இன்றைய நவீன காலத்தில் அநேக இளைஞர்கள் தாடியுடன் (Beard) வலம் வருவது நாம் சாதாரணமாகக் காணும் ஒரு காட்சியாக உள்ளது. காரணம், அவர்களின் சோம்பல்தனமா, சிக்கனமா, நேரமின்மையா என பலவாறு எண்ணத் தோன்றும். ஆனால், மணமேடையில் கூட மணமகன் தாடியுடன் காணப்படுவது, இன்றைய ட்ரெண்டே அதுதான் என்பதை உறுதி செய்கிறது. முந்தைய தலைமுறையில் தாடி வளர்ப்பது காதல் தோல்வியின் அடையாளமாக இருந்தது. இப்போதோ தாடி இருந்தால்தான் காதலுக்கு பச்சைக்கொடி கிடைக்கும் போலிருக்கிறது. அப்படியான தாடியின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு ஆண்கள் உண்ண வேண்டிய ஏழு உணவு வகைகளைப் பார்ப்போம்.
ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த சால்மன் மீன் உண்பது முடி வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் நன்கு உதவி புரியும். அவகோடாவிலிருக்கும் நல்ல கொழுப்புகள் மற்றும் வைட்டமின்கள் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவுகின்றன. முட்டைகளிலிருக்கும் பயோட்டின் என்ற முக்கியம் வாய்ந்த ஊட்டச்சத்தானது முடி வளர்ச்சியை துரிதப்படுத்தக் கூடியது.
ஸ்வீட் பொட்டட்டோவிலிருக்கும் பீட்டா கரோட்டீன் உடலுக்குள் சென்றதும் வைட்டமின் A ஆக மாறி முடி வளரும் தளத்திற்கு ஆரோக்கியம் கொடுக்கிறது. பசலைக் கீரையில் உள்ள இரும்புச் சத்து, வைட்டமின் A, C போன்றவை மயிர்க்கால்களின் நுண்ணறைகளை வளம் பெறச்செய்து முடி ஆரோக்கியமாய் வளர உதவுகின்றன.
ஸ்ட்ராபெரி, ப்ளூ பெரி, க்ரான்பெரி போன்ற பெர்ரி வகைப் பழங்களில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் முடி வளரும் தளத்திற்கு ஆரோக்கியம் அளிக்கின்றன. வால் நட், முந்திரி, பாதாம் போன்ற தாவரக் கொட்டைகள் மற்றும் பூசணி, சியா, ஃபிளாக்ஸ் போன்ற விதைகளிலிருக்கும் நல்ல கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் முடி வளர்ச்சிக்கு நல்ல நன்மை அளிப்பவை.
இளைஞர்களே, மேற்கண்ட உணவுகளை அடிக்கடி உட்கொண்டு அழகிய தாடியுடன் ஆரோக்கிய வாழ்வு பெறுங்கள்.