
உங்களுக்கோ அல்லது உங்களின் குழந்தைக்கோ அடிக்கடி தொற்று நோய் வருகிறதா? அப்ப அது அரிவாள் செல் (sickle cell) நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம். இந்த 8 ஆரம்ப எச்சரிக்கைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
சில பேருக்கு அடிக்கடி உடலில் தொற்று நோய் அதாவது infection வந்து கொண்டே இருக்கும். பொதுவாக இந்த நோயானது மழையில் நனைந்தாலோ அல்லது வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ யாருக்காவது இருந்தாலோ நமக்கும் தொற்றி கொள்ளும். ஆனால், அதுவே அடிக்கடி வந்தால் நிச்சயமாக வேறு எதாவது பெரிய நோயின் அறிகுறியாகக் கூட இருக்கலாம். இந்த கட்டுரையில மஞ்சள் காமாலை முதல் கைகளில் வீக்கம் வரை, அரிவாள் செல் நோயின் ஆரம்ப அறிகுறிகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
அரிவாள் செல் நோய் என்றால் என்ன??
அரிவாள் செல் நோய் என்பது இரத்த சிவப்பணுக்களைப் பாதிக்கும் ஒரு மரபணு பரம்பரை இரத்தக் கோளாறாகும். அரிவாள் செல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும்பாலும் ஹீமோகுளோபின் S ஐக் கொண்ட சிவப்பு இரத்த அணுக்கள் இருக்கும், இது அசாதாரண வகை ஹீமோகுளோபின் ஆகும்.
சில நேரங்களில் இந்த சிவப்பு இரத்த அணுக்கள் அரிவாள் வடிவமாக (பிறை வடிவ) மாறி சிறிய இரத்த நாளங்கள் வழியாகச் செல்வதில் சிரமப்படுகின்றன. அரிவாள் வடிவ செல்களை சிறிய இரத்த நாளங்கள் தடுக்கும்போது, குறைவான இரத்தமே உடலின் அந்தப் பகுதியை அடையும். சாதாரண இரத்த ஓட்டத்தைப் பெறாத திசுக்கள் இறுதியில் சேதமடைகின்றன. இதுவே அரிவாள் செல் நோயின் சிக்கல்களை ஏற்படுத்துகிறது.
இதற்கான முக்கியமான அறிகுறிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
1. வலி நெருக்கடிகள்: இது ஒரு முக்கியமான அறிகுறியாகும். கூர்மையான அல்லது துடிக்கும் வலியானது அவ்வப்போது பொதுவாக மார்பு, முதுகு, கைகள் அல்லது கால்களில் ஏற்படலாம். இது திடீரென வந்து சில மணி நேரங்களுக்கு அல்லது நாட்கள் வரை கூட நீடிக்கலாம்.
2. நாள்பட்ட சோர்வு மற்றும் பலவீனம்: அரிவாள் செல்கள் வேகமாக இறந்து விடுவதாலும், மேலும் அவற்றை விரைவாக மாற்ற முடியாது என்பதாலும், SCD உள்ள பெரும்பாலான மக்கள் ஓரளவு இரத்த சோகையுடன் வாழ்கின்றனர். இதன் விளைவாக அவர்களுக்கு தொடர்ந்து சோர்வோ அல்லது மூச்சுத் திணறலோ இருக்கலாம்.
3. கைகள் மற்றும் கால்களில் வீக்கம்: குறிப்பாக இளம் குழந்தைகளில் பொதுவாகக் காணப்படும் வீக்கமானது அரிவாள் செல்கள் கைகள் அல்லது கால்களுக்கு இரத்த ஓட்டத்தைத் தடுக்கும் போது ஏற்படுகிறது.
4. அடிக்கடி ஏற்படும் தொற்றுகள்: தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும் ஒரு உறுப்பான மண்ணீரலை SCD சேதப்படுத்தும். இதன் விளைவாக, பாதிக்கப் பட்டவர்கள் அதிலும் குறிப்பாக குழந்தைகள் நிமோனியா அல்லது மூளைக்காய்ச்சல் போன்ற நோய்களுக்கு ஆளாக நேரிடும்.
