

கடந்த சில வருடங்களாகவே நோய்கள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பெருகி வருகின்றன. அதற்கான காரணங்களில் முக்கியமான இடத்தை பிடிப்பது ரீபைன்ட் ஆயில் தான். எப்பொழுதுமே மரச்செக்கு எண்ணெய் ஆரோக்கியமானது. செக்கு எண்ணெய்கள் எப்போதும் அடர்த்தியாகவும், நிறமாகவும், மணமாகவும் இருக்கும். இதற்குக் காரணம் அந்த எண்ணெய்களில் உள்ள ஊட்டச்சத்துகள் தான்.
உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், நார்சத்துகள், குளோரோபில், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, காப்பர், பாஸ்பரஸ், வைட்டமின் இ போன்ற உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துகள் உள்ளன. இந்த தாதுப்பொருட்கள் மூலம் உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருட்கள் மூட்டுகளுக்கு சென்று எலும்பு தேய்மானத்தை தடுக்கின்றன. உணவுக்கு மட்டுமின்றி குளியலுக்கும், மசாஜ் செய்வதற்கும் கூட நல்லெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. அதனால் தான் நம் முன்னோர்கள் எள் எண்ணெய் என்று சொல்வதற்கு பதிலாக "நல்ல எண்ணெய்" என்று சொன்னார்கள்.
நல்லெண்ணையில் இதயத்துக்கு நன்மை செய்யும் MUFA, PUFA இரண்டு கொழுப்பு அமிலங்கள் சரிசமமாக உள்ளன. இவை இதய பாதுகாப்புக்கு உதவுகின்றன. அத்துடன் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
கடலை எண்ணெயில் MUFA அதிகம். இதய நல்வாழ்வுக்கு வழி செய்யும் எண்ணெய் இது. செக்கில் ஆட்டிய இந்த இரண்டு எண்ணெய்களை தாராளமாக பயன்படுத்தலாம். ரீஃபைண்ட் ஆயில் வேண்டவே வேண்டாம்.
கேரள மக்கள் தேங்காய் எண்ணெயைத் தான் சமையலில் பயன்படுத்துகின்றனர். ஆனால் நாம் சமையலுக்கு நல்ல மணத்தையும், சுவையையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும் தேங்காய் எண்ணெயை விட்டு ரீஃபைண்ட் எண்ணெயை பயன்படுத்துகிறோம். தேங்காய் எண்ணெய் என்றால் அதை தலைக்கு தேய்க்க மட்டும் தான் என்று தவறாக புரிந்து கொள்கிறோம்.
உடலுக்கு ஆற்றலை கொடுக்கும், கல்லீரலுக்கு வேலையை குறைக்கும் தேங்காய் எண்ணெயை பிரதானமாக பயன்படுத்தும் கேரள மக்களிடம் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. தேங்காய் எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்துவதால் மாரடைப்புக்கான சாத்தியம் அதிகரிப்பதில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரீஃபைண்ட் ஆயில்:
இன்று நாம் உபயோகிக்கும் கொழுப்பு சத்து இல்லாத ரீஃபைண்ட் ஆயிலில் உயிர்ச்சத்துக்கள் எதுவுமே இல்லை என்பது தான் உண்மை. ஆனால் அவற்றை அனைத்து விதமான சமையல் விருந்துகளுக்கும் பயன்படுத்துகிறோம். சரி ரீஃபைண்ட் ஆயிலை எப்படி தயாரிக்கிறார்கள் என்று பார்ப்போமா?
மில்லில் இருந்து பெறப்பட்ட எண்ணையில் (அ) கச்சா எண்ணெயில் காஸ்டிக் சோடாவை சேர்த்து கொதிக்க வைத்து முதலில் அதிலிருந்து சோப்பு எடுக்கிறார்கள். பிறகு அதிகம் இருக்கும் காஸ்டிக் அமிலத்தை அகற்றி நியூட்ரலைஸ் செய்து அதில் இருக்கும் வாசனையை அறவே நீக்கி விடுகிறார்கள்.
பிறகு அதை சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்சன் மூலம் பிரித்தெடுக்கிறார்கள். திரை மறைவில் நடக்கும் இந்த வேலைகள் எல்லாம் நமக்குத் தெரியாத காரணத்தால் சுத்தம் செய்யப்பட்ட எண்ணெய் என்று நினைத்த ரீஃபைண்ட் ஆயிலை உபயோகித்துக் கொண்டிருக்கிறோம். இதை நேரில் பார்த்தால் நமக்கு சாப்பிடவே பிடிக்காது.
சமையலுக்கு ரீஃபைண்டு ஆயிலைப் பயன்படுத்தும் பொழுது சூடு தாங்காமல் உருக்குலைந்து உடல் ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கும் ஒரு ரசாயன கலவையாக மாறுகிறது.
அறிவியல் முறைப்படி சொல்வதென்றால் இன்று புழக்கத்தில் இருக்கிற எண்ணெய் வகைகளில் சிறந்த சமையல் எண்ணெய் என்று எதையும் கூற முடியாது. அதிகம் சூடுபடுத்தாத, செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய், கடலெண்ணெய் இரண்டையும் வாரம் ஒன்று வீதம் சுழற்சி முறையில் பயன்படுத்துவது தான் சிறந்த வழி. விருப்பமுள்ளவர்கள் தேங்காய் எண்ணெயையும் பயன்படுத்தலாம். சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய், தவிட்டு எண்ணெய், சனோலா எண்ணெய், பாமாயில் போன்றவற்றை தவிர்ப்பது தான் நல்லது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)