பெரும்பாலான பெண்கள் எதிர்கொள்ளும் சவாலான விஷயம் பிரசவம் என்பது. வீட்டுப் பெரியவர்கள் பிரசவம் வரை இரண்டு உயிர்களுக்கு சேர்த்து சாப்பிடும்படி கூறுவதும், பிரசவத்திற்குப் பிறகு தாய்ப்பால் ஊட்ட தெம்பு வேண்டும் என்று கூறி அதிக ஊட்டம் நிறைந்த உணவுகளைத் தருவதும், ஓய்வு தேவை என உடல் இயக்கம் அதிகம் இல்லாமலும் போவதால் பெண்களுக்கு இடுப்பு, வயிறு மற்றும் தொடை பகுதிகளில் அதிக சதை போட்டு உடல் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறி விடுவதும், அதன் பிறகு உடல் பருமனைக் குறைக்க வழி தெரியாமல் விழி பிதுங்கி என்ன செய்வது என திகைப்பவர்கள் பலர் உண்டு. அவர்களது பிரச்னைக்குத் தீர்வு தரும் சில ஆலோசனைகளை இந்தப் பதிவில் காண்போம்.
பிரசவத்திற்குப் பிறகு தளர்ந்த தொப்பையை இறுக்குவதற்கு என்னதான் பெல்ட் போட்டுக் கொண்டாலும் சில உணவுகள் மற்றும் உடற்பயிற்சிகள் மூலம் வயிற்றை பழைய நிலைக்குக் கொண்டு வர முடியும். சுகப்பிரசவத்திற்குப் பின் வரும் நாட்களில் மிதமான உடற்பயிற்சி, வயிறு மற்றும் இடுப்பு பகுதிகளில் உள்ள தசைகளை இறுகச் செய்யும் பயிற்சிகள் ஆகியவற்றை செய்யலாம். மேலும், உடலில் உள்ள கலோரிகளைக் குறைக்க ஏரோபிக் பயிற்சிகள் எனப்படும் ஜாகிங், ரன்னிங், ஸ்விம்மிங், வாக்கிங், டான்சிங் போன்றவற்றையும் செய்யலாம்.
ஆன்டி ஆக்சிடன்ட்கள், வைட்டமின் ஏ, இ, சி, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அடங்கிய பட்டை, இஞ்சி, பூண்டு, கிராம்பு போன்ற மசாலா பொருட்களும், பழங்கள், நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், சிறுதானியங்கள், கொழுப்புச்சத்து குறைந்த மீன் மற்றும் கடல் உணவுகள், புரதச்சத்து நிறைந்த பருப்புகள், முட்டையின் வெள்ளை கரு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். அதேபோல், கொழுப்புச் சத்து நிறைந்த பொரித்த உணவுகள், ஜங்க் ஃபுட் எனப்படும் பீட்சா, பர்கர், உப்புச்சத்து நிறைந்த பாக்கெட் உணவுகள், இனிப்புகள், மைதா பொருட்களைத் தவிர்க்கலாம்.
சீஸ், பால், தயிர், சோயா பீன்ஸ் போன்ற புரதம் நிறைந்த அமினோ அமில உணவுகளையும் எடுத்துக்கொள்ள தளர்ந்த வயிற்றுப் பகுதி குறைந்து இறுக்கமாகி விடும். அத்துடன் கடுமையான உடற்பயிற்சிகளைத் தவிர்த்து குழந்தையுடன் காலாற நடத்தல், சைக்கிளிங், டாக்டர் பரிந்துரைக்கும் கார்டியோ உடற்பயிற்சிகளை செய்யலாம். நிறைய தண்ணீர் மற்றும் சத்தான பானங்கள் எடுத்துக்கொள்வது தாய்ப்பால் சுரக்கவும், தளர்ந்த தசைகள் இறுகவும் உதவும்.
கற்றாழை ஜெல்லை தொய்வான வயிற்றுப் பகுதியில் தடவி 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவலாம். கற்றாழை சருமத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை உறிஞ்சவும், சருமத்தை இறுக்கவும் உதவும். எண்ணெய் மசாஜ் தொய்வான தசையை சரிசெய்ய உதவும். ஆக்சிஜனேற்றிகள், கொழுப்பு அமிலங்கள் நிறைந்த ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெயை வயிற்றில் தினமும் இரண்டு மூன்று முறை தடவி மசாஜ் செய்வது நல்ல பலன் தரும். அதேபோல், முல்தானி மெட்டி தளர்ந்த தசைகளை இறுகச் செய்யும். இதனை வயிற்றுப் பகுதியில் பன்னீர் கலந்து குழைத்து தடவி, பாடி பேக் போட்டு 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவி விடலாம்.
பிரசவத்துக்காக அறுவை சிகிச்சை செய்த தொப்பையை குறைக்க: சிசேரியன் செய்த காயம் குணமாகும் வரை காத்திருந்து பிறகு உடற்பயிற்சி செய்யத் தொடங்கலாம். பிரசவம் முடிந்து 8 வாரங்களுக்குப் பிறகு உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யத் தொடங்கலாம். இதற்கு புஜங்காசனம் என்னும் ஆசனம் செய்ய வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பு கரையும். இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வர, படிப்படியாக தோள்கள், அடிவயிறு, மார்பில் உள்ள தசைகளை சீராக்கி கைகள் மற்றும் தோள்களை பலப்படுத்தும்.
உஸ்த்ராசனம், பத்மாசனம் கந்தராசனம், தடாசனம், திரிகோனாசனம் ஆகிய ஆசனங்களை தகுந்த யோகா பயிற்சியாளரிடம் கற்றுக்கொண்டு செய்வது நன்மை பயக்கும். சத்தான உணவுகளுடன் இந்த ஆசனங்களையும், உடற்பயிற்சிகளையும் செய்து பலன் அடையலாமே!