நீங்கள் தொடர்ந்து சில மணி நேரம் கம்ப்யூட்டர் திரையைப் பார்த்தபடி வேலை செய்கிறீர்களா? அப்படியானால், வேலை முடிந்ததும் உங்கள் கண்கள் சோர்வடைந்து, பார்வை மங்கினாற்போல் உணர்வது சகஜம்தான். மேலும், கண்களைச் சுற்றி லேசான வலி, கண்கள் வறண்டு போய் நீரின்றி எரிச்சலாக உணர்வதும் உண்டு.
இப்படி கண்கள் வறண்டு போவதைத் தடுக்கவும், கண்களின் மொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் வீட்டில் இருந்தபடியே நாம் செய்யக்கூடிய சில எளிய மற்றும் பயனுள்ள மருத்துவக் குறிப்புகளை இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. ரோஸ் வாட்டர்: கண்களை மூடிக்கொண்டு, ரோஸ் வாட்டரில் நனைத்த பஞ்சை இமைகளின் மீது சிறிது நேரம் வைத்து எடுக்க கண் எரிச்சலும், வறட்சியும் விரைவில் நீங்கும்.
2. நெய்: பசு நெய்யில் தேவையான கொழுப்பு அமிலங்களும் கண்களுக்கு ஆரோக்கியம் தரும் ஊட்டச் சத்துக்களும் அதிகம் உள்ளன. தினசரி உணவில் சிறிதளவு நெய் சேர்த்து உண்பது கண்களில் வறட்சித் தன்மையை நீக்கி கண்கள் ஆரோக்கியம் பெற உதவும்.
3. நெல்லிக்காய்: ஆம்லா எனப்படும் நெல்லிக்காயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கண்களின் வறட்சித்தன்மை நீங்கவும் கண்களின் மொத்த ஆரோக்கியம் மேன்மையடையவும் உதவும். நெல்லிக்காயை அப்படியே சாப்பிடலாம் அல்லது சப்ளிமென்ட்டாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
4. ஆலுவேரா ஜெல்: ஆலுவேரா ஜெல் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணம் கொண்டது. இதில் நீர்ச் சத்தும் அதிகம். இந்த ஜெல்லை கண்களைச் சுற்றிலும் தடவி வைக்க வறட்சியுற்ற கண்கள் நீரேற்றம் பெறும்; கண்கள் குளிர்ச்சியடையவும் செய்யும்.
5. டயட் மற்றும் நீர்ச்சத்து: கண்களின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின்கள், மினரல்கள், நீர்ச்சத்து மற்றும் ஊட்டச் சத்துக்கள் நிறைந்த சரிவிகித உணவு உட்கொள்வது அவசியம். உணவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த வால்நட் மற்றும் ஃபிளாக்ஸ் சீட்களை சேர்த்து உண்பதும் சரியான அளவு நீர் அருந்துவதும் நல்ல பலன் அளிக்கும்.
6. திரிபலா பொடி: நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக் காய் ஆகிய மூன்று காய்களை உபயோகித்து ஆயுர்வேத மருத்துவ முறையில் தயாரிக்கப்படுவது திரிபலா பொடி. இந்த பவுடரை பசு நெய்யில் கலந்து சாப்பிட கண் திசுக்கள் மற்றும் நரம்புகள் வலுப்பெறும். மேலும், பார்வைத் திறன் அதிகரிக்கும். திரிபலா பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து பத்து நிமிடம் கொதிக்க வைத்து, குளிர்ந்த பின் அந்த நீரை வடிகட்டி அதில் கண்களைக் கழுவுவதும் கண்கள் ஆரோக்கியம் பெற உதவும். (இதை உபயோகிக்கும் முன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம்.)
7. தரமான தூக்கம்: தினமும் ஆழ்ந்த அமைதியான போதுமான அளவு தூக்கம் பெறுவதும் கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். தூக்கமின்மை கண் வறட்சியை அதிகமாக்கவும், கண் ஏரிச்சலை உண்டாக்கவும் செய்யும்.
8. யோகா பயிற்சி: யோகா முறையில் கண்களுக்கு தினசரி பயிற்சி அளிப்பதும், பிரணாயமா (மூச்சிப் பயிற்சி) செய்வதும் கண்களுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து கண்கள் சோர்வடைவதைத் தடுக்கும். கண்களில் வறட்சியை நீக்கி முழு ஆரோக்கியம் பெற உதவும்.
வேலைக்கிடையே அவ்வப்போது இடைவெளி கொடுத்து கண்களுக்கு அழுத்தம் ஏற்படுவதை குறைக்கலாம். பாதுகாப்பு கண்ணாடி அணிவது, வேலை செய்வதற்கு தேவையான அளவு முறையான வெளிச்சம் கிடைக்கும் இடத்தை தேர்வு செய்வது போன்றவையும் கண் வறட்சி அடையாமல் ஆரோக்கியமுடன் இருக்க உதவும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)