

பதிமுகம் பட்டை என்பது கேரளாவில் பிரபலமாக பயன்படுத்தப்படும் ஒரு வகை சாயமரத்தின் பட்டையாகும். இது 'சப்பன்வுட்' அல்லது 'இந்திய சிவப்பு மரம்' என்றும் அழைக்கப்படுகிறது. இதைத் தண்ணீரில் கொதிக்க வைத்து, சிவப்பு நிறத்தில் ஒரு ஆரோக்கியமான பானமாக அருந்தப்படுகிறது. பதிமுகத்தில் உள்ள பிரேசிலின் என்ற சேர்மம் சிவப்பு நிறத்தை கொடுக்கிறது. இதன் பட்டையிலிருந்து கிடைக்கும் 'ஜுக்லோன்' என்ற வேதிப்பொருள் கிருமிநாசினியாக செயல்படுகிறது. மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும், தாகத்தை தணிப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆரோக்கிய நன்மைகள்:
ஆயுர்வேதத்தின்படி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
பாக்டீரியா மற்றும் ஒட்டுண்ணிகளுக்கு எதிராக போராட உதவும் ஒவ்வாமை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
இதில் ஏராளமான ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளன. இவை இதய செயல்பாடுகளை மேம்படுத்துகின்றன.
சரும நோய்களை சரி செய்ய உதவும் என்றும் கூறப்படுகிறது. ரத்தத்தில் குளுக்கோஸ் அளவுகளை சீராக்குவதால் சர்க்கரை நோயாளிகள் இந்நீரைப் பருகலாம். நீரிழிவு மற்றும் செரிமான அமைப்பிற்கு நன்மை பயக்கும். வெறும் தண்ணீருக்கு பதிலாக பதிமுகம் பட்டையை சேர்த்து குடிநீர் தயாரிக்கலாம்.
பல் சிதைவுக்கு காரணமான ஸ்ட்ரெப்டோகாக்கஸ் மியூட்டன்ஸ் என்ற பாக்டீரியாவை எதிர்த்து பதிமுக தண்ணீரின் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் போராடுகின்றன.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், கிருமிகளை எதிர்த்து போராடவும் உதவுகிறது. தாகத்தை தணிக்க உதவுகிறது. குறிப்பாக, கோடைக் காலங்களில் தாகத்தை வெகுவாக தணிக்கிறது. சருமப் பிரச்சினைகளுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
நாட்டு மருந்து கடைகளில் பதிமுகம் பட்டை கிடைக்கிறது. ஆங்கிலத்தில் 'Sappanwood' என்றும், மலையாளத்தில் 'சப்பாங்கம்' அல்லது 'பதிமுகம்' என்றும், இந்தியில் 'வகம்' என்றும் அழைக்கப்படுகிறது.
தயாரிக்கும் முறை:
ஒரு பாத்திரத்தில் 2 லிட்டர் தண்ணீரை எடுத்துக் கொண்டு அது சூடானதும், அதில் 1/2 ஸ்பூன் பதிமுகம் பட்டையை சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விடவும். இதனால் நீரின் நிறம் சிவப்பாக மாறும். பிறகு வடிகட்டி சூடாகவோ அல்லது குளிர வைத்தோ இந்த நீரைப் பருகலாம். இவற்றுடன் தனியா விதைகள், இஞ்சி, ஏலக்காய் போன்றவற்றை பொடித்து சேர்த்து குடிக்க சுவையும் அதிகரிக்கும்; மருத்துவ குணமும் நிறைந்திருக்கும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)