

பிளாக் பெர்ரி என்று அழைக்கப்படும் நாவல் பழமானது அதனுடைய தனித்துவமான இனிப்பு மற்றும் புளிப்பு கலந்த சுவையோடு, பலவிதமான உடல் ஆரோக்கிய நன்மைகளை நமக்கு தருகிறது. இதில், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள், தாதுக்கள், பைட்டோகெமிக்கல்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், நாவல் பழம் செரிமானத்திற்கு மிகவும் உதவுகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, உடலுக்கு நீர்ச்சத்தை அளிக்கிறது. இரத்த சர்க்கரை அளவை இயற்கையாகவே சீராக்க உதவக்கூடும் என்பதால், இது ஒரு சிறந்த மருத்துவ குணம் நிறைந்த பழமாகவும் கருதப்படுகிறது.
இத்தனை நன்மைகள் இருந்தபோதிலும், இந்த நாவல் பழத்தை எல்லோருமே சாப்பிடலாமா?? அனைவருக்குமே ஏற்ற பழமா?? அதை பற்றி இப்பதிவில் பார்க்கலாம்..
பல்வேறு விதமான சிறப்பம்சங்களை கொண்ட போதிலும் இந்த நாவல் பழம் ஒரு சிலருக்கு ஏற்ற பழமாக இருப்பதில்லை.
நீரிழிவு நோய்க்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள், சீறுநீரக கற்கள் உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், செரிமானக் கோளாறுகள் மற்றும் ஒவ்வாமை உள்ளவர்கள், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இந்த பழத்தை எச்சரிக்கையுடன் உட்கொள்ள வேண்டும் அல்லது இதை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இதை பற்றி விளக்கமாக பார்க்கலாமா...
1. நீரிழிவு நோய்க்காக மருந்து எடுத்து கொள்பவர்கள்:
ஜாம்போலின் மற்றும் ஜாம்போசின் போன்ற சேர்மங்களின் உதவியால், நாவல் பழம் இரத்த சர்க்கரை அளவை இயற்கையாகவே கட்டுப்படுத்தும். இந்த சேர்மங்கள் மாவுச்சத்து சர்க்கரையாக மாறும் வேகத்தைக் குறைக்கவும், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் உதவுகின்றன. இது நீரிழிவு நோயைக் கையாளும் நபர்களுக்கு நாவல் பழத்தை ஒரு மதிப்புமிக்க பழமாக மாற்றினாலும், நீரிழிவு எதிர்ப்பு மருந்துகளுடன் சேர்த்து இதை உட்கொள்வது, இரத்த சர்க்கரை அளவு மிக அதிகமாகக் குறைவதற்கு வழிவகுக்கும். இது ஹைப்போகிளைசீமியா என்று அழைக்கப்படுகிறது. ஹைப்போகிளைசீமியாவின் அறிகுறிகளில் தலைச்சுற்றல், வியர்வை, குழப்பம், வேகமான இதயத் துடிப்பு மற்றும் மயக்கம் ஆகியவை அடங்கும். ஆகவே நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவை உன்னிப்பாகக் கண்காணித்து, தங்களுடைய உணவில் நாவல் பழத்தை சேர்ப்பதற்கு முன்பு தங்கள் மருத்துவரை அணுகி பிறகு எடுத்து கொள்வது நல்லது.
2. சிறுநீரகக் கற்கள் எளிதில் வரக்கூடிய நபர்கள்:
நாவல் பழத்தில் ஆக்சலேட்டுகள் உள்ளன. இவை இயற்கையாகவே உருவாகும் பொருட்கள். இவை சிறுநீரில் உள்ள கால்சியத்துடன் இணைந்து சிறுநீரகக் கற்களை உருவாக்கக்கூடும். சிறுநீரகக் கற்கள் எளிதில் வரக்கூடியவர்கள் நாவல் பழத்தை உட்கொள்ளும்போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், அதிகமாக உட்கொள்வது உடலில் ஆக்சலேட் செறிவை அதிகரித்து, கல் உருவாகும் அபாயத்தை உயர்த்தக்கூடும். சிறுநீரகக் கற்களுக்கான அறிகுறிகளில் முதுகு அல்லது பக்கவாட்டில் கடுமையான வலி, சிறுநீரில் இரத்தம், குமட்டல் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஆகியவை அடங்கும். எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் உட்கொள்வது அவசியம். மேலும், நாவல் பழத்தை சாப்பிடும் போது நிறைய தண்ணீர் குடித்தால் அபாயங்களைக் குறைக்கலாம்.
