

கத்திரிக்காய் சாப்பிட்டுள்ளோம்; அதென்ன கண்டங்கத்திரி? இதன் மருத்துவ குணங்கள் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.. தூதுவளைக்கு இணையான மருத்துவகுணம் கொண்டதாக இருக்கும் இதைப் பற்றி இங்கு காண்போம்..
கத்திரி வகையில் உயர்ந்த மருத்துவ குணம் நிறைந்தது கண்டங்கத்திரி (Solanum surattense / Solanum xanthocarpum).
காட்டுத்தக்காளி, காட்டுக்கத்திரிக்காய் என்றும் சொல்லப்படுகிறது. இதன் பெயர் காரணம் சிறப்பு. ஆம், கண்டம் என்றால் கழுத்து. கண்டங் (கழுத்து) + கத்திரி; கழுத்து பகுதியில் ஏற்படும் அனைத்து விதமான நோய் பாதிப்புகளையும் கத்தரித்து அதாவது, நீக்கி விடும் என்பதால் இது கண்டங்கத்திரி என பெயர் பெற்றுள்ளது. மேலும், நுரையீரலில் உள்ள நீர் மற்றும் சளியை அகற்றும் பண்பு உண்டு என்பதால் இதற்கு 'கோழை அகற்றி' என்ற பெயரும் உண்டு.
நம் பாரம்பரிய மருத்துவ முறைகளான சித்த, ஆயுர்வேத மற்றும் நாட்டுமருத்துவத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகைச் செடியாக உள்ள கண்டங்கத்திரியின் பயன்கள் ஏராளம்.
கண்டங்கத்திரியின் காய் மற்றும் வேர் சளியை கரைத்து வெளியில் தள்ளும் (Expectorant) தன்மை உடையவை என்பதால் ஆஸ்துமா, இருமல், மூச்சுத்திணறல் போன்ற சுவாச பிரச்னைகளுக்கு மருந்தாகிறது.
தைராய்டு நோயையும் இவை குணமாக்கும் என்கின்றனர். இதன் கசப்பான சுவை பித்தம் மற்றும் கபத்தை சமநிலைப்படுத்தும். ஜீரண பிரச்னைகளான வயிற்றுப்போக்கு, செரிமானக் குறைபாடு, வயிற்றில் காற்று அடைதல் போன்றவற்றை குறைக்க உதவும்.
இது இயற்கையான வலி நிவாரணி (Analgesic) ஆகவும் செயல்பட்டு, காய்ச்சல், உடல் வலி, தலைவலி போன்ற உபாதைகளை நீக்குகிறது. சிறுநீரக கற்கள் தடுக்கும் இயல்பும் இதில் இருப்பதால் சிறுநீர் கழிவை சீராக்கி, சிறுநீரில் எரிச்சல் அல்லது அடைப்பு போன்ற பிரச்னைகளை தணிக்க உதவும்.
இது சரும பிரச்னைகளுக்கு தீர்வைத் தருகிறது. இதன் காயை அல்லது இலைச் சாறை வெளிப்புறமாக தடவுவது, சரும ஒவ்வாமை, புண்கள், சொறி போன்றவற்றில் நிவாரணம் தருகிறது.
கண்டங்கத்திரி உடலில் குளுகோஸ் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக நீரிழிவு மற்றும் உடல் எடை குறைக்க உதவும்.
இதை எப்படி பயன்படுத்தலாம்?
பாரம்பரிய முறைப்படி, உலர்ந்த காய் அல்லது வேரை தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயம் (Decoction) செய்து அருந்தலாம்.
உலர்த்தி பொடி செய்து, தேன் அல்லது வெந்நீருடன் தினமும் ஒரு முறை எடுத்துக்கொள்ளலாம்.
சருமப் பிரச்னை தீர இலைகளை அரைத்து வெளிப்புறமாக தடவலாம்.
ஆனால், இவை அனைத்தையும் தகுந்த மருத்துவ ஆலோசனை இன்றி பயன்படுத்துவது சரியல்ல.
சரி, இதனால் தீமைகள் உள்ளதா?
நிச்சயமாக.. நைட்ரோசமின் மற்றும் சில நச்சு ஆல்கலாய்டுகள் (Solanine) கொண்டிருப்பதால், அதிக அளவில் உட்கொள்வது நச்சுத்தன்மை (Toxicity) ஏற்படுத்தலாம். அளவுக்கு மீறி எடுத்தால் எதுவும் ஆபத்தே. இதனால் வாந்தி, வயிற்று வலி, மயக்கம் போன்றவை தோன்றலாம்.
நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற மருந்துகளுடன் சேர்த்து எடுக்கும் போது அவற்றின் தாக்கத்தை மாற்றக்கூடும் என்பதால் கூடுதல் கவனம் தேவை. குறிப்பாக, சிறுநீரகம் அல்லது கல்லீரல் பிரச்னையுள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே இதை பயன்படுத்த வேண்டும்.
மூலிகை என்றாலும் நன்மைகள் இருக்கும் அளவுக்கு சிறு தீமைகளும் உண்டு என்பதால் எச்சரிக்கை தேவை.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)