தூக்கம் - தூக்கமின்மை... தாக்கம் என்ன? திடுக்கிடும் புள்ளிவிபரங்கள்!

Sleep - Insomnia
Sleep - Insomnia

நமது உடல் மற்றும் மன நலத்தைப் பராமரிப்பதில் தூக்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது. உணவு அல்லது தண்ணீரைப் போலவே மனித உயிர் வாழ்வுக்கு தூக்கமும் இன்றியமையாத ஒன்று என்பதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.

தூக்கம் உடலின் அனைத்துச் செயல்பாடுகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்த விளைவு நேர்மறையானதா அல்லது எதிர்மறையானதா? என்பது தூக்கத்தின் நலம், அதாவது காலம், தரம் மற்றும் ஓய்வின் நேரம் போன்றவற்றைப் பொறுத்தது.

அமெரிக்கத் தூக்க மருந்துக் கழகம் மற்றும் தூக்க ஆய்வுச் சங்கம் (The American Academy of Sleep Medicine, and the Sleep Research Society) வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி கீழ்க்காணும் வயதுக்கேற்ற தூக்கம் இருக்க வேண்டும்.

 • கைக்குழந்தைகள் (4 முதல் 12 மாதங்கள்) - 24 மணி நேரத்திற்கு 12 முதல் 16 மணி நேரம் (சிறு தூக்கம் உட்பட)

 • குழந்தைகள் (1 முதல் 2 ஆண்டுகள்) - 24 மணி நேரத்திற்கு 11 முதல் 14 மணி நேரம் (சிறு தூக்கம் உட்பட)

 • முன்பள்ளிக் குழந்தைகள் (3 முதல் 5 ஆண்டுகள்) - 24 மணி நேரத்திற்கு 10 முதல் 13 மணி நேரம் (சிறு தூக்கம் உட்பட)

 • பள்ளி வயதுக் குழந்தைகள் (6 முதல் 12 வயது) - 24 மணி நேரத்திற்கு 9 முதல் 12 மணி நேரம்

 • பதின்ம வயதினர் (13 முதல் 18 வயது) - 24 மணி நேரத்திற்கு 8 முதல் 10 மணி நேரம்

 • பெரியவர்கள் (18 முதல் 60+ வயது) - ஒரு இரவுக்கு 7 அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் என்று வயதுக்கேற்ற தூக்கம் உறுதியாக இருக்க வேண்டும்.

அமெரிக்காவிலிருக்கும் தேசியத் தூக்கம் அறக்கட்டளை (National Sleep Foundation's) எனும் அமைப்பு 2023 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் எடுத்த வாக்கெடுப்பின் வழியிலான புள்ளி விவரங்களின்படி,

 • வார நாட்களில் இரவு 7 மணி நேரத்துக்கும் குறைவாகத் தூக்கம் கொள்ளும் பெரியவர்கள் (18 முதல் 60+ வயது) மிதமானது முதல் கடுமையான மனச்சோர்வு அறிகுறிகளை அனுபவிக்கும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம் இருக்கிறது.

 • ஒரு இரவில் 7 மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்கும் 5 பெரியவர்களில் ஒருவர் (19%) மனச்சோர்வடையும் வாய்ப்புகள் இருக்கின்றன.

 • தூக்கத்தில் திருப்தியடையாத 10 பேரில் 7 பேர் (65%) இலேசான அல்லது அதிக அளவு மனச்சோர்வு அறிகுறிகளை அடைந்திருக்கின்றனர், 31% பேர் மிதமான, கடுமையான அறிகுறிகளை அடைந்ததாகத் தெரிவித்திருக்கின்றனர்.

 • தூக்கத்தில் திருப்தியடையாத வயது வந்தவர்களில் கால் பகுதியினர் (25%) மனச்சோர்வடைவதற்கான வாய்ப்பைப் பெற்றனர்.

 • வாரத்தில் இரண்டு இரவுகளில் தூங்குவதில் சிரமம் உள்ள 5 பேரில் 2 பேர் (38%) இலேசான அல்லது அதிக அளவு மனச்சோர்வு அறிகுறிகளைப் பெற்றிருக்கின்றனர், 10% பேர் தங்கள் அறிகுறிகள் மிதமானது முதல் கடுமையானது என்று கூறியுள்ளனர்.

 • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இரவுகள் தூங்குவதில் சிரமத்தை அனுபவிக்கும் சுமார் 20% நபர்கள் மனச்சோர்வை அடைந்திருக்கின்றனர்.

