சர்க்கரை நோய் உள்ளவர்கள் இனிப்பு சுவை கொண்ட பொருட்களை அதிகமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்கிற கருத்து உலக அளவில் உள்ளது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உணவுப் பழக்க வழக்கங்களில் பல மாற்றங்களைச் செய்ய வேண்டியுள்ளது. குறிப்பாக, சர்க்கரை உட்கொள்வது கட்டுப்படுத்த பரிந்துரைக்கப்படுவதால், இவர்களுக்கு ஒரு சிறந்த மாற்றாக Stevia என்கிற தாவரம் திகழ்கிறது. இந்தத் தாவரத்தில் இருந்து எடுக்கப்படும் இயற்கை இனிப்பில், அதிகப்படியான சர்க்கரை அளவு இல்லாததால், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றதாக ஸ்டீவியா திகழ்கிறது.
ஸ்டீவியா என்பது தென் அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட ஒரு புதர் வகைத் தாவரம். இதன் இலைகளில் கிடைக்கும் ‘குளுக்கோஸைடுகள்’ என்ற இயற்கை சேர்மங்கள்தான் இனிப்பு சுவையைத் தருகின்றன. ஸ்டீவியா சர்க்கரையை விட 200 முதல் 400 மடங்கு வரை இனிமையானது. ஆனால், இதில் கலோரி மதிப்பு மிகவும் குறைவு. அதாவது, இதை அதிக அளவு உட்கொண்டாலும் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காது.
ஸ்டீவியாவின் நன்மைகள்:
ஸ்டீவியா ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது என்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கலோரி மதிப்பு குறைவாக இருப்பதால், எடையை இழக்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.
வெள்ளை சர்க்கரை பற்களுக்கு கெடுதலை விளைவிக்கும். ஆனால், ஸ்டீவியா பற்களின் எனாமலை பாதிக்காது என்பதால், பற்கள் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
மேலும், இதை உட்கொள்வதால் ரத்த அழுத்தம் குறைந்து இதய ஆரோக்கியம் மேம்படுகிறது.
சில ஆய்வுகள் ஸ்டீவியாவில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன. எனவே, இதை பல்வேறு வகையான உணவுப் பொருட்களில் பயன்படுத்தலாம். தேநீர், காபி, குளிர்பானங்கள், இனிப்புகள் மற்றும் பேக்கரி பொருட்களில் சேர்க்கலாம். இது கடைகளில் பொடி, லிக்விட் மற்றும் மாத்திரை வடிவங்களில் கிடைக்கிறது.
ஸ்டீவியா, சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரமாகும். இது பல்வேறு விதமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இருப்பினும், இதை உட்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. ஏனெனில், ஒவ்வொருவருடைய உடலும் வேறுபட்டது என்பதால், புதிதாக எடுத்துக்கொள்ளும் உணவு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் சாத்தியக்கூறுகள் உள்ளன. எனவே, தகுந்த மருத்துவரின் ஆலோசனையின் படி இதை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.