கக்கூடாது. தினசரி உணவு, தூய்மையான நீர், உடற்பயிற்சி, தடுப்பூசி, நோய் தடுப்பு, கால்நடை மருத்துவப் பரிசோதனை, கழிவுகளை அகற்றுதல் என தொடர்ந்து ஏற்க வேண்டிய ஒரு குடும்ப கூட்டுப் பொறுப்பு அது. குழந்தையின் வயது, வீட்டின் வசதி, குடும்பத்தில் ஒவ்வாமை அல்லது ஆஸ்துமை உள்ளதா என்பதையும் கருத்தில் கொண்டே செல்லப்பிராணியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அன்பும் அறிவும் சேர்ந்தால்தான் செல்லப்பிராணிகளால் உண்மையான நற்பயன்!
குழந்தைக்கும் செல்லப்பிராணிக்கும் இடையிலான உறவைத் தடுக்க வேண்டியதில்லை. தடுப்பூசி, தூய்மை, ஒட்டுண்ணிக் கட்டுப்பாடு, பாதுகாப்பான பழக்கம், கைகளைச் சுத்தமாகக் கழுவுதல், பெரியவர்களின் கண்காணிப்பு - இந்த ஆறு பழக்கங்களே பெரும்பாலான அபாயங்களைக் குறைக்க உதவும்.
ஒரு செல்லப்பிராணியை வளர்ப்பது குழந்தைக்கு ஒரு உயிரை நேசிக்கக் கற்றுக்கொடுப்பது என்றாலும் குழந்தையும் பாதுகாப்பாகப் பழகினால்தான் அந்த அன்பான உறவு இன்னும் அழகாகும்!