சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவு முறையை கவனமாக கையாள வேண்டியது அவசியம். குறிப்பாக, கார்போஹைட்ரேட் சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது கவனமாக இருக்க வேண்டும். சப்பாத்தி மற்றும் அரிசி இரண்டும் நம்முடைய தினசரி உணவில் முக்கிய இடத்தைப் பிடிக்கும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள். ஆனால், சர்க்கரை நோயாளிகளுக்கு எது நல்லது என்ற கேள்வி பலகாலமாக இருந்து வருகிறது.
சப்பாத்தி: இது பொதுவாக கோதுமையால் தயாரிக்கப்படுகிறது. கோதுமை நார்ச்சத்து நிறைந்தது. நார்ச்சத்து உணவு செரிமானத்தை மெதுவாக்குவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு படிப்படியாக உயரும். இது ரத்த சர்க்கரை அளவு திடீரென ஏற்றி இறக்கி விடுவதை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், நாச்சத்து நிறைந்த உணவுகள் நீண்ட நேரம் வயிறு நிறைந்திருக்கும் உணர்வைத் தருவதால், அடிக்கடி பசி உணர்வு ஏற்படாமல் இருக்கும்.
அரிசி: அரிசியில் நார்ச்சத்து குறைவாகவே உள்ளது. அரிசியை உட்கொள்ளும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு வேகமாக உயரும். இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஆபத்தானது. இருப்பினும் அனைத்து வகையான அரிசியும் சர்க்கரை நோயாளிகளுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. பழுப்பு அரிசி, சிவப்பு அரிசி போன்ற முழு தானிய அரிசிகளில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றதாக இருக்கும்.
சப்பாத்தி Vs அரிசி: எது சிறந்தது?
சப்பாத்தி, அரிசி இரண்டிலும் நன்மை தீமைகள் இருக்கின்றன. எது சிறந்தது என்பது நாம் எந்த வகை தானியத்தை தேர்வு செய்கிறோம் என்பதைப் பொறுத்தது. கோதுமையின் வகை, சப்பாத்தியை தயாரிக்கும் முறை போன்ற காரணிகளைப் பொறுத்து சப்பாத்தியின் கிளைசெமிக் குறியீடு மாறுபடும். முழு கோதுமை மாவு கொண்டு தயாரிக்கப்படும் சப்பாத்தியால் கிளைசெமிக் குறியீடு குறைவாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது.
பழுப்பு அரிசி, சிவப்பு அரிசி போன்ற முழு தானிய அரிசிகளில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. ஆனால், வெள்ளை அரிசியில் நார்ச்சத்து மிகக் குறைவாக இருக்கும் என்பதால் சர்க்கரை நோயாளிகள் அதைத் தவிர்க்க வேண்டும்.
சில முக்கியமான விஷயங்களை கவனத்தில் கொண்டு, சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவில் சப்பாத்தியையும் அரிசியையும் சேர்த்துக் கொள்ளலாம். உணவில் எப்போதும் முழு தானியங்களை சேர்த்துக் கொள்ளுங்கள். சப்பாத்தியை ரொட்டியாக தயாரித்து சாப்பிடுவதற்கு பதிலாக தோசை போல வார்த்து சாப்பிடுங்கள்.
எந்த உணவையும் அதிகமாக சாப்பிடக்கூடாது. சரியான அளவில் உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். சப்பாத்தி அல்லது அரிசியுடன் காய்கறிகள், பருப்பு வகைகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சேர்த்து சாப்பிடுவது நல்லது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவை படிப்படியாக உயர்த்த உதவும்.