

மனிதர்கள் பலருக்கும் ஏற்படும் பிரச்சனை பித்த வெடிப்பு. அது ஏன் ஏற்படுகிறது என்பதற்கான காரணங்களையும், அதற்கான சிறந்த வீட்டு வைத்திய முறைகளையும் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
பித்த வெடிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்
1. நமது மொத்த உடலின் எடையையும் இரண்டு பாதங்கள் தான் தாங்கி தரையில் ஊன்றி நிற்க உதவுகின்றன. அதனால் பாதத்தில் இருக்கும் தோல் பகுதி மற்ற இடங்களை விட 50 மடங்கு கடினமாகவும், கெட்டியாகவும் இருக்கும். மனிதர்களின் உடல் எடை அதிகரிக்கும் போது பாதங்களில் அழுத்தம் அதிகமாகி, தோல் விரிவடைந்து பாதங்களில் பிளவுகள் உருவாகின்றன.
2. பாதத்தின் அடிப்பகுதியில் இயற்கையாக எண்ணெய் சுரப்பிகள் இல்லாததால் வறண்ட தன்மை ஏற்படுகிறது.
3. நீண்ட நேரம் தொடர்ந்து நின்றுகொண்டே வேலை செய்பவர்களுக்கு காலில் பித்த வெடிப்பு ஏற்படுகின்றன.
4. காலணிகள் அணியாமல் வெறும் காலில் நடப்பவர்களுக்கு இயற்கையான பாதுகாப்பு கவசம் நீங்கி பித்த வெடிப்பு ஏற்படும்
5. சிலர் தங்கள் காலுக்குப் பொருத்தமான காலணிகள் அணியாமல் சிறிய சைசிலான செருப்புகள் அணிந்திருப்பார்கள். அதேபோல குதிகால் பகுதியை சரியாகத் தாங்கிப் பிடிக்காத ஓபன் டைப் செருப்புகள் அணிபவருக்கும் பித்தவெடிப்புகள் ஏற்படும்.
பித்த வெடிப்பிற்கான வீட்டு வைத்திய முறைகள்:
நெய்: இரவு தூங்கச் செல்லும் முன்பு கால்களை சோப்புப் போட்டு சுத்தமாகக் கழுவி நன்றாக உலர்ந்ததும் நெய்யை பித்த வெடிப்புகள் மீது தடவி ஐந்து நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின்பு காட்டன் சாக்ஸ் அணிந்து தூங்கலாம். நெய்யில் உள்ள பிட்யூட்டரி ஆசிட் காலுக்கு மென்மைத்தன்மையை தருகிறது. அலர்ஜியைக் குறைக்கவும் செய்கிறது. இரண்டு வாரங்கள் செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
நல்லெண்ணெய் மற்றும் மஞ்சள் தூள்: மூன்று டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயுடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து பேஸ்ட் போல ஆக்கி, பாதங்களில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் ஊறவைத்து பின்பு சோப்பு போட்டுக் கழுவி விடலாம். நல்லெண்ணெயில் உள்ள விட்டமின் ஈ மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் சேதமடைந்த தோலை சரி செய்கிறது. அதேபோல மஞ்சளில் உள்ள குர்க்குமின் தொற்றுக் கிருமிகளை அழிக்கும் சக்தி படைத்தது.
வெண்ணெய்: இரவு தூங்கும் முன் வெண்ணெயை கால் பாதங்களில் தடவி பத்து நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்து பின்பு சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்கலாம் தொடர்ந்து ஏழு நாட்கள் செய்தால் நல்ல பலன்கள் ஏற்படும் வெண்ணெய் பித்த வெடிப்பை நீக்கி பாதத்திற்கு மென்மைத்தன்மையை அளிக்கும்
வேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய்: ஒரு கைப்பிடி அளவு வேப்பிலையை தண்ணீரில் கழுவி விட்டு பேஸ்ட் போல நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து பித்த வெடிப்புகள் மீது தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து லேசான வெதுவெதுப்பான தண்ணீரில் கால்களைக் கழுவலாம். இது ஆழமான வெடிப்புகளை சரி செய்யும் தொற்றுக்கிருமிகளையும் கட்டுப்படுத்த உதவும்.
பப்பாளி: பப்பாளிப் பழத்தை மசித்து அந்தக் கலவையை பாதங்களில் அப்ளை செய்து மசாஜ் செய்ய வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து லேசாகத் தேய்த்துக் கழுவ வேண்டும். பப்பாளியில் உள்ள பப்பாயின் என்கிற பொருள் இறந்த செல்களை நீக்க உதவுகிறது வாரத்திற்கு இரண்டு முறை பப்பாளி தடவலாம்.
வெந்தயம்: இரண்டு டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் அதை அரைத்து பாதங்களில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம். வெந்தயம் பாதங்களை இயற்கையாக மென்மையாக்கும் சக்தி படைத்தது. வாரத்திற்கு இரண்டு முறை செய்யலாம்.
உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள்
உடல் எடைக்கு ஏற்ற அளவு தண்ணீர் குடிப்பது மிக அவசியம். 30 கிலோ எடையுள்ள ஒருவர் ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். ஒமேகா 3 கொழுப்புகள் கொண்ட வால்நட், ஆளி விதை, மீன் போன்றவற்றையும் விட்டமின் ஈ கொண்ட பாதாம், சூரியகாந்தி விதை, கீரைகள் போன்றவற்றையும் துத்தநாக சத்துக் கொண்ட பூசணி விதைகள், சுண்டல் போன்றவற்றையும் விட்டமின் ஏ சத்து நிறைந்த கேரட் சர்க்கரை வள்ளிக் கிழங்கு போன்ற உணவுகளையும் தொடர்ந்து உண்டு வரவேண்டும்.
காலில் ஓபன் டைப் செருப்புகளுக்கு பதிலாக குஷன் வைத்த அல்லது கிளோஸ்டு காலணிகளை அணிய வேண்டும். இது அழுத்தத்தை சமன் செய்து பாதங்களுக்குள் அழுக்குகள் செல்லாமல் தடுக்கும். வெடிப்புகளும் ஏற்படாமல் இருக்கும். தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு கைகளால் பாதங்களை ஐந்து நிமிடம் மசாஜ் செய்வது ரத்த ஓட்டத்தை அதிகரித்து வெடிப்புகளைக் குறைக்கும்.
நீண்ட நேரம் நின்றவாறு வேலை செய்பவர்கள் இரவில் தூங்குவதற்கு முன்பு 15 நிமிடங்கள் கால்களை தலைகாணியில் உயர்த்தி வைக்க வேண்டும்.