'உம்'முனு இருக்காதீங்கப்பா... சிரிச்சா, வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்கலாம்னு ஆராய்ச்சிகள் சொல்லுதப்பா!

smile
Smile laughter and immunity
Published on

வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பது பழமொழி. ஆனால், ஒரு சிறிய புன்னகை அல்லது ஒரு பலத்த சிரிப்பு நம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை உண்மையிலேயே பலப்படுத்துமா?

ஆம், நாம் சிரிக்கும்போதும், புன்னகைக்கும்போதும் நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் ஒரு மருந்தைப் போல செயல்படுகின்றன என்பது பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

1. மன அழுத்த ஹார்மோன்களின் வீழ்ச்சி:

நம் உடல் மன அழுத்தத்திற்கு உள்ளாகும்போது கார்டிசோல் எனும் ஹார்மோன் சுரக்கிறது. இந்த ஹார்மோன் நீண்ட காலம் உடலில் அதிகமாக இருந்தால், அது நோய் எதிர்ப்புச் செல்களை செயலிழக்கச் செய்யும். நாம் சிரிக்கும்போது, மூளைக்கு 'எல்லாம் நலம்' என்ற சிக்னல் செல்கிறது. இதனால் கார்டிசோல் சுரப்பு குறைந்து, நோய் எதிர்ப்பு மண்டலம் மீண்டும் சுறுசுறுப்பாக செயல்படத் தொடங்குகிறது.

2. 'நேச்சுரல் கில்லர்' செல்களின் எழுச்சி:

அறிவியல் ஆய்வுகளின்படி, மகிழ்ச்சியாக இருப்பவர்களின் உடலில் நேச்சுரல் கில்லர் செல்கள் அதிக வீரியத்துடன் செயல்படுகின்றன. இவை உடலில் நுழையும் வைரஸ்களால் பாதிக்கப்பட்ட செல்களைக் கண்டறிந்து அவற்றை அழிக்கின்றன. மேலும், இவை ஆரம்பகால புற்றுநோய் செல்களுக்கு எதிராகவும் போராடும் திறன் கொண்டவை. ஒரு புன்னகை இந்த செல்களின் உற்பத்தியைத் தூண்டுகிறது என்பது உண்மையிலேயே வியக்க வைக்கிறது.

இதையும் படியுங்கள்:
காலையில 'பால் டீ'க்கு பதிலா இதை குடிங்க... அப்புறம் டாக்டர் கிட்டயே போக மாட்டீங்க! 
smile

3. ஆன்டிபாடிகள் அதிகரிப்பு:

நமது மூச்சுக்குழாய் மற்றும் செரிமான மண்டலத்தில் உள்ள சவ்வுப் படலங்களில் இம்யூனோகுளோபுலின் ஏ எனும் ஆன்டிபாடி உள்ளது. இதுதான் சளி, காய்ச்சல் போன்ற கிருமிகள் உடலுக்குள் நுழைவதைத் தடுக்கும் முதல் பாதுகாப்பு அரண். லோமா லிண்டா பல்கலைக்கழகம் (Loma Linda University) நடத்திய ஆய்வில், சிரிப்பு மற்றும் மகிழ்ச்சியான மனநிலை இந்த ஆன்டிபாடிகளின் அளவை கணிசமாக உயர்த்துகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

4. எண்டோர்பின்கள் சுரப்பு:

புன்னகைக்கும்போது மூளையில் எண்டோர்பின்கள் மற்றும் டோபமைன் போன்ற மகிழ்ச்சி ஹார்மோன்கள் சுரக்கின்றன. எண்டோர்பின்கள் இயற்கையான வலி நிவாரணிகள். இவை தசை இறுக்கத்தைக் குறைத்து, உடலைத் தளர்த்துகின்றன. உடல் தளர்வாக இருக்கும்போது, நோய் எதிர்ப்பு மண்டலம் அதிக ஆற்றலுடன் செயல்படும். அதேசமயம், டோபமைன் ஹார்மோன்கள் மனநிலையை மேம்படுத்தி, மனச்சோர்வைத் தடுக்கிறது. மனநலம் சீராக இருந்தால், உடல்நலம் மேம்படும்.

5. ரத்த ஓட்டம் மற்றும் இதய ஆரோக்கியம்:

சிரிப்பு ரத்த நாளங்களின் உட்சுவரை விரிவடையச் செய்கிறது. இதனால் ரத்த ஓட்டம் சீராகி, ஆக்சிஜன் உடல் முழுவதும் தடையின்றி பரவுகிறது. முறையான ரத்த ஓட்டம் இருந்தால் மட்டுமே நோய் எதிர்ப்புச் செல்கள் உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் விரைவாகச் சென்று கிருமிகளை அழிக்க முடியும்.

6. சமூகத் தொடர்பும் நீண்ட ஆயுளும்:

நீங்கள் சிரித்தால் மற்றவர்களும் சிரிப்பார்கள். சமூக ரீதியாக மற்றவர்களுடன் இணைந்து சிரிப்பது தனிமையைக் குறைக்கிறது. தனிமை மற்றும் மனக்கவலை நீங்கும்போது, உடலின் அழற்சி குறைகிறது. இது நீண்ட கால நோய்களான நீரிழிவு மற்றும் இதய நோய்களில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது.

இதையும் படியுங்கள்:
உயிரைக் காக்கும் ஊசிகள்... ஆயுள் காக்கும் மேஜிக் புள்ளிகள்!
smile

சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், நேர்மறை எண்ணங்கள் கொண்டவர்கள் மற்றும் அடிக்கடி புன்னகைப்பவர்கள், எதிர்மறை எண்ணம் கொண்டவர்களை விட வைரஸ் தொற்றுகளால் குறைவாகவே பாதிக்கப்படுகிறார்கள் என்று நிரூபித்துள்ளனர். மேலும், அறுவை சிகிச்சைக்குப் பின் விரைவாகக் குணமடைபவர்களில் பெரும்பாலானோர் மகிழ்ச்சியான மனநிலை கொண்டவர்களாகவே இருக்கிறார்ககளாம்.

புன்னகை என்பது முகத்திற்கு அழகு சேர்ப்பதோடு, அது உங்கள் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. எந்தச் செலவும் இல்லாத, பக்கவிளைவுகள் இல்லாத இந்தச் சிறந்த மருந்தை இன்று முதலே தாராளமாகப் பயன்படுத்தலாமே..!

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com