புரதம் நம் உடலுக்கு மிகவும் முக்கியமானது. தசைகள், தோல், முடி, நகங்கள் போன்ற உடல் பாகங்களின் வளர்ச்சிக்கு இது மிகவும் அவசியம். ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு போதுமான அளவு புரதத்தை உட்கொள்வது முக்கியமானது. ஆனால், புரதத்தை உணவில் இருந்து பெறுவது நல்லதா? அல்லது புரோட்டின் பவுடர் சாப்பிடுவது நல்லதா? என்ற சந்தேகம் பலருக்கு இருக்கும். அதற்கான பதிலை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
புரதம் என்பது அமினோ அமிலங்கள் எனப்படும் சிறிய மூலக்கூறுகளால் ஆனது. இந்த அமினோ அமிலங்கள் வெவ்வேறு வரிசைகளில் இணைந்து பல்வேறு வகையான புரதங்களை உருவாக்குகின்றன. நம் உடலால் தானாக உற்பத்தி செய்ய முடியாத அமினோ அமிலங்களை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் என்று அழைக்கிறோம். இந்த அத்தியாவசிய அமினோ அமிலங்களை நாம் உணவின் மூலமாகவே பெற வேண்டும்.
புரதத்தின் முக்கியத்துவம்: புரதம், தசை செல்களின் வளர்ச்சி மற்றும் பழுது பார்ப்புக்கு அவசியம். குறிப்பாக, உடற்பயிற்சி செய்பவர்களுக்கு தசை வளர்ச்சியை அதிகரிக்க போதுமான அளவு புரதம் தேவைப்படுகிறது. இது எலும்புகளை வலுப்படுத்தவும், எலும்பு முறிவிலிருந்து பாதுகாக்கவும் உதவும். நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவாக புரதம் மிகவும் முக்கியம். உடலில் உள்ள பல ஹார்மோன்கள் புரதத்தால் ஆனவை. குறிப்பாக, இன்சுலின் போன்ற ஹார்மோன்களின் உற்பத்திக்கு புரதம் அவசியம்.
புரோட்டின் பவுடர்: இது தூள் வடிவில் உள்ள புரதமாகும். இது பொதுவாக உடற்பயிற்சி செய்பவர்கள் மற்றும் தங்கள் புரத உட்கொள்ளலை அதிகரிக்க விரும்புபவர்களால் பயன்படுத்தப்படுகிறது. புரோட்டின் பவுடர் பல்வேறு வகையான மூலங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் பால், சோயா, பட்டாணி, அரிசி போன்ற மூலங்கள் அடங்கும். புரோட்டின் பவுடரைத் தவிர்த்து இறைச்சி, கோழி, மீன், முட்டை, பால், பருப்பு வகைகள், நட்ஸ், விதைகள் போன்ற உணவுகளில் இருந்தும் நமக்குத் தேவையான புரதத்தை நாம் பெற முடியும்.
எதிலிருந்து பெறுவது நல்லது?
நீங்கள் ஏற்கனவே உணவு மூலமாக போதுமான அளவு புரதத்தை உட்கொண்டால், புரோட்டின் பவுடர் சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், நீங்கள் உடற்பயிற்சி செய்கிறீர்கள், உங்கள் புரத உட்கொள்ளலை அதிகரிக்க வேண்டிய தேவை இருந்தால், புரோட்டின் பவுடர் ஒரு சிறந்த வழி. முடிந்தவரை உணவு மூலமாக உங்களது புரதத் தேவையை பூர்த்தி செய்வது ஆரோக்கியமானது. இது மிகவும் விலை மலிவானதும் கூட. ஏனெனில், புரோட்டின் பவுடரின் விலை அதிகமாக இருக்கும்.
எனவே, உங்களுக்கு எது ஏதுவாக இருக்குமோ அந்த வழியில் உங்களது புரதத் தேவையை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.