வெப்ப சீதோஷ்ண நிலை, வெயிலில் அதிக நேரம் இருப்பது, அதிக வியர்வை சிந்த வேலைகளை செய்வது, இறுக்கமான ஆடைகளை அணிவது, காற்றோட்டம் அதிகம் இல்லாத இடத்தில் இருப்பது போன்றவை வியர்க்குரு, வேனல் கட்டிகள், கண் எரிச்சல் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணங்களாகும்.
பொதுவாக, கோடை காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பிரச்சனை பலருக்கும் ஏற்படும். கோடை காலத்தில் ஏற்படும் அவஸ்தைகளில் இருந்து தப்பிக்க பழங்கள் அதிகளவில் உண்ணலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதேபோல், வழக்கமாக தண்ணீர் குடிப்பதைவிட, வெயில் காலத்தில் சற்று அதிகமாக தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
வியர்க்குருவால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் உஷ்ணத்தை தணிக்கும் இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய் மற்றும் கிர்ணிப்பழம் ஆகியவற்றை சாப்பிடலாம். அதேபோல், வியர்க்குருவுக்கு பனை நுங்கு மிக சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.
மஞ்சள், வேப்பிலை, சந்தனம் ஆகிய மூன்றுமே வியர்க்குருவுக்கு சிறந்த கிருமி நாசினியாக செயல்படும். இதை சம அளவில் எடுத்து அரைத்து, வியர்க்குரு இருக்கும் இடங்களில் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை தடவலாம். ஒரு மணி நேரம் ஊறவைத்து பிறகு குளிக்கவும்.
வெயில் கடுமையாக இருக்கும் நேரங்களில் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும், பருத்தியால் செய்யப்பட்ட ஆடைகளை உடுத்துவது சிறப்பாக இருக்கும். வியர்க்குரு ஏற்பட்ட இடத்தில் கற்றாழை சாறு தடவுவதால் நல்ல பலன் கிடைக்கும். வியர்க்குரு இருக்கும் இடங்களின் மேல் ஐஸ் கட்டிகளை வைப்பதால் எரிச்சல், அரிப்பு குறையும்.
நுங்கு கண் திறந்து உள்ளே இருக்கும் நீரை வேர்க்குரு உள்ள இடங்களில் பூசி வந்தால் மறையும்.
திருநீற்றுப்பச்சை இலையை சாறு எடுத்து வேர்க்குரு உள்ள இடங்களில் தடவி வர மறையும்.
பூலாங்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், சந்தனம், வெட்டி வேர், விலாமிச்சி வேர், பாசிப்பயிறு சம அளவு எடுத்து அரைத்து சலித்து தேய்த்து குளித்து வர வேர்க்குரு மறையும்.
கஸ்தூரி மஞ்சள், மிளகு, வேப்பங்கொட்டை, கடுக்காய் தோல், நெல்லி பருப்பு ஆகியவற்றை சமஅளவு எடுத்து பசும்பால் விட்டு அரைத்து கொதிக்க வைத்து ஆறிய பின் உடல் முழுவதும் தேய்த்து குளிர்ந்த நீரில் குளித்து வர வேர்க்குரு மறையும்.
அருகம்புல், மஞ்சள் இரண்டையும் நீர் விட்டு சேர்த்து அரைத்து வேர்க்குரு மீது பற்று போட்டால் அது மறையும்.
வேனல் கட்டிகள் மறைய:
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கரியபோளத்தை வெந்நீரில் குழப்பி வேனல் கட்டிகள் மீது தடவி வர மறையும். வெள்ளிரி பிஞ்சை வேனல் கட்டிகள் மீது தடவி வர கூலாக இருக்கும். சோற்றுக் கற்றாழை ஜெல் அல்லது அதன் சாற்றை வேனல் கட்டிகள் மீது தடவி வர அது மறையும். துளசி இலையை சாறு எடுத்து அதனுடன் ஆமணக்கு எண்ணெய் 10 சொட்டுகள் கலந்து வேனல் கட்டிகள் மீது தடவி வர குணமாகும்.
மஞ்சட்டி வேர் சாறு 1 பங்கு, சோற்றுக்கற்றாழை சாறு 1 பங்கு கலந்து வேனல் கட்டிகள் மீது தடவி வர குணமாகும். குங்கிலியம் எண்ணெய் அல்லது அருகன் தைலம் வேனல் கட்டிகள் மீது தடவி வர குணமாகும்.