பெண்களுக்கு மாதவிடாய் காலம் என்பது பல சங்கடங்களை தரக்கூடிய ஒரு நேரம். இந்த சமயத்தில் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக உடல் மற்றும் மனதளவில் பல்வேறு தொந்தரவுகள் ஏற்படுவது இயல்பு. குறிப்பாக, மாதவிடாய் வலி பல பெண்களுக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. வயிற்று வலி, இடுப்பு வலி, தலைவலி, குமட்டல் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அறிகுறிகள் தோன்றலாம்.
இந்த வலியில் இருந்து விடுபட பல பெண்கள் வலி நிவாரண மாத்திரைகளை நாடுகின்றனர். ஆனால், இவற்றை தொடர்ந்து எடுத்துக்கொள்வது உடல் நலத்திற்கு நல்லதல்ல. அப்படியானால், இந்த வலிக்கு என்னதான் தீர்வு? கவலை வேண்டாம், உங்கள் வீட்டிலேயே சுலபமாக தயாரிக்கக்கூடிய சில பானங்கள் மூலம் மாதவிடாய் வலியை குறைக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?
சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்தே இந்த பானங்களை தயார் செய்து விடலாம். வெதுவெதுப்பான நீர் பருகுவது மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி மற்றும் முதுகு வலிக்கு உடனடி நிவாரணம் தரும். அதேபோல், இஞ்சி தேநீர் ஒரு சிறந்த வலி நிவாரணி. இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வலியை குறைக்க உதவுகின்றன. இஞ்சி தேநீர் மட்டுமின்றி, துளசி, இலவங்கப்பட்டை, கெமோமில் போன்ற மூலிகைகளை கொண்டும் தேநீர் தயாரித்து அருந்தலாம்.
இஞ்சி தேநீர் தயாரிக்க, ஒரு துண்டு இஞ்சியை தட்டி அல்லது துருவி, ஒரு கப் தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். 5-7 நிமிடங்கள் கழித்து வடிகட்டி, தேவைப்பட்டால் தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து பருகலாம்.
இலவங்கப்பட்டை தண்ணீர் தயாரிக்க, ஒரு கப் வெந்நீரில் அரை டீஸ்பூன் இலவங்கப்பட்டை பொடி சேர்த்து கொதிக்க வைத்து, 10 நிமிடங்கள் கழித்து வடிகட்டி குடிக்கலாம். இதை ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறை அருந்தினால் வலி குறையும். இலவங்கப்பட்டை மாதவிடாய் வலிக்கு ஒரு பாரம்பரிய வீட்டு வைத்தியம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கெமோமில் மற்றும் துளசி தேநீர் வகைகளும் வலியை குறைக்க உதவும். கெமோமில் பூக்களில் இருந்து தயாரிக்கப்படும் கெமோமில் தேநீர், காஃபின் இல்லாதது மற்றும் பல்வேறு உடல் உபாதைகளுக்கு தீர்வாக பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது. துளசி தேநீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி, வீக்கம் மற்றும் பிடிப்புகளை குறைக்கவும் உதவுகிறது.
எனவே, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை குறைக்க, இந்த இயற்கை பானங்களை முயற்சி செய்து பாருங்கள். வலி நிவாரண மாத்திரைகளை தவிர்த்து, பக்கவிளைவுகள் இல்லாத இந்த வீட்டு வைத்தியங்களை பின்பற்றுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.