மழையோ, வெயிலோ எந்த காலத்திலும் நம்முடனே இருப்பது சளி, இருமல், தொண்டை கரகரப்பு போன்றவை. வந்தால் 3, 4 நாட்கள் நம்மை கஷ்டப்படுத்தி விட்டு தான் செல்லும். சில எளிய வழிமுறைகளை பின்பற்ற தொண்டை பிரச்சனையிலிருந்து (Throat problems) நிவாரணம் பெறலாம்.
வைரஸ் தொற்று ஏற்பட்டு சளி இருமலால் தொண்டையில் வலி, வறட்சி ஏற்படுவதை தொண்டைக்கட்டு என்கிறோம். குரலுக்கு ஓய்வு தருவது, நீர் ஆகாரங்களை வெதுவெதுப்பான சூட்டில் அருந்துதல், வெந்நீரில் உப்பு போட்டு கொப்பளிப்பது, பனங்கற்கண்டு, மிளகு இவற்றை வாயில் அடக்கிக் கொள்ளுதல் போன்றவை தொண்டைக்கட்டை சரிசெய்யும்.
அதிக குளிர்ச்சி, அதிக சூடு உள்ள உணவுகள் தொண்டையை பாதிக்கின்றன. குரலை பாதித்து பேசுவதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. மிதமான சூடுள்ள உணவுகள், சத்தத்தை குறைத்துபேசுதல் போன்றவை தொண்டையின் சிரமத்தை குறைத்து நமக்கு சுகமளிக்கும்.
குழந்தைகள் அடிக்கடி தொண்டை வலியால் உணவை விழுங்க முடியாமல் சிரமப்படுவார்கள். கழுத்து பகுதி வீக்கம், தொண்டையில் உள்ள டான்சில் சதை வீங்குவது இதற்கு காரணமாகிறது.
பாக்டீரியா தொற்றினால் ஏற்படுகிறது. ஜஸ்கிரீம், குளிர்ந்த பானங்கள், உணவுகளை தவிர்த்தல் வெந்நீரில் உப்பு போட்டு கொப்பளிக்க தொண்டை ஆரோக்கியம் மேம்படும். வைட்டமின் சி நிறைந்த பழங்களை சாப்பிட தொண்டை பிரச்சனைகளிலிருந்து (Throat problems) நிவாரணம் கிடைக்கும்.
பேசிக் கொண்டே சாப்பிடும் போது சில நேரங்களில் உணவானது உணவுக் குழாய்க்கு போகாமல் காற்று குழாய்க்கு போய் விடும். இதுவே புரையேறுதல் என்கிறோம். புரையேறினால் சற்று நேரம் அமைதியாய் மூச்சை இழுத்து விட சுவாசம் சீராகும். தொண்டை எரிச்சல், கபம் இருந்தால் துளசி, ஓமம் போட்டு காய்ச்சிய நீரை வெதுவெதுப்பாக அருந்த சரியாகும்.
தொண்டை வழியாக இரைப்பைக்கு வந்த உணவு சிலசமயங்களில் மறுபடியும் மேலே வரும். இதைத் தான் நெஞ்செரிச்சல் என்கிறோம். உணவை வேக வேகமாக விழுங்குதல், அதிக காரம், அமிலம் மற்றும் மசாலா உணவுகளை தவிர்த்தாலே நெஞ்செரிச்சல் சரியாகும்.
நாம் சாப்பிடும் போது வாயை அகலமாக திறந்து சாப்பிடுவது, அண்ணாந்து தண்ணீர் குடிப்பது போன்றவற்றால் காற்றையும் விழுங்குகிறோம். இதுவே ஏப்பமாக வருகிறது. அளவுக்கு மீறும்போது இதுவே வாயுப் பிரச்சனையாக தொல்லை கொடுக்கும். அடிக்கடி ஏப்பம் வந்தால் வயிற்றுப்புண், செரிமான மின்மை, அமில காரத் தன்மை அதிகமாதல் போன்றவை காரணமாக இருக்கலாம்.
அவசரமாக சாப்பிடுவது, வேக வேகமாக விழுங்குவது தண்ணீர் அருந்தாதது போன்ற காரணங்களால் விக்கல் ஏற்படுகிறது. சிலருக்கு தண்ணீர், பழச்சாறு குடித்தால் விக்கல் நிற்கும். மூச்சை ஆழமாக இழுத்து வெளியே விட்டால் விக்கல் நிற்கும். இரண்டு நாட்களுக்கு மேல் விக்கல் இருந்தால் நோய்த்தொற்று, இரைப்பை புண் இருக்கலாம். மருத்துவரை அணுக வேண்டும்.
தொண்டையில் இருந்து காற்று வெளியேறுவதில் தடை ஏற்படுவதால் உண்டாவது தான் குறட்டை. உடல் பருமன் மூக்கின் தண்டுப் பகுதி மற்றும் எலும்பில் ஏற்படும் குறைபாடு ஆகியவை காரணமாக குறட்டை வரும். உடல் எடையை கட்டுக்குள் வைப்பது, சரியான முறையில் தூங்குவது, நடைப்பயிற்சி, மூச்சுப் பயிற்சி செய்ய குறட்டை மட்டுப்படும்.
இவ்வாறாக தொண்டை சார்ந்து ஏற்படும் பிரச்சனைகளை நாமே கவனமாக இருந்தால் தவிர்க்கலாம்.
(மருத்துவர் பிரகதீஷ் சொன்னதிலிருந்து தொகுப்பு).
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்).