நீங்கள் நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்பவரா?அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு தான். அதிகநேரம் உட்கார்ந்து இருப்பதன் விளைவு, உடல் பருமன் தொடங்கி ஸ்ட்ரோக் வரை நம்மை தாக்கும் அபாயம் உள்ளது. 2 மணிநேரத்திற்கு மேல் தொடர்ந்து உட்கார்ந்து இருந்தால் 15 நிமிடமாவது எழுந்து கொஞ்சம் நடக்க வேண்டும். இதை செய்வதால் நோய் அண்டாது, ஆயுளும் கூடும்.
இன்றைய காலகட்டத்தில் பரபரப்பாக மாறிவிட்ட காலச்சூழலில் நம்மில் பெரும்பாலனோர் அலுவலகத்தில் அதுவும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அறைகளில் சுமர் 8 மணிநேரம் அல்லது அதற்கு மேல் உட்கார்ந்து பார்க்கும் வேலையை செய்கிறோம். அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியவுடன் ஓய்வு எடுக்க வேண்டும் என்று எங்காவது சாய்து விடுகிறோம் அல்லது செல்போனில் மூழ்கி விடுகிறோம்.
ஐ.டியில் வேலை பார்க்கும் பலர் வீட்டில் இருந்து வேலை (வொர்க் ஃப்ரம் ஹோம்) என்ற பெயரில் வீட்டில் மற்றும் அலுவலகத்தில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்கிறார்கள். இந்த வேலைகளில் பெரும்பாலானவை 8 முதல் 9 மணிநேர ஷிப்டுகளை அடிப்படையாகக் கொண்டவை. அத்தகைய சூழ்நிலையில் அவர்கள் அனைவரும் 8 முதல் 9 மணி நேரம் தொடர்ந்து உட்கார்ந்து வேலை செய்கிறார்கள்.
இப்படி உட்கார்ந்தே இருப்பதால் அவர்களுக்கு உடல் உழைப்பு என்று எதுவும் இல்லாமல் போய் விட்டது. இன்றைய சூழலில் வேலை செய்பவர்கள் மட்டுமல்ல சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் கையில் செல்போனை வைத்து கொண்டு மணிக்கணக்காக அதில் மூழ்கி விடுகின்றனர். இதனால் சிறு வயதிலேயே உடல் பருமன், சர்க்கரை நோய், மறதி, கவனக்குறைவு, கண் பிரச்சனை போன்ற நோய்கள் வருகின்றன. மேலும் 30 வயதிலேயே பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது.
தற்போதுள்ள காலகட்டத்தில் யாரும் வியர்வை சிந்தும் அளவுக்கு வேலை செய்வது கிடையாது. இப்படி உடல் உழைப்பு இல்லாமல் இருந்தால் பின்னால் வரும் ஆபத்தை பற்றி யாரும் உணர்வதில்லை. உடல் உழைப்பு இல்லாத காரணத்தால் விரைவிலேயே உடல்பருமன் தொடங்கி ஸ்ட்ரோக் வரை பல்வேறு நோய்கள் வாசல்படியில் வந்து காத்து நிற்கும்.
ஒரு நபர் அதிக நேரம் உட்கார்ந்து இருக்கும் நேரம் அதிகரிக்க அதிகரிக்க அவரின் ஆயுட்காலம் குறையும் என்று சொல்கிறது ஆய்வறிக்கை. உங்கள் உடலுக்கு எவ்வளவு உடல் உழைப்பை கொடுக்கிறீர்களே அவ்வளவு ஆரோக்கியம் வந்து சேரும்.
ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுடன் ஒப்பிடும் போது அதே ஒரு மணிநேரம் வேலை எதுவும் செய்யாமல் அங்குமிங்கும் நடந்து கொண்டிருப்பவர்களுக்கு ஆயுட்காலம் அதிகரிக்கும் மற்றும் எந்த நோயும் அண்டாது என ஆய்வில் கண்டுபிடிக்கப்ப்டடுள்ளது.
உட்கார்ந்து தான் வேலை செய்ய வேண்டும் என்ற நிலை இருப்பவர்கள் ஒவ்வொரு 1 மணிநேரத்திற்கு ஒரு முறை எழுந்து சிறிது நடக்கலாம். வெளியில் நின்று இயற்கையை ரசிக்கலாம். இவ்வாறு செய்வதால் உங்கள் மனதிற்கும், உடலுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.
உடற்பயிற்சி செய்ய நேரமே கிடையாது என்பவர்கள் அருகில் இருக்கும் கடைகளுக்கு செல்ல வாகனத்தை பயன்படுத்தாமல் நடந்து சென்று வாங்கலாம். இவ்வாறு செய்வதால் தனியாக உடற்பயிற்சி செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. அலுவலகத்தில் லிப்ட்டை பயன்படுத்தாமல் படிக்கட்டில் ஏறி செல்லலாம். இப்படி சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினால் நம் ஆரோக்கியமும் மேம்படும், ஆயுளும் அதிகரிக்கும். 40 வயதுக்குள் சில கொடிய நோய்கள் நம்மை தாக்காமல் இருக்க சில முயற்சிகளை மேற்கொண்டலே போதுமானது.