பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சளித்தொல்லை காரணமாக பலருக்கும் தொண்டைக் கட்டிக் கொண்டு கரகரப்பும் வலியும் ஏற்படும். அருந்தும் தண்ணீர் மாறுவது, மழையில் நனைந்துகொண்டே துவட்டாமல் இருப்பதால் சளி மற்றும் இருமலுக்கு வழிவகுத்து தொண்டை கரகரப்பு, வலி போன்றவை ஏற்படும். இதை தவிர்க்க சில எளிய வீட்டுப் பொருட்கள் கொண்டு சரிசெய்துகொள்ள முடியும்.
வசம்பு துண்டு ஒன்றை வாயில் அடக்கிக்கொண்டால் தொண்டை கரகரப்பு, தொண்டைக்கட்டு குணமாகும்.
மிளகு 2 டீஸ்பூன் கொரகொரப்பாகப் பொடித்து தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து ஆறியதும் தேன் கலந்து குடிக்க, தொண்டைக்கு இதமாக இருக்கும்.
சிறிதளவு இஞ்சி சாறை வெதுவெதுப்பான நீரில் கலந்து பருக நல்ல பலன் கிடைக்கும்.
மாசிக்காய் மற்றும் வசம்பை அரைத்து தேங்காய் பாலில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி, குரல் மேம்படும்.
இஞ்சியுடன் நான்கு கிராம்பை அரைத்து அந்த விழுதை லேசாக சூடாக்கி தொண்டை மீது படுமாறு தடவி வர தொண்டைக்கட்டு, கரகரப்பு குணமாகும்.
அதிமதுரம், சுக்கு, சித்தரத்தை ஆகியவற்றின் பொடியை பாலில் கலந்து, பின்னர் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து காய்ச்சி சற்று ஆறியதும் பனங்கற்கண்டு சேர்த்து மிதமான சூட்டில் அருந்த, தொண்டை கரகரப்பு குணமாகும்.
முல்லைப்பூ செடியின் இலையை நெய்யில் வதக்கி, வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம்.
முருங்கை வேர்ப்பட்டை அல்லது எலுமிச்சை சாற்றை வெந்நீரில் உப்பு சேர்த்து கலந்து தொண்டையில் படும்படி நன்றாக கொப்பளிக்க, நல்ல நிவாரணம் தரும்.
மாதுளம் பூவை இடித்து சாறு பிழிந்து காய்ச்சி, வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட்டு வர நல்ல குணம் கிடைக்கும்.
கொதிக்க வைத்த நீரில் வேப்பம்பூவைப் போட்டு அதிலிருந்து வெளிவரும் ஆவியை வாய் வழியாக சற்று நேரம் உள்ளிழுக்க தொண்டை கரகரப்பு, தொண்டையில் ஏற்படும் புண்ணை ஆற்றும்.
ஏலக்காய் 4, ஒரு துண்டு சுக்கு ஆகியவற்றை அரைத்து, நீர் விட்டு கொதிக்க வைத்து பருக வறட்டு இருமல், தொண்டை வலி ஆகியவை தீரும்.
ஏலக்காய்த் தூளை அடித்தொண்டை அழற்சி, தொண்டைக்கட்டு, உள்நாக்கில் வலி, குளிர் காய்ச்சலால் ஏற்படும் தொண்டைக்கட்டு ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன்படுத்தலாம்.
அன்னாசிப் பழச் சாறுடன் மிளகுத் தூள், தேன் கலந்து சாப்பிட்டால் இருமல், தொண்டை கரகரப்பு, சளித்தொல்லை சட்டென விலகும்.
சுண்ணாம்பை கொஞ்சமாக தொண்டையில் தடவி பின் கழுவி விட தொண்டை கரகரப்பு நீங்கி சுகம் தரும்.
மழை மற்றும் பனிக்காலத்தில் சுட வைத்து ஆறிய குடிநீரையே குடிக்க தொண்டைக்கு பிரச்னைகளை வராது.