

சமீப காலங்களில் நாம் கவனிக்கும் ஒரு கவலைக்குரிய விஷயம், குழந்தைகளிடம் அதிகரித்து வரும் உடல் பருமன். இது ஏதோ அழகியல் சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல, இன்றைய உலகின் மிகப்பெரிய சுகாதார பிரச்சினைகளில் ஒன்றாக இது உருவெடுத்துள்ளது.
முன்பு பெரியவர்களுக்கு மட்டுமே வந்த சர்க்கரை நோய், இதயப் பிரச்சினைகள் எல்லாம் இன்று சிறு வயதிலேயே வரக் காரணம் இந்த 'Childhood Obesity' தான். இதற்கு நம்முடைய மாறிவிட்ட வாழ்க்கை முறை ஒரு முக்கியக் காரணம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
உணவுப் பழக்கம்!
காரணங்களைத் தேடினால், முதல் இடத்தில் நிற்பது நமது உணவுப் பழக்கம்தான். ஆன்லைனில் ஆர்டர் செய்தால், சுடச்சுட வாசனை மிக்க, அதிக கலோரி கொண்ட 'ஜங்க் ஃபுட்' வீட்டு வாசலுக்கே வந்துவிடுகிறது. சர்க்கரை கலந்த குளிர்பானங்கள் சர்வசாதாரணமாகக் கிடைக்கின்றன.
இந்த உணவுகளால் ஏற்படும் தீமைகள் குறித்துப் பெற்றோர்களும், பள்ளிகளும் குழந்தைகளுக்கு நடைமுறையில் புரிய வைக்க வேண்டும். தினமும் காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவதன் அவசியத்தை அவர்களுக்கு விளக்க வேண்டும்.
இந்த உணவு பற்றிய விழிப்புணர்வு வீட்டில் தொடங்கினால்தான், குழந்தைகள் வெளியே செல்லும்போதும் ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுக்கப் பழகுவார்கள்.
அடுத்த பெரிய காரணம், உடல் செயல்பாடு முற்றிலும் குறைந்து போனதுதான். இன்றைய குழந்தைகள் பள்ளியில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்கிறார்கள். மாலையில் வீடு திரும்பியதும், டியூஷன் அல்லது வீட்டுப்பாடம் என மீண்டும் உட்கார்ந்துவிடுகிறார்கள்.
மீதமுள்ள நேரத்தில் அவர்கள் கையில் இருப்பது மொபைல் போன் அல்லது தொலைக்காட்சி ரிமோட். இந்த 'ஸ்க்ரீன் டைம்' அவர்களின் விளையாடும் நேரத்தைத் திருடிக்கொள்கிறது. பள்ளிகளிலும், விளையாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தை ஆசிரியர்கள் பாடத்திட்டத்தை முடிக்கப் பயன்படுத்தக்கூடாது.
தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் ஓடியாடி விளையாடுவது, யோகா, நடனம் போன்றவற்றைச் செய்வது அவர்களைச் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.
நாம் பெரும்பாலும் கண்டுகொள்ளத் தவறும் ஒரு முக்கியக் காரணம் - மன அழுத்தம். "படி, படி" என்று பெற்றோர்களும், ஆசிரியர்களும் கொடுக்கும் அதீத அழுத்தம், குழந்தைகளை மனரீதியாகப் பாதிக்கிறது. இந்த மன அழுத்தத்தைச் சமாளிக்க, அவர்கள் அதிகமாகச் சாப்பிடும் பழக்கத்திற்குத் தள்ளப்படலாம்.
குழந்தைகள் ஏதேனும் ஒரு காரணத்தால் சோகமாகவோ, அழுத்தமாகவோ இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், உடனடியாக அவர்களிடம் பேசிப் பிரச்சினையைக் கண்டறியுங்கள். சுவாரஸ்யமான வழிகளில் பாடம் சொல்லிக் கொடுப்பதும், மன அழுத்தமில்லாத சூழலை வீட்டில் உருவாக்குவதும் அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு, குறிப்பாக உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவும்.