நமது உடல் ஆரோக்கியமாக இருக்க கீழ்க்கண்ட உணவுப் பழக்க வழக்கங்களைக் கடைபிடிப்பது நன்மை செய்யும் என்று நமது முன்னோர்கள் வகுத்துக் கொடுத்து இருக்கிறார்கள். உடலுக்கு நன்மை செய்யும் சில உணவுப் பழக்கங்களை இந்தப் பதிவில் காண்போம்.
* பகலும் இரவும் சேரும் நேரமான சந்தியா காலத்தில் உணவு எதையும் சாப்பிடக்கூடாது.
* நள்ளிரவிலும் இருட்டிலும் போதிய வெளிச்சம் எதுவும் இன்றி (விளக்கு போடாமல்) இருட்டில் எதையும் உண்ணக்கூடாது.
* இரவில் எள் சாதமும், பகலில் பால் சாதமும் சாப்பிடக்கூடாது.
* எந்த இலையிலும் (தாமரை இலை தவிர) பின்புறத்தில் உணவை வைத்து சாப்பிடக் கூடாது.
* இரவில் நெல்லிக்காய், தயிர் சாதம், இஞ்சி போன்றவற்றை சாப்பிடக்கூடாது. தயிரை தவிர்த்து மோரை எடுத்துக் கொள்ளலாம்.
* தாமிர பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்துக் குடிக்கலாம். இது ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால், பாலை ஊற்றி வைக்கவோ, குடிக்கவோ கூடாது.
* எந்த உணவையும் இறைவனுக்குப் படைத்து விட்டு (நிவேதனம் செய்து) சாப்பிடுவது நல்லது.
* உணவு சமைத்ததும் முதலில் காக்கைக்கு சாதம் வைப்பதும், சாப்பிட்டு முடிந்ததும் நாய்க்கு உணவு வைப்பதும் அவசியம் செய்ய வேண்டும்.
* வாயால் கடித்து எச்சில்படுத்திய உணவை யாருக்கும் தரக்கூடாது.
* வெண்கல பாத்திரத்தில் இளநீரை வைத்து குடிக்கக் கூடாது.
* உடல் உபத்திரவத்திற்காக எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளை பாலுடன் எடுத்துக் கொள்ளக் கூடாது.
* குளிர்ச்சியான பொருளுடன் சூடான பொருட்களை சேர்த்து உண்ணக்கூடாது (ஐஸ்கிரீம் + சூடான குலோப் ஜாமுன்).
* வாழைப்பழத்தை தயிருடன் சேர்த்து கலந்து சாப்பிடக் கூடாது.
* பாலுடன் மீன் உணவுகளை சேர்த்து உண்ணக்கூடாது. புளிப்பு சுவையுடைய ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற பழங்களை பால், தயிருடன் சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்ப்பது உடலில் நச்சுத்தன்மை உருவாகாமல் காக்கும்.
* தேனை எக்காரணம் கொண்டும் சூடு செய்யக்கூடாது. சூடு செய்யும்பொழுது அதிலுள்ள சத்துக்கள் நீங்குவதுடன், உடலில் தேவையற்ற நச்சுக்களை உருவாக்கி செரிமான பாதிப்பை ஏற்படுத்தும்.
* தேன், நெய் இரண்டுமே மருத்துவ குணம் நிறைந்தவை. ஆனால், அவை இரண்டையும் சம அளவில் சேர்க்கும்பொழுது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். ஒன்றாகக் கலந்து உண்பதைத் தவிர்ப்பது நல்லது.
* எந்தக் கீரை உணவுடனும் தயிர், பால் சேர்த்து உண்ணக்கூடாது. அதேபோல், பாகற்காய் சாப்பிட்ட பிறகு பால் எடுத்துக்கொள்ளக் கூடாது.