சிறுதானிய உணவுகளின் மீதான கவனம் தற்போது பலரிடமும் விழிப்புணர்வு பெருகி வருகிறது. இருப்பினும் அது அனைத்து வயதினர் உடல் நலனுக்கும் உகந்ததா என்பதிலும் குழப்பங்கள் இருக்கவே செய்கின்றது. இதை உண்ணும்போது சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்படுகிறது என்பது குறித்தும் முதன் முதலாக சிறுதானிய உணவுகளை சேர்த்துக்கொள்ளும்போது அதை எப்படி சேர்க்கலாம் என்பது குறித்தும் இந்தப் பதிவில் காண்போம்.
தினை புரதம் (Millets) நார்ச்சத்து, வைட்டமின் பி மற்றும் ஏராளமான தாதுக்கள், குறிப்பாக மாங்கனீசு நிறைந்த உயர் ஊட்டச்சத்து கொண்ட உணவாகிறது. கம்பு, சோளம் போன்ற நிறைய சிறுதானியங்கள் கிராமங்களில் விளைகிறது. இவற்றை கிராமங்களில் வாழும் மக்கள் பயன்படுத்தி உடல் ஆரோக்கியம் பெறுகிறார்கள். உரம் அதிகம் இட்டு பயிரிடும் உயர் விளைச்சல் ரகங்களின் ருசியற்ற தன்மையால் இன்று புஞ்சைபயிர் என்பதால் அதிக உரமின்றி பயிராகும் சிறுதானியங்களுக்கு மாறுகின்றனர் நகர மக்கள்.
இத்தனை நன்மைகள் இருந்தாலும் சில எச்சரிக்கைகளும் உண்டு. பொதுவாகவே சிறுதானியம் உட்பட நாம் உண்ணும் அனைத்து உணவுக்கும் தனிப்பட்ட குணம் உண்டு. உதாரணமாக, சிறுதானியம் சோளம் எடுத்துக் கொள்ளலாம். அதிக அளவு சோளம் சாப்பிட்டால் நமக்கு சரும நமைச்சல், அரிப்பு ஏற்படும்.
மேலும், தினை வகைகளை அதிகமாக உட்கொள்வது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். தினை பசையம் இல்லாத உணவு மூலமாக இருந்தாலும், அவற்றில் ‘கோய்ட்ரோஜன்’ (Goitrogen) எனப்படும் பொருட்கள் உள்ளன. கோய்ட்ரோஜன்கள் தைராய்டு ஹார்மோன்கள் உற்பத்தி தடுத்து தைராய்டு செயல்பாட்டை அடக்குகிறது மற்றும் வறண்ட சருமம், பதற்றம், மனச்சோர்வு மற்றும் மெதுவான சிந்தனையை ஏற்படுத்தும் என்கிறது மருத்துவக் குறிப்புகள்.
தினை உணவை முதன் முதலாக உண்ணத் தொடங்குபவர்கள் அதை தனித்தனியாக சமைத்து சாப்பிடவும். யாருக்காவது ஒவ்வாமை ஏற்பட்டால் என்ன வகை சிறு தானியம் என்று கண்டறிய எளிதாக இருக்கும். அனைத்து சிறு தானியங்களும் உடலுக்கு ஒத்துக்கொண்ட பின் கலந்த சிறுதானியங்களை உபயோகிக்கலாம்.
முதன் முதலாக சிறு தானியங்கள் சாப்பிட ஆரம்பிக்கும்போது வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டும் சாப்பிட்டு பின்பு படிப்படியாக நாட்களை அதிகரிக்கலாம். இதனால் உடல் ஒவ்வாமை மற்றும் வேறு பிரச்னைகள் ஏதேனும் எழுகிறதா என்று முன்னெச்சரிக்கையாக இருந்து கொள்ளலாம்.
பொதுவாகவே, சிறுதானியங்களில் மண் நிறைய இருக்கும். எனவே, நன்கு சுத்தம் செய்த பிறகு உபயோகிக்க வேண்டும். கம்பு தானியத்தை அரைத்து உடனடியாக பயன்படுத்தி விட வேண்டும். இல்லை என்றால் காரல் அடித்து விடும். சரும அரிப்பு, ஒவ்வாமை பிரச்னை உள்ளவர்கள் கம்பு, சோளம் ஆகியவற்றை சாப்பிடுவதில் எச்சரிக்கைத் தேவை.
வயதானவர்களுக்கு இதைத் தரும்போது கூடுதலாக நீர் சேர்த்து குழைவாக வேக வைக்க வேண்டும். இதனால் அஜீரணம் போன்ற பிரச்சனைகள் எழாது.
உடல் எடை குறையவும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது எனினும் இவற்றை உணவாக சமைத்து சாப்பிடும்போது அலர்ஜி உள்ளவர்கள் அல்லது உடலில் வேறு ஏதேனும் நாள்பட்ட பாதிப்புகள் உள்ளவர்கள் நிச்சயம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.