

ரூட்கெனால் என்றால் என்ன? பல் உடைந்து ஈறுப் பகுதிக்குள் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது? பல்லுப் போனா ஏன் சொல்லுப் போகுது?
வாசகர்களின் பற்களின் பிரச்னைகள் குறித்த கேள்விகளுக்கு பல் மருத்துவர் டாக்டர் நிர்மலா மாதவன் (Conservative Dental Surgeon and Endodontist) பதில் தருகிறார்.
இரண்டு சொத்தைப்பல் ஒரே இடத்தில் இருந்து எடுத்த பிறகு அதில் ஒரு சிறு துண்டு வராமலே இருக்கிறது. அதை எப்படி நீக்கலாம்? மேலும் பல் வைக்க வேண்டுமென்றால் முதலில் பற்களை கிளீன் பண்ண வேண்டுமா?
- வி. கலைமதி சிவகுரு
பல் எடுத்த பிறகு, மீதப் பகுதி, ஈறு அல்லது எலும்புக்குள் சிக்கி இருந்தால், அதை நீங்கள் வீட்டிலேயே, நீக்க முடியாது. ஒரு எக்ஸ்ரே எடுத்துப் பார்க்க வேண்டும். அதன் நிலையைப் பார்த்து, வாய் வழி முக அறுவை சிகிச்சை (Oral and Maxillofacial Surgery) நிபுணர், அதை வழக்கமான பல் பிடுங்கும் முறையிலோ அல்லது ஒரு சிறிய அறுவை சிகிச்சை (Surjical Extraction) மூலமாகவோ அகற்றுவார்.
புதிய பற்கள் வைப்பதற்கு முன்பற்களை ஸ்கேலிங்/ க்ளீனிங் செய்தல் சிறந்தது. ஆரோக்கியமான ஈறு மற்று சுத்தமான வாயில் புதிய பல்/ செயற்கைப் பல் நீண்ட காலம் நிலையாக நிற்கும்.
உங்கள் சொத்தைப் பல்லைக் காப்பாற்ற முடிந்தால் RCD மற்றும் கேப் அணிவதே முதல் மற்றும் சிறந்த தேர்வாக இருக்கும்.
ஒருவேளை பல் மிகவும் சேதம் அடைந்திருந்தால், அதை மீட்க முடியாத நிலையில் பல்லை அகற்றி பல் செட் அல்லது பிரிட்ஜ் போன்ற சிகிச்சைகளைத் தரலாம்.
Filling the cavity என்பது என்ன? அதற்கு என்ன பொருள் உபயோகப்படுத்தப்படுகிறது?
- வி. நிர்மலா
பற்களில் உள்ள சொத்தையை நீக்கி, அதை அடைப்பதை ஃபில்லிங் என்று சொல்கிறோம். இதற்கு பலவகையான பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலும் நடைமுறையில் உள்ளதவை ...
1. ரெசின் சிமென்ட்: இது பல்லின் இயற்கை நிறத்தில் இருப்பதால் அழகான தோற்றம் தரும். அதிக வலிமையானது.
2. Glass ionomer cement : இது வெள்ளை நிறத்தில் இருக்கும். ஃப்ளூரைட் வெளியிடும் தன்மை கொண்டது. இதனால் மீண்டும் பல் சொத்தை ஏற்படுவது குறையும்.
பற்களில் படியும் மஞ்சள் கறையை எப்படி நீக்குவது? டீ குடிப்பதால் பற்களில் பழுப்பு நிறம் படியுமா ?
- ஆர். நந்தினி
பற்களில் படியும் மஞ்சள் கறையை முதலில் பாலிஷிங் செய்யவேண்டும். பின்னர் பற்களை வெள்ளையாக்குதல் (Teeth Whitening) அல்லது ப்ளீச்சிங் செய்து கறையை நீக்கலாம்.
பற்களின் மேல் ப்ளீச்சிங் ஜெல் பயன்படுத்தும்போது, அந்த ரசாயனப் பொருட்கள், பற்களுக்குள் ஊடுருவி, ஆக்ஸிஜன் ரேடிகல்களை வெளியிடுகின்றன. ஒருவேளை, பற்களின் உட்புற நிற மாற்றம் (Intrinsic Stains) ஆழமாக இருந்தால் ப்ளீச்சிங் செய்வதால் நிறம் முழுவதுமாக மாறாது.
தேநீரில் டேனின்கள் இருக்கிறது. இவற்றால் பற்களில் கறைபடிகிறது. இது பெரும்பாலும் வெளிப்புறக் கறையாகும். தேனீர் குடித்த பிறகு வாய் கொப்பளிக்கவும். தினமும் இருவேளை பல் துலக்கவும். அப்போது கறை படியாது.
பல் வேர் சிகிச்சைக்கு (ரூட் கெனால்) பின் கடினமான பொருள் கடித்தால் பல் உடைந்துவிடுமா? வேர் சிகிச்சையின்போது வலி அதிகம் இருக்குமா? பல் சிகிச்சையில் கேப் அணிவிப்பது ஏன்?
- மாரிமுத்து
ரூட் கெனால் சிகிச்சையின்போது லோகல் அனஸ்தீஷியா கொடுக்கப்படுவதால் பொதுவாக பல்வலி இருக்காது. அதற்கு ஓரிரு நாட்களுக்குப் பிறகு லேசான வலி அல்லது அசௌகரியம் இருக்கலாம். வலி நிவாரணிகள் மருந்துகள் மூலம் சரி செய்யப்படும்.
ரூட் கெனால் சிகிச்சைக்குப் பிறகு பற்களில் கேப் போடுவது அவசியம். இவ்வாறு போடுவதால் பற்கள் நீண்ட காலம் செயல்படும். பல் உடைபடுவதிலிருந்து காப்பாற்றவும், உணவை நன்றாக மென்று உண்ணவும் முடியும்.