சிரித்து வாழ வேண்டும்!

உலக சிரிப்பு தினம் (5.5.2024)
Grandma's smile
Grandma's smile

சிரிப்பது மகிழ்ச்சி தரும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அது நமது அன்றாட ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்துவதில் எவ்வளவு மதிப்புமிக்கதாக இருக்கும் என்பதை சிலர் மட்டுமே உணர்கின்றனர். சிரிப்பால் எதையும் குணப்படுத்தவோ தீர்க்கவோ முடியாது, ஆனால், அது எல்லாவற்றையும் குணப்படுத்தவும் உதவும். அதற்காகத்தான் அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் முதல் ஞாயிறு உலக சிரிப்பு தினம் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

அதீத மன அழுத்தம், பதற்றம் போன்றவற்றால் நமது உடல் நலம் பாதிக்கப்பட்டால், நிதானமாகச் சிரித்தால் போதும். உங்கள் நோய்கள் அனைத்தும் குணமாகும். நாம் ஒவ்வொருவரும் உயிர் வாழ ஆக்ஸிஜன் இன்றியமையாதது. நாம் சிரிக்கும்போது அந்த ஆக்ஸிஜன் போதுமான அளவு நம் உடலுக்குள் செல்கிறது. இதனால் உடலில் பல நன்மைகள் உண்டாகும். மகிழ்ச்சியை மட்டுமல்ல, ஆரோக்கியத்தையும் தருவது சிரிப்பு.

மாரடைப்பு போன்ற இதய நோய்களை தள்ளிப்போடும் விலையில்லா மருந்து வாய்விட்டு சிரிக்கும் சிரிப்புதான். இதய துடிப்பை சாதாரண நிலைக்கு கொண்டு வர வயிறு குலுங்க சிரித்தாலே போதும் என்கிறார்கள். உங்கள் நாள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், தினமும் 15 முதல் 20 நிமிடங்கள் புன்னகைக்க மறக்காதீர்கள்.

வாய் விட்டு சிரிக்கும்போது அது உங்கள் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் சுரப்பை குறைக்கிறது. எபிநெஃப்ரின், நார் எபிநெஃப்ரின், கார்டிசோல் ஆகியவை மன அழுத்தத்தை உண்டாக்கும் ஹார்மோன்கள். அந்த ஹார்மோன்கள் சுரப்பை சிரிப்பு குறைக்கிறது. இதனால் நமது மன அழுத்தம் குறைந்து மன அழுத்தத்திற்கு சிறந்த மருந்தாகிறது.

நாம் ஒவ்வொரு முறை சிரிக்கும்போதும் எண்டோர்பின் என்ற ஹார்மோன் வெளியாகும். இது மன அழுத்தத்தைக் குறைக்கும் சக்தி கொண்டது. இந்த ஹார்மோனின் வெளியீட்டால் உங்கள் மனது ரிலாக்ஸாகி, மனதில் ஒரு நல்ல உணர்வு எழுகிறது. நீங்கள் சிரிக்கும்போது மூளையில் அதிக எண்டோர்பின் சுரப்பதால் உடலுக்கு சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்கிறது. சிரிக்கும்போது ஜீரண சக்திக்கு உதவும் நீர் நமது உடலில் அதிகம் சுரக்கிறது. இதனால் நாம் உண்ட உணவு எளிதில் ஜீரணமாகிறது.

சிரிப்பு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இரத்த ஓட்டத்தை சீராக்கும். இதயத்தையும், நுரையீரலையும் நல்ல வழியில் தூண்டும். பிராண வாயு ஓட்டத்தை அதிகரிக்கும், தசைகளை தளர்த்தி வலிகளை நீக்கும், உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும். ஞாபக சக்தி, படைப்பாற்றல், துடிப்பாக இருத்தல் போன்ற மூளையின் செயல் திறனை கூர்மையாக்கும்.

அடிக்கடி சிரிப்பது மற்றும் அதிகமாக சிரிக்கப் பழகுங்கள். ஏனெனில், சிரிப்பு உங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது. அதனால் அது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது. தூக்கமின்மை பிரச்னை உள்ளவர்கள் மனம் விட்டு சிரித்தால் தூக்கம் தானாக வரும். நீங்கள் இரவில் நன்றாகத் தூங்க முடியாதவராக இருந்தால் தினமும் ஒரு முறையாவது சிரிக்கப் பழகுங்கள்.

இதையும் படியுங்கள்:
உணர்ச்சிப் பொருளாதாரம் பற்றி தெரியுமா?
Grandma's smile

நீங்கள் சிரிக்கும் சிரிப்பு உங்களை சுற்றி உள்ள 50 சதவீதம் பேரைக் கூட சிரிக்க வைக்கும் ஆற்றல் உடையது. நகைச்சுவை உணர்வும், சிரிப்பும் நலமான மூப்படைதலுக்கு உதவும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். சிரிப்பு இருக்கும் இடத்தில் பதற்றம், குழப்பம் போன்றவை தோன்றாது என்கிறார் பிரபல நரம்பியல் நிபுணர் மேட் பெல்லஸ்.

ஆஸ்துமா, மூச்சுக் குழாய் அழற்சி போன்ற நுரையீரல் பிரச்னைகளால் பீடிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சளி எளிதாக வெளியே வர சிரிப்பு உதவும். சிரிக்கும்போது மார்பு மற்றும் வயிற்றுப் பகுதிக்கு பயிற்சி கிடைப்பதுடன், இருமல் போன்ற தொந்தரவுகளும் கட்டுப்படும் என்கிறார் அமெரிக்க மருத்துவ நிபுணர் ரெபேக்கா எப்நாண்டே.

வாய்விட்டுச் சிரிக்கும்போது இதயத் துடிப்பு 10 முதல் 20 சதவீதம் அதிகரிக்கும். இதனால் உடல் அதிக கலோரிகளை எரிக்கும். சிரிப்பதால் மூளையின் செயல்பாடுகள் மாறும். சிறிது நேரம் சிரித்தாலும் தெளிவான சிந்தனையையும், மற்றவர்களுடன் வலுவான பிணைப்பையும் பெற முடியும் என்கிறார்கள் ஹர்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

ஒவ்வொரு நாளும் சிரிப்பை ஏற்படுத்திய மூன்று காரணங்களை டைரியில் எழுதி வந்தால் மனப் பதற்றம் குறையும் என்று பரிந்துரைக்கிறார்கள். இக்கட்டான நேரங்களில் மனம் விட்டு சிரிப்பதால் உங்கள் இதய படபடப்பு குறைந்து இரத்த அழுத்தம் சீராகும் என்கிறார்கள் கான்கஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். மன இறுக்கம், துக்கம், உடல் வலிகள் என அனைத்தையும் சரி செய்யும் ஆற்றல் விளையாட்டிற்கும், மனம் விட்டு சிரிக்கும் சிரிப்பிற்கு மட்டுமே உள்ளது. எனவே, வாய்ப்பு உள்ளபோதெல்லாம் சிரித்து மகிழுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com