
கோடை காலம் வந்து விட்டால் சிலருக்கு வாயில் எப்பொழுதும் புண் இருப்பதை பார்க்கலாம். அதற்கு காரணம் குடலைத் தாக்கும் சூடும், வயிறு சுத்தமாக இல்லாமல் இருப்பதாலும் தான். வயிறு நன்றாக இருந்தால் வாயில் எந்த புண்ணும் இல்லாமல் பளிச்சென்று இருக்கும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல் வாயில் உள்ள புண்ணை வைத்தே வயிறு எந்த அளவுக்கு ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை கண்டுபிடித்து விடலாம். அப்படி வயிற்றில் புண் இருப்பவர்கள் சில கை மருந்துகளை தெரிந்து வைத்து இருப்பது அவசியம். அதற்கான குறிப்புகள் இதோ:
காய்கறி தரும் பலன்:
வயிற்றுப்புண் குணம் பெற பீட்ரூட் சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடித்தால் புண் குணமாகும். வயிற்றுப்புண் இருப்பவர்கள் தினமும் முட்டைக்கோஸையும், கேரட்டையும் வேகவைத்து அதன் சாறைக் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். உருளைக்கிழங்கை பச்சையாக சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் குணமடையும். வயிற்றுப்புண் ,வயிற்று உபாதைகள் இல்லாமல் இருக்க வாழைப்பூவை உணவில் சேர்த்துக் கொண்டு வர வேண்டும்.
மோர் தருமே சுகம்!:
வயிற்றுப் புண்ணை குணமாக்குவதில் தயிர்,மோருக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்று கூறலாம்.
மோரில் கறிவேப்பிலைச் சாறு ஊற்றி சாப்பிட வயிற்றுப் புண் குணமாகும். மேலும் மோரில் வெள்ளைப் பூசணியைச் சிறிது சிறிதாக நறுக்கி போட்டு சீரகத்தூள், வெந்தயத்தூள் போட்டு சாப்பிட புண் ஆறும். குடல் புண் ஆற வெண்பூசணியை தயிர் சேர்த்து சிறிது உப்பு போட்டு சாப்பிட பலன் கிடைக்கும். இதை வாரத்துக்கு மூன்று முறை சாப்பிடலாம். மோரில் வெந்தயத்தை தூள் செய்து கலந்து குடித்து வர வயிற்றுப் புண் ஆறும். வெண்பூசணியை சமையலில் அடிக்கடி சேர்த்து வர வயிற்றுப்புண் குணமாகும். சோற்றுக்கற்றாழையின் சோற்றுப்பகுதியை சீவி எடுத்து கழுவி கூழாக்கி அதை மோருடன் கலந்து குடித்து வர வயிற்றுப்புண் ஆறும்.
பானம் குடிப்பது சுகம் தரும்:
வயிற்றுப்புண் உள்ளவர்கள் வாரம் மூன்று முறை வெறும் வயிற்றில் இளநீர் குடித்து வந்தால் வயிற்று எரிச்சல் போய்விடும்.
வயிற்றுப் புண் குணமாக :
தினமும் ஒரு டம்ளர் திராட்சை பழச்சாறு குடித்து வர நல்ல குணம் தெரியும். சுக்கு, மிளகு, திப்பிலியை கரகரப்பாக அரைத்து தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாவதை நன்கு உணர முடியும்.
இதர குறிப்புகள்:
சூடான சாதத்தில் நெய்யுடன் மிளகுத்தூள் கலந்த சாப்பிட வயிற்றுப்புண் ஆறும். தேனை வாயில் அடக்கி சிறிது சிறிதாக உமிழ் நீரை விழுங்க வயிற்றுப்புண் குணமாகும்.
தவிர்க்க வேண்டியவை:
பச்சை மிளகாய், பிஸ்கட் இவை இரண்டும் குடலில் இருக்கும் புண்களை பெரிதாக்கி விடும் என்பதால் தவிர்ப்பது நலம்.