
உணவே உயிரைக் காக்கும் அமுதம். ஆனால் சில குழந்தைகளுக்கு அதே உணவு உடலின் நோய் எதிர்ப்புத் திறனைத் தூண்டி, ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும். இதுவே 'உணவு ஒவ்வாமை' எனப்படுகிறது. இது செரிமானக் கோளாறு அல்ல, மாறாக உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பின் அதீத எதிர்வினையாகும். சரியான விழிப்புணர்வும், ஆரம்பத்திலேயே கண்டறிதலும் குழந்தைகளை ஆபத்திலிருந்து பாதுகாக்கும். இது குறித்த முக்கிய ஆலோசனைகளை வழங்குகிறார் மருத்துவர் கே. ராவணன் M.D., குழந்தைகள் நல மருத்துவர்
இது உலகளவில் குழந்தைகளுக்கு அதிகமாக ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுகளில் ஒன்றாகும். ஒவ்வாமை உள்ளவர்கள் மிகச் சிறிய அளவு வேர்க்கடலை சாப்பிட்டால் கூட தோலில் அரிப்பு, தடிப்பு, உதடு வீக்கம், கண் வீக்கம், மூச்சுத்திணறல் போன்ற கடுமையான அறிகுறிகளை ஏற்படுத்தலாம். சில குழந்தைகளுக்கு உயிருக்கு ஆபத்தாக கூட முடியலாம்.
கடல் உணவுகளில் உள்ள சில புரதங்கள் குழந்தைகளில் ஒவ்வாமையைத் தூண்டக்கூடும். இறால், நண்டு, மீன் ஆகியவற்றை சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே தோல் தடிப்பு, வாந்தி, வயிற்றுவலி, தொண்டை இறுக்கம் அல்லது மூச்சுத் திணறல் ஏற்படலாம். இந்த ஒவ்வாமை எந்த வயதிலும் வரலாம்.
குழந்தைப் பருவத்தில் அதிகம் காணப்படும் ஒவ்வாமைகளில் முட்டையும் ஒன்று. குறிப்பாக முட்டையின் வெள்ளைக்கருவில் உள்ள புரதமே காரணமாக இருக்கும். ஆனால் நல் வாய்ப்பாக பல குழந்தைகளுக்கு பள்ளிப் பருவத்தை அடையும் முன்பே இந்த ஒவ்வாமை இயல்பாகக் குறைந்து மறைந்துவிடும்.
பசும்பாலில் உள்ள கேசின் மற்றும் வே புரதங்கள் சில குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும். இது லாக்டோஸ்-சர்க்கரை ஒவ்வாமையிலிருந்து வேறுபட்டது. தோல் அரிப்பு, வாந்தி, வயிற்றுப்போக்கு, மலத்தில் ரத்தம், சளி, மூச்சுத்திணறல் போன்றவை அறிகுறிகளாக இருக்கலாம். மருத்துவரின் ஆலோசனையுடன் பால் பொருட்களை தவிர்ப்பது அவசியம்.
கோதுமை ஒவ்வாமையும், கோதுமையிலுள்ள குளூட்டனால் ஏற்படும் சீலியாக் நோயும் ஒன்றல்ல. சில குழந்தைகளுக்கு கோதுமை புரதத்தால் ஒவ்வாமை ஏற்படலாம். மற்றவர்களுக்கு குளூட்டன் காரணமாக குடல் பாதிப்பு உருவாகலாம். அடிக்கடி வயிற்றுப்போக்கு, உடல் எடை கூடாமை, வயிறு உப்புசம் போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகுவது அவசியம். கோதுமை உணவு சாப்பிட்டால் வருகிறது என்பதை தெளிவாக மருத்துவரிடம் குறிப்பிடவும்.
சிகிச்சை
'வருமுன் காப்போம்' என்பதே சிறப்பு ஒவ்வாமை தரும் உணவைத் தவிர்ப்பதே முக்கிய சிகிச்சையாகும். கடுமையான ஒவ்வாமை உள்ள குழந்தைகள் அவசர சிகிச்சைக்கான மருந்துகளை எப்போதும் மருத்துவரின் ஆலோசனையுடன் வைத்திருக்க வேண்டும்.
முடிவுரை
ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது. ஒரே உணவு அனைவருக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்தாது. பெற்றோர் தாமாக உணவுக் கட்டுப்பாடுகளை விதிக்காமல், குழந்தை நல மருத்துவர் அல்லது ஒவ்வாமை நிபுணரின் ஆலோசனையுடன் மட்டுமே உணவு மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். பள்ளி ஆசிரியர்களுக்கு குழந்தையின் ஒவ்வாமை குறித்து தெரிவிப்பது, அவசரநிலையில் என்ன செய்ய வேண்டும் என்பதை குடும்பத்தினர் அறிந்திருப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குழந்தையின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும்.