

இனிப்பு சாப்பிட்டால், தொண்டை அடைப்பு ஏற்படுவது டான்சில்ஸ் அறிகுறியா?
காதை பட்ஸ் வைத்து சுத்தம் செய்வது சரியா?
வாசகர்களின் சந்தேகங்களுக்கு விடையளிக்கிறார்
டாக்டர் R. நரேந்திரன் (ENT, Head, Neck, and skull base Surgeon, The Base ENT Hospital, Chennai -28)
"காது வலி, தொடர் சளி, தொண்டை எரிச்சல் போன்ற ENT தொடர்பான பிரச்னைகளை அலட்சியப்படுத்தாதீர்கள்!" என்று எச்சரிக்கும் டாக்டர் R. நரேந்திரன் சொல்லும் அறிவுறைகளை பார்ப்போமா அன்பர்களே...
"காதுகளை வீட்டில் அன்றாடம் எப்படி சுத்தம் செய்வது?காதினுள் ஒரு ஜங்கில் சத்தம் கேட்கிறது. அதை நீக்குவது எப்படி? காது கேட்கும் கருவி மாட்டிய பிறகு யாராவது பேசினால் ஒரே இரைச்சலாக உள்ளது" என்கிறார் என் உறவினர். ஏன் டாக்டர் இப்படி? - வி. கலைமதி சிவகுரு
காதுகளை தினம் சுத்தம் செய்யத்தேவையில்லை. காதில் கிர்கிர் என சத்தம் தொடர்ந்து கேட்டால், காதுக்குள் சளி அடைத்துக் கொண்டிருக்கலாம்.
அதற்கு நீராவி பிடித்தல் எனும் Steam inhalation செய்யலாம். அதற்கு பலன் இல்லை என்றால் மருத்துவரை நாட வேண்டும்.
ஹியரிங் எய்ட் என்னும் காது கேட்கும் கருவியில் இரைச்சல் வந்தால், எங்கே அந்த ஹியரிங் எய்ட் வாங்கினோமோ அங்கே சென்று அவர்களை ரீ-புரோகிராம் பண்ணித்தரச் சொல்ல வேண்டும். அவர்கள் துல்லியமாக ட்யூன் செய்து கொடுத்தால், தானே சரியாகி விடும்.
காது கருவி வாங்கினால் முதலில் தொடர்ந்து 3 வாரம் போட வேண்டும். ஆரம்பத்தில் பழகும் வரை அப்படித்தான் இருக்கும். கொஞ்ச நாளில் சரியாகிவிடும்.
காதில் அடிக்கடி அரிப்பு மாதிரி ஊறல் இருப்பதால் பட்ஸில் மருந்தெண்ணெய் தொட்டு போடுவது சரியா? - வி. கலைமதி சிவகுரு
காதில் ஊறல் அரிப்பு இவை பொதுவாக அலர்ஜியினால் வருபவை. Earbuds உபயோகிப்பதைத் தவிர்த்து விடுங்கள் கலைமதி. அது எரிச்சலை அதிகப்படுத்திவிடும்.
கொஞ்சம் தேங்காய் எண்ணையை விரலில் தொட்டு காதினுள் தடவிக்கொள்ளலாம். ஊறல் தொடர்ந்து இருந்தால் மருத்துவரைப் பார்ப்பது அவசியம்.
என் 7 வயது மகனுக்கு அடிக்கடி சளி பிடிக்கிறது. அடினாய்ட் பிரச்னை உள்ளது. எப்போது குணமாகும்? - கே. நாராயணன்
நாராயணன் சார்,
குழந்தைகளுக்கு ஏழு எட்டு வயது வரை அடினாய்ட் காரணமாக சளி பிடிப்பது பரவலாக காணப்படுவது தான்.
அடினாய்ட் அடிக்கடி வருகிறது என்றால், சாக்லேட் மற்றும் குளிரான உணவுப் பொருட்களைத் தரக் கூடாது.
அதே போல் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும் உணவுப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும்.
கைகால்களை சுத்தமாக க்ளீன் செய்து வைத்துக் கொள்ள குழந்தைக்கு பழக்க வேண்டும்.
சளி ஆரம்பிக்கும் போதே அதற்கான மருந்துகளை ENT மருத்துவரின் ஆலோசனையின் படி கொடுக்க வேண்டும்.
தீர்வு கிடைக்க வில்லை என்றால் அடினாய்ட் அறுவை சிகிச்சை தேவையா என்பதை மருத்துவர் முடிவெடுப்பார்.
தொண்டையில் அடிக்கடி முழுங்க முடியாமல் போவதும், இனிப்பு அதிகம் சாப்பிட்டால் சளி பிடிப்பதும் டான்சில்ஸ் அறிகுறியா? (எனது பேத்திக்கு அடிக்கடி வருகிறது, டாக்டரிடம் காட்டியபோது டான்சில்ஸ் இல்லை என கூறுகிறாரே? அவளது வயது 15) - S. மாரிமுத்து
தொண்டை அடைப்பு மற்றும் எரிச்சல் ஏற்படுவதற்கும், சளி பிடிப்பதற்கும் இனிப்பு சாப்பிடுவது காரணமல்ல மாரிமுத்து.
Acid reflex முக்கிய காரணம். அதாவது, வயிற்றில் இருக்கும் அமிலம் மேலே வந்து தொண்டையில் எரிச்சல் உண்டாக்குவது. அதற்கு டான்சில்ஸ் காரணமல்ல. சரியான நேரத்துக்கு உணவு சாப்பிட வேண்டும்.
இனிப்பு, காரம் இவற்றை கொஞ்ச காலம் தவிர்த்தால் தானே குணமாகிவிடும். ஜங்க் உணவுகளைத் தவிர்த்து சரியான சாப்பாடு தூக்கம் இருந்தாலே தொண்டை எரிச்சல் சரியாகிவிடும்.