3. செரிமானப் பிரச்னைகள் உள்ளவர்கள்:
நாவல் பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது பொதுவாக செரிமானத்தை ஊக்குவிக்கிறது. இருப்பினும், அதிக அளவில் சாப்பிட்டால் ஒரு சிலருக்கு செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம். குறிப்பாக, அதிக நார்ச்சத்து கொண்ட உணவுக்குப் பழக்கமில்லாத செரிமான அமைப்பைக் கொண்டவர்களுக்கு, அதிகப்படியான நார்ச்சத்து வயிற்று உப்புசம், வாயு, மலச்சிக்கல் அல்லது லேசான வயிற்றுப் பிடிப்புகளுக்கு வழி வகுக்கும். ஆகவே, எளிதில் பாதிப்படையக்கூடிய வயிற்றை கொண்டவர்கள் அல்லது எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (IBS) போன்ற ஏற்கனவே செரிமானக் கோளாறுகள் உள்ளவர்கள், நாவல் பழத்தை தொடர்ந்து உட்கொள்வதற்கு முன்பு, சிறிய அளவில் தொடங்கி, உடல் எவ்வாறு ஏற்று கொள்கிறது என்பதை கவனித்து அதற்கேற்றவாறு எடுத்து கொள்வது நல்லது.
4. கர்ப்பிணிப் பெண்கள்:
கர்ப்பிணிப் பெண்கள் நாவல் பழத்தை உட்கொள்வதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இந்தப் பழம் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த சத்துக்கள் கொண்டதாக இருந்தாலும், கர்ப்ப காலத்தில் அதன் விளைவுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்படவில்லை. அதிகப்படியான நாவல் பழத்தை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைப் பாதிக்கலாம் அல்லது கர்ப்பகால நோய்களுக்கு ஏதுவாக இருக்கலாம் என்று சில ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் உணவில் நாவல் பழத்தைச் சேர்ப்பதற்கு முன்பு, மருத்துவரை அணுகுவது நல்லது.
5. ஒவ்வாமை உள்ள நபர்கள்:
ஒரு சிலருக்கு நாவல் பழம் மற்றும் அதன் மரத்தால் ஒவ்வாமை ஏற்படலாம். ஒவ்வாமையின் காரணமாக அரிப்பு, தடிப்புகள் மற்றும் வீக்கம் போன்ற லேசான அறிகுறிகளிலிருந்து, சுவாசிப்பதில் சிரமம், தொண்டை இறுக்கம் போன்ற தீவிர ஒவ்வாமைத் தாக்குதல் உள்ளிட்ட கடுமையான பாதிப்புகள் வரை ஏற்படலாம். ஏற்கனவே, உணவு ஒவ்வாமை இருப்பவர்கள், முதல் முறையாக நாவல் பழத்தை முயற்சி செய்வதற்கு முன்பு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்தப் பழத்தை உணவில் சேர்க்கும் போது, ஏதேனும் பாதகமான எதிர்வினைகள் ஏற்படுகின்றனவா என்பதைக் கூர்ந்து கவனிப்பது மிகவும் அவசியம்.
ஆகவே, உங்களுக்கு ஏற்கனவே உடல்நலக் குறைபாடுகள் எதாவது இருந்தால், நாவல் பழத்தை உண்பதற்கு முன்னால் ஒரு மருத்துவ நிபுணரைக் கலந்தாலோசிப்பது மிகவும் நல்லது.
(ஆங்கில செய்தியை தமிழாக்கம் செய்து தொகுத்து எழுதப் பட்டது)
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.
Reference