

நீண்டகாலமாக உங்களுக்குக் குதிகால் பிரச்னை இருக்கிறதா? அதற்குக் காரணம் என்னவென்று தெரியாமல் குழம்பிப் போய் இருக்கிறீர்களா? இதற்கு மிக முக்கியமான காரணம் உங்கள் வீட்டில் உள்ள தரை (Floor) தான் என்று சொன்னால் நம்புவீர்களா? அதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
நமக்கு ஏற்படும் கால் வலிக்கும், நம் வீட்டில் பயன்படுத்தும் தரைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மனிதகுலத்தின் ஆரம்பக்காலத்தில், பாதத்தின் அமைப்பு கல், முள் மற்றும் கரடுமுரடான பாதைகளில் நடப்பதற்கு ஏற்றவாறே இருந்தது. பிறகு நாகரிக வளர்ச்சி அடைய அடைய, தான் வசிக்கும் வீட்டில் மார்பிள்ஸ் (Marbles), கிரானைட் (Granite) போன்றவற்றைப் பயன்படுத்தித் தரைப்பகுதியை உருவாக்கினான். இத்தகைய தரைப்பகுதிகளில் அதிகமாக நடக்கும்போது நமக்குச் சில ஆரோக்கியப் பிரச்னைகள் உண்டாகின்றன.
இப்போது ஒரு தக்காளியைச் சாதாரண மண்தரையில் போட்டால் அதற்குப் பெரிய சேதம் ஏற்படாது. இதுவே அதே தக்காளியை மார்பிள்ஸ் அல்லது கிரானைட் தரையில் போடும்போது, தரையிலிருந்து வெளிப்படும் முழு அழுத்தமும் தக்காளி மீது திருப்பிச் செலுத்தப்படும். இதனால் தக்காளி சேதமடையும்.
இதைப்போலத்தான், கடினமான தரையில் நாம் நடக்கும்போது நமது பாதங்கள் கொடுக்கும் அழுத்தத்தைத் தரை உள்வாங்காமல், அந்த முழு அழுத்தத்தையும் நம் கால்களுக்கே திருப்பி அனுப்புகிறது. இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
நார்தசை கிழிசல்: நம் உடல் முழுவதையும் தாங்குவது பாதத்தில் 'Arch' போன்று இருக்கும் நார்தசைகள் (Plantar Fascia) தான். நீண்டகாலமாக டைல்ஸ், மார்பிள்ஸ் போன்ற தரைகளில் நடக்கும்போது இந்த நார்தசைகள் சேதமடைந்து கிழிய ஆரம்பிக்கின்றன. இதுவே பாத வெடிப்பு மற்றும் குதிகால் வலிக்கு முக்கியக் காரணமாகிறது.
மூட்டு வலி: இந்தக் குதிகால் வலி நாளடைவில் முட்டி வரை பரவி பாதிப்பை ஏற்படுத்தும்.
இரத்த ஓட்டம் பாதிப்பு: குளிர்காலத்தில் டைல்ஸ் மற்றும் மார்பிள்ஸ் தரைகள் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். அந்தச் சமயத்தில் வெறும் கால்களுடன் நடந்தால், அது இரத்த ஓட்டத்தைக் குறைத்து வலியை அதிகரிக்கும். இதனால் 'வெரிகோஸ் வெயின்' (Varicose Veins) வருவதற்கான வாய்ப்புகளும் உண்டு.
பெண்களுக்கான பாதிப்பு: பெண்கள் அதிக நேரம் சமையலறையில் நின்று வேலை செய்வதால், அவர்களுக்கு முதுகு வலி மற்றும் கழுத்து வலி போன்ற பிரச்னைகள் உண்டாக வாய்ப்புள்ளது.
இதிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ளச் சில எளிய வழிமுறைகள்:
மென்மையான காலணிகள்: வீட்டிற்குள் பயன்படுத்தக்கூடிய மென்மையான காலணிகளை (Soft Indoor Slippers) அணிய வேண்டும். இவை நாம் கொடுக்கும் அழுத்தத்தை உள்வாங்கிக்கொண்டு பாதத்தைப் பாதுகாக்கும்.
மேட் (Mat) பயன்படுத்துதல்: சமையலறையில் வேலை செய்யும்போது ஒரு விரிப்பின் (Mat) மீது நின்று வேலை செய்யலாம்.
ஒத்தடம்: கால் வலி அதிகமாக இருந்தால் ஐஸ் ஒத்தடம் கொடுக்கலாம். அல்லது வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு போட்டு, அதில் கால்களைச் சிறிது நேரம் வைத்திருக்கலாம்.
இத்தகைய எளிய பழக்கவழக்கங்களை மேற்கொள்வதன் மூலம் நம் பாதங்களை நீண்ட நாட்கள் ஆரோக்கியமாகப் பாதுகாக்கலாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)