5. தாமதமான வளர்ச்சி மற்றும் மேம்பாடு: பொதுவாக பிறக்கும் போதே SCD ஆல் தாக்கபட்ட குழந்தைகளின் வளர்ச்சி மெதுவாகவே அதாவது தாமதமான வளர்ச்சியாக இருக்கும். பருவமடைதலிலும் தாமதம் ஏற்படலாம். இது பொதுவாக இரத்த சிவப்பணுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களின் பற்றாக்குறையால் ஏற்படுகிறது.
6. கண்கள் அல்லது சருமம் மஞ்சள் நிறமாக மாறுதல் (மஞ்சள் காமாலை): இரத்த சிவப்பணுக்கள் விரைவாக உடைவதால், கல்லீரலில் பிலிரூபின் குவிவதற்கு வழிவகுக்கிறது. இது சருமம் மற்றும் கண்களில் மஞ்சள் நிறத்தை ஏற்படுத்துகிறது.
7. பார்வை பிரச்னைகள்: கண்களில் உள்ள சிறிய இரத்த நாளங்கள் அரிவாள் செல்களால் தடுக்கப்படலாம். இதனால் காலப்போக்கில் பார்வை மாற்றங்கள் அல்லது சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
8. மூச்சுத் திணறல் அல்லது மார்பு வலி: கடுமையான மார்பு வலி அல்லது அவ்வப்போது அதிகமான மூச்சுத் திணறலை உணறலாம். இந்த அறிகுறியானது கடுமையான சிக்கலைக் குறிக்கலாம்.
அரிவாள் செல் நோய் எதனால் ஏற்படுகிறது?
SCD என்பது ஒரு மரபணுவில் உள்ள குறைபாட்டால் ஏற்படும் ஒரு பரம்பரை நோயாகும். ஒவ்வொரு பெற்றோரிடமிருந்தும் 2 மரபணுக்களையும் மரபுரிமையாகப் பெற்றிருந்தால் மட்டுமே பிறக்கும் குழந்தை SCD உடன் பிறக்கும்.
உங்கள் பெற்றோருக்கு scd இருந்தும், உங்களுக்கு ஒரே ஒரு மரபணு மட்டும் இருந்தால் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்பதாக கருதப்படுகிறது. ஆனால், நீங்கள் நோயின் கேரியர். கணவன் மனைவி இரண்டு பேருமே இத்தகைய கேரியர்களாக இருந்து, அவர்களுக்கு குழந்தை இருந்தால், அவர்களின் குழந்தைக்கு SCD ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.
அரிவாள் செல் மரபணுவைக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பெற்றோருக்கும் SCD உள்ள குழந்தை பிறக்கும் வாய்ப்பு 4 இல் 1 ஆகும்.
அரிவாள் செல் நோயின் சாத்தியமான சிக்கல்கள்:
SCD எந்த முக்கிய உறுப்பையும் பாதிக்கலாம். கல்லீரல், இதயம், சிறுநீரகங்கள், பித்தப்பை, கண்கள், எலும்புகள் மற்றும் மூட்டுகள் அனைத்தும் சேதமடையலாம். அரிவாள் செல்களின் அசாதாரண செயல்பாட்டின் காரணமாக அவை சேதமடைகின்றன.
அரிவாள் செல் நோய் உள்ளவர்கள் கடைபிடிக்க வேண்டியவை:
SCD என்பது ஒரு தொடர்ச்சியான (நாள்பட்ட) நிலை. இந்த நோயின் சிக்கல்களை நீங்கள் முழுமையாகத் தடுக்க முடியாமல் போகலாம். ஆனால் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடித்தால் சில சிக்கல்களைக் குறைக்கலாம்.
1. நிறைய பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் புரதம் கொண்ட ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும்
2. போதுமான தூக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.
3. நிறைய திரவங்களை குடிக்க வேண்டும்.
உங்களுக்கோ அல்லது உங்கள் பிள்ளைக்கோ காய்ச்சல் அல்லது பக்கவாதம் உள்ளிட்ட அரிவாள் செல் இரத்த சோகையின் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ நிபுணரின் ஆலோசனையை பெறுவது நல்லது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)