இந்தப் புள்ளிவிவரத்தில், பாலினத்திற்கேற்ற சில வேறுபாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன.

 • ஆண்களை விடப் பெண்களுக்கு அவர்களின் வாழ்நாள் முழுவதும் தூக்கமின்மை ஏற்படும் அபாயம் 40% அதிகம்.

 • மாதவிடாய் நிறுத்தத்தின் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாக, தூக்கத்தின் தரம் பற்றிய குறைபாடுகள் 33% முதல் 51% பெண்களிடம் இருக்கின்றன.

 • உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (Food and Drug Administration) கூற்றுப்படி, பொதுவாக தூக்கத்திற்குப் பரிந்துரைக்கப்படும் மருந்துகளின் அளவில் பாதியை மட்டுமே பெண்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
இரவில் தூக்கம் வரவில்லையா? 5 நிமிடத்தில் தூங்குவதற்கான செம்ம டிப்ஸ்! 
Sleep - Insomnia

தூக்கமின்மை குறித்து, கர்ப்பிணிப் பெண்களிடம் நடத்தப் பெற்ற ஆய்வின்படி,

 • கருவுற்றப் பெண்களில் 71% பேர் கருவுற்ற காலத்தில் தங்கள் தூக்கப் பழக்கம் மாறியதாகத் தெரிவித்திருக்கின்றனர்.

 • கருவுற்றப் பெண்களில் 10.1% பேர்களுக்குத் தூக்கத்தில் குறட்டை விடும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

 • கருவுற்றப் பெண்களில் 61.7% வழக்கமாகத் தூங்கும் நேரத்திற்கு முன்பாகவேத் தூங்கத் தொடங்கியிருக்கின்றனர்.

 • கருவுற்ற பெண்களில் 51.2% தூக்கமின்மை அறிகுறிகளை அடைந்திருக்கின்றனர்.

 • தூக்கமின்மை நடவடிக்கைகளுக்கு அடிக்கடி கழிப்பறைக்குச் செல்தல் (39.3%), வசதியான நிலையைக் கண்டறிய இயலாமை (30.7%), நடந்து கொண்டிருத்தல் (13.7%) ஆகியவைகளேக் காரணமென்று தெரிவித்திருக்கின்றனர்.

தூக்கம் வராத பலர், தூக்கத்திற்கான மருந்து மாத்திரைகளைப் பயன்படுத்துகின்றனர். இது தொடர்ச்சியாக இருக்கும் நிலையில், கூடுதல் கவலைகளுக்கு வழிவகுக்கும் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 • 10 பெரியவர்களில் 8 பேர் (8.2%) வாரத்திற்கு 4 அல்லது அதற்கு மேல் தூங்குவதற்கு உதவும் மருந்துகளை எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்திருக்கின்றனர்.

 • ஒரு வாரத்தில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட முறை தூக்கத்திற்காக மருந்து எடுத்துக் கொள்ளும் ஆண்கள் மற்றும் பெண்களின் சதவீதம் வயதுக்கு ஏற்ப அதிகரித்துள்ளது.

 • தூக்க உதவி மருந்துகளைப் பயன்படுத்துபவர்களில் 80% பேர்கள் தூக்கமின்மை, சோர்வு, மந்தம், கவனம் செலுத்துவதில் சிரமம் மற்றும் நினைவில் கொள்வதில் சிரமம் மற்றும் அதிகமாக தூங்குவது உள்ளிட்ட சில எஞ்சிய விளைவுகளைச் சந்திக்கின்றனர்.

 • கவலை, மனச்சோர்வு, மனச்சிதைவு நோய் (Schizophrenia) அல்லது இளைய வாதம் (Fibromyalgia) உள்ள நபர்கள் எஞ்சிய அறிகுறிகளை அனுபவிக்கும் வாய்ப்புகள் அதிகம்.

 • இதயச் செயலிழப்பு மற்றும் மனநலக் கோளாறுகள் போன்ற ஒரே சமயத்தில் இரு நோய்கள் (Comorbid) கொண்ட நிலைமைகள் தூக்க மருந்துகளின் பக்க விளைவுகளால் மோசமடையலாம் அல்லது அதிகரிக்கலாம் என்று தூக்க மருந்துகளைத் தேடுபவர்களுக்கு சில எச்சரிக்கைகளும் விடப்பட்டிருக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com