நல்லெண்ணெய் இத்தனை உடல் பிரச்னைக்கெல்லாமா பயன்படுகிறது?
எள் செடியின் அரேபியச் சொல் ‘சிசேம்.’ இதற்கு செல்வம் நிறைந்த குகையின் வாயில் என்று அர்த்தம். நல்லெண்ணெய் சற்று கசப்பும், சிறிது இனிப்பும், காரத் தன்மையும் கொண்டது. எளிதாக சருமத்துக்குள் ஊடுருவக்கூடியது. ஆயுர்வேத மருத்துவத்தில் பல்வேறு நோய்களைப் போக்க நல்லெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. அந்நாளில் பாம்பு கடித்து விட்டால் உடனே நல்லெண்ணெய்தான் தருவார்கள். விஷத்தை முறிக்கும் ஆற்றல் நல்லெண்ணெய்க்கு உண்டு. உடலில் உள்ள நச்சுப் பொருட்களையும் அகற்றும் ஆற்றல் இதற்கு உண்டு.
வைட்டமின் மற்றும் தாது உப்புகள் நல்லெண்ணெயில் உள்ளன. குறிப்பாக, வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளதால் மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆக இது செயல்படுகிறது. இது உடலில் கொழுப்பு சத்தை குறைத்து உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதை குறைக்கிறது. நல்லெண்ணெயில் உள்ள துத்தநாகம், எலும்புகளை பலப்படுத்துகிறது. தாமிரம், கால்சியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகள் உடல் நலத்திற்குப் பயன்படுகிறது. நல்லெண்ணெயில் உள்ள இரும்புச் சத்து இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது.
நல்லெண்ணெய் உடலை உறுதிப்படுத்தும், சிறுநீரைப் பெருக்கும், மலத்தை இளக்கும், கண்ணுக்கு ஒளியைத் தரும், இரத்த விருத்தியை உண்டாக்கும். நல்லெண்ணெய் உடல் உஷ்ணத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த எண்ணெய் நமது வெளிப்புற சருமத்தை பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் துத்தநாகம் நிறைந்துள்ளது. இது நமது சரும ஈரப்பதத்தை தக்கவைத்து மென்மையாக்க உதவுகிறது. சருமம் வயதானதால் ஏற்படும் சுருக்கங்கள், தழும்புகள் போன்றவற்றை நீக்க நல்லெண்ணெய் பெரிதும் உதவுகிறது.
வாரத்திற்கு ஒருமுறையாவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் உடல் சூடு குறையும். தலைமுடி வறட்சி நீங்கும். பொடுகு முற்றிலும் நீங்கும். உடல் வலி நீங்கும், கண்களின் பார்வையை பிரகாசமாக்கும், உடலுக்கும், எலும்புகளுக்கும் வலிமை தரும், நல்ல தூக்கத்தைத் தருகிறது, சளியை நீக்குகிறது, பற்களின் ஆரோக்கியம் காக்கும், நாவின் சுவையின்மையை மாற்றுகிறது. கண் நோய், தலைக் கொதிப்பு, சொரி, சிரங்கு, புண் முதலியவற்றை தணிக்கிறது.
இந்தியாவில் பாரம்பரியமாக கடைபிடிக்கப்படும் நல்லெண்ணெய் குளியல் விஞ்ஞான அடிப்படையிலானது என்கிறார்கள் இந்திய இருதய நோய் ஆராய்ச்சியாளர்கள். முறையாக என்ணெய் தேய்த்துக் குளித்து வந்தால் குடல் பகுதி இரத்தக் குழாய்களில் ‘பாலிபெட்டைப்’ எனும் ரசாயனம் சுரக்கும். இது இரத்தக் குழாய்களின் வழியாக அதிகளவு இரத்தம் பாய்வதற்கு உதவும். இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.
சரும நோய்களை உருவாக்கும் கிருமிகளின் தாக்குதலில் இருந்து எண்ணெய்க் குளியல் பாதுகாக்கிறது. வாதம் மற்றும் இதய நோய்களுக்கும் கூட நன்மை தரக்கூடியது. எண்ணெய் குளியலின்போது உடலில் எண்ணெய்யை பூசி பத்து நிமிடங்கள் உடலின் பகுதிக்கு ஏற்ப , வட்டமாக, மேலும் கீழுமாக எலும்பு வரை செல்லும் வகையில் நாமே தேய்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
நல்லெண்ணெயை தினமும் 2 அல்லது 3 தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். நல்லெண்ணெயை வாயில் ஊற்றி கொப்பளித்து துப்புவதால் அது வாயின் உட்புறத்தில் உள்ள மியுகெல் மெம்ரேன் வழியாக உடம்பில் உள்ள இறந்துபோன செல்களை, அணுக்களை வெளியேற்றுகிறது. இதனால் வாய்ப்புண் ஆறும். ஈறுகள் பலமடையும். இந்த மருத்துவ முறை மூலம் கண் பார்வை தெளிவாகும். எலும்பு வலிகள் குறையும், சளி, இருமல் குணமாகும், இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும், மலச்சிக்கல் தீரும்.
சூரிய ஒளிக்கதிர்களால் ஏற்படும் கொப்புளங்களைப் போக்குவதில் நல்லெண்ணெய் மருந்தாக செயல்படுகிறது. பாக்டீரியா கொல்லி, நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. பாதங்களில் ஏற்படும் பூஞ்சை நோய்களைப் போக்க வெந்நீரில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி பாதத்தைக் கழுவினால் நோய் தீரும்.