மனதிற்கும் உடலுக்குமான மர்ம உறவு: மகிழ்ச்சியைத் தேடும் ரகசியம்!

உடற்பயிற்சி எப்படி உங்கள் மூளையை மாற்றி மகிழ்ச்சியைத் தருகிறது? தெரிந்துகொள்ளுங்கள்.
மன மகிழ்ச்சி
மன மகிழ்ச்சிAI Image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

மனதிற்கும் மகிழ்ச்சிக்கும் இடையே மிக ஆழமான உளவியல் தொடர்புள்ளது. உளவியலும் உடற்கல்வியும் இணைந்து உடற்பயிற்சி மற்றும் மனநலனின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றது. முறையான உடற்பயிற்சி மற்றும் மனதை ஒருமுகப்படுத்துதல் ஆகியவை மூளையில் மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்களை சுரக்கச் செய்து, ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் நல்வாழ்வையும் மேம்படுத்தும்.

நேர்மறை உளவியல் (Positive Psychology) கருத்துப்படி, உடற்பயிற்சி மன அழுத்தத்தை குறைப்பதுடன் பதட்டம் மற்றும் மனசோர்வு போன்ற பிரச்சனைகளையும் தீர்க்க உதவும். உடல் இயக்கம் மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடும் பொழுது எண்டோர்பின் (Endorphins) மற்றும் செரோடோனின் (Serotonin) போன்ற ஹார்மோன்கள் சுரக்கின்றன. இவை இயற்கையாகவே மனதை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்றுகின்றன.

உடல் ஆரோக்கியம் மனதின் சுறுசுறுப்பை அதிகரிக்கிறது. இது நேர்மறையான சிந்தனைகளை வளர்க்க உதவுகிறது. இதனால் எந்த ஒரு செயலிலும் போக்கஸ் செய்ய முடிகிறது. அதாவது நினைவாற்றல் மற்றும் கவனம் கூடுகிறது. குழு விளையாட்டுக்கள் மற்றும் உடற்கல்வி செயல்பாடுகள் சமூகப் பிணைப்பை ஏற்படுத்தி, தனிமை உணர்வைப் போக்கி மகிழ்ச்சியைத் தருகின்றன. உடல் மற்றும் மன ஆரோக்கியம் ஒன்றோடொன்று இணைந்தவை. உடற்பயிற்சியும் மகிழ்ச்சியான மனநிலையும் ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை நிச்சயம் உயர்த்துகின்றன.

மன மகிழ்ச்சி
மன மகிழ்ச்சிAI Image

உடற்கல்வி மற்றும் நடத்தை அறிவியல் பேராசிரியரான டாக்டர் யா லியாவோ (Dr. Yu Liao) போன்ற வல்லுநர்களின் ஆய்வுகளின் படி மனித உடற்பயிற்சியும் மன மகிழ்ச்சியும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளன. ஒரு சிறிய நடைபயிற்சி அல்லது உடற்பயிற்சி கூட அன்றைய நாளின் எதிர்மறை எண்ணங்களைப் போக்கி நேர்மறை ஆற்றலை உருவாக்குகிறது. உடலை வருத்திச் செய்யும் செயல்பாடுகள், மூளையில் உள்ள அழுத்த ஹார்மோனான கார்டிசோல் (Cortisol) அளவைக் குறைக்கின்றன.

டாக்டர் யூ லியாவோவின் கருத்துப்படி ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதைத் தவிர்த்து, அதற்கு பதிலாக கொஞ்ச தூரம் சிறிது நடப்பது, வீட்டு வேலைகளைச் செய்வது போன்ற எளிய உடல் அசைவுகளில் ஈடுபட்டவர்கள், அடுத்த நாள் அதிக உற்சாகத்துடனும், அதிக மகிழ்ச்சியுடனும் இருந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்று கூறுகிறார். 

தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது உடல் தகுதியை அதிகரிப்பதுடன் ஒருவருக்கு தன் மீதான நம்பிக்கையையும் சுயமதிப்பையும் கூட்டுகிறது. கவலை மற்றும் எதிர்மறை சிந்தனைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பி, தற்போதைய தருணத்தில் (present moment) வாழ உடல் செயல்பாடுகள் வழிவகுக்கின்றன. 'சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்' என்ற பழமொழிக்கு ஏற்ப ஆரோக்கியமான உடலே மகிழ்ச்சியான மனதிற்கு அடித்தளமாகும். தினசரி உடற்பயிற்சி என்பது வெறும் உடல் நலத்திற்கானதல்ல, அது மன மகிழ்ச்சிக்கான உளவியல் மருந்தாகும்.

மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.

Reference

logo
Kalki Online
kalkionline.com