வயிற்று வலியோ, வயிற்று போக்கோ, எந்தவித வயிற்று பிரச்சினை என்றாலும் அது அசுத்தமான உணவு பழக்கங்கள், ஆரோக்கியமற்ற உணவுதயாரிப்பு முறை, மண் போன்ற இடத்தில் விளையாடிவிட்டு வந்து கை கழுவாமல் சாப்பிடுவது போன்றவற்றால் குடற்புழுக்கள் ஏற்படுகின்றன.
காலில் செருப்பினை போடாமல் நடப்பது போன்ற பழக்கத்தால் கொக்கிப் புழுக்கள் உடலுக்குள் செல்வதாக அறிகிறோம். வயிற்றுபோக்கு, பசியின்மை, ரத்தசோகை போன்ற அறிகுறிகள் மூலம் குடல் புழுக்கள் இருக்கலாம் என உணரலாம். குடற்புழுக்கள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஆறு மாதத்திற்கு ஒரு முறை இப்புழுக்களை மருந்துகள் மூலம் நீக்குவது அவசியம். எளிய பயனுள்ள முறைகளாக சிலவற்றை கடைபிடிக்க குடற்புழுக்களை அழிப்பதோடு வராமல் தடுக்கலாம்.
இஞ்சி, குரு மிளகு, திப்பிலி மற்றும் தேன் கலந்த கலவையை தொடர்ந்து எடுத்துக் கொள்ள குடற்புழுக்கள் குறையும். வேப்பங்கொழுந்தை உப்புடன் சேர்த்து அரைத்து சாப்பிட புழுக்கள் அழியும்.
அன்னாசியும் வயிற்று புழுக்கள் வளர விடாமல் தடுப்பதில் துணைபுரிகிறது. பூசணி விதைகளை பொடியாக்கி தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்க வயிற்று பூச்சிகள் அழியும். சிறு குழந்தைகளுக்கு வசம்பை சுட்டு அதை தேனில் குழைத்து நாக்கில் தடவலாம்.
தேனுடன் துளசி இலைச்சாறு சேர்த்து குடிக்க சளியோடு புழுக்களும் வெளியாகும். கற்பூரவள்ளி இலையை எண்ணையாக்கி அந்த சாறுடன் எ சாறு கலந்து அருந்த குடற்புழுக்கள் வெளியேறும் மோர் மற்றும் தயிரை தொடர்ந்து எடுத்துக் கொள்ள குடற்புழு க்கள் உடலில் சேராமல் அழிக்க உதவுகிறது.
பப்பாளி விதையை பொடியாக்கி இரவில் பாலில் சேர்த்து கலந்து குடிக்கலாம். பப்பாளி ஜுஸுடன் தேன் கலந்து சாப்பிட்டால் வயிற்றில் பூச்சிகள் வராது.
அண்டவாயு எனும் பேதிக் கீரையை துவையலாக்கி சாப்பிட்டால் வயிறு சுத்தமாகும். புரசின் விதைகளை தினமும் இரண்டு முறை மோர் சேர்த்து சாப்பிட வட்டப் புழுக்கள் நீங்கும்.
கசப்பு காய்களான பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை போன்றவற்றை தாராளமாக சேர்த்துக் கொள்ள வயிற்று பூச்சிகள் வராது, குடல் ஆரோக்கியமாக இருக்கும்.