நல்ல நிம்மதியான உறக்கம் என்பது நமது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் மிகவும் முக்கியமானதாகும். இது ஒவ்வொரு நாளும் நம்மை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. இருப்பினும் இந்த காலத்தில் விரைவாக தூங்குவது பல நபர்களுக்கு சவாலானதாக இருக்கலாம். அதுவும் பல மணி நேரம் செல்போனைப் பயன்படுத்துவதால், தூக்கத்தின் தன்மை முற்றிலும் பாதித்துவிட்டது. இந்த பதிவில் 5 நிமிடங்களுக்குள் நல்ல உறக்கத்தைப் பெற பின்பற்ற வேண்டிய நுட்பங்கள் பற்றி பார்க்கலாம்.
நல்ல சூழலை உருவாக்குங்கள்: விரைவாக தூங்குவதற்கு நல்ல சூழலை உருவாக்க வேண்டியது அவசியம். உங்களது பெட்ரூம் குளிர்ச்சியாகவும், இருட்டாகவும், அமைதியாகவும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். உங்களது விருப்பத்திற்கு ஏற்ப வசதியான மெத்தை மற்றும் தலையணைகளைப் பயன்படுத்துங்கள். எந்த மின்னணு சாதனங்களும் இல்லாத அமைதியான சூழலை உருவாக்கவும்.
நிலையான தூக்க முறையைப் பின்பற்றவும்: தினசரி ஒரே நேரத்தில் படுக்கைக்கு சென்று, காலையில் ஒரே நேரத்தில் எழுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இதை வார இறுதி நாட்களிலும் முறையாக பின்பற்ற வேண்டும். இது உங்கள் உடலின் பயாலஜிக்கல் கடிகாரத்தை ஒழுங்குப்படுத்தி இயற்கையான தூக்க விழிப்பு சுழற்சியை ஊக்குவிக்கிறது.
தூக்கத்திற்கு உங்களை தயார்படுத்துங்கள்: தூங்குவதற்கு முன்பாக மனதை அமைதிப்படுத்தி உடலை தூக்கத்திற்கு தயார் படுத்துங்கள். ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள், உடல் அசைவுகள் அல்லது தியானம் போன்றவை மன அழுத்தத்தைக் குறைத்து, விரைவாக தூங்க வழிவகுக்கும்.
எலக்ட்ரானிக் சாதனங்கள் வேண்டாமே: உங்கள் தூக்கத்திற்கு முதல் எதிரியே எலக்ட்ரானிக் சாதனங்கள்தான். அவை உங்களது தூக்க ஹார்மோனை தடுத்து, தூக்கத்தை கெடுத்துவிடும். எலக்ட்ரானிக் கேஜெட் திரைகளில் இருந்து வெளிவரும் ப்ளூ லைட், உங்களது தூக்கத்தில் தலையிடலாம். அதேநேரம் தூங்குவதற்கு முன் காஃபின் மற்றும் நிக்கோட்டின் உள்ள பொருட்களைப் பயன்படுத்தாதீர்கள்.
வாசனைகளைப் பயன்படுத்துங்கள்: நல்ல மென்மையான வாசனைகள் நீங்கள் விரைவாகத் தூங்க உதவும். எனவே லாவண்டர், ஜாஸ்மின் போன்ற உங்களது மன அமைதிக்கு பெரிதும் உதவும் வாசனைப் பொருட்களை அறையில் பயன்படுத்துங்கள். இது உங்கள் தூக்க சூழலை நல்ல நறுமணத்துடன் வைத்திருக்க உதவும்.
கடிகாரத்தை பார்க்க வேண்டாம்: தூக்கம் வரவில்லையே என அதிகமாக கடிகாரத்தை பார்த்துக் கொண்டிருக்காதீர்கள். இது நீங்கள் தூங்குவதை மேலும் கடினமாக்கலாம். உங்களால் தூங்க முடியவில்லை எனில், நேரத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள். அதற்கு பதிலாக தூங்குவதற்கு உங்கள் மனதை அமைதிப்படுத்தும் செயல்களில் ஈடுபடுங்கள். இது நிச்சயம் விரைவான தூக்கத்திற்கு வழிவகுக்கும்.
இதுபோன்ற நுட்பங்களை நீங்கள் பின்பற்றுவதன் மூலம், ஐந்தே நிமிடத்தில் தூங்குவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம். இந்த புதிய பழக்கவழக்கங்களை உடல் ஏற்றுக்கொண்டு சரியாக வேலை செய்ய சில காலம் ஆகலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே பொறுமையாகவும் விடாமுயற்சியுடன் தொடர்ந்து செயல்பட்டால், நிம்மதியான தூக்கத்தை விரைவில் அடையலாம்.