உங்க கண் அடிக்கடி பொங்குகிறதா? இதோ வெறும் 2 நிமிடத்தில் தீர்வு!

A womaan with eye problem
Eye careImage credit: AI Image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

கண் பொங்குதல் என்பதை ஆங்கிலத்தில் Sticky Eyes அல்லது Eye Discharge என்று அழைக்கப்படுகிறது. தூங்கி எழுந்ததும் அல்லது கண் தொற்று ஏற்படும் பொழுது கண்களின் ஓரத்தில் மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் பிசுபிசுப்பான திரவம் சேரும் நிலையே இது.

கோடைக்காலத்தில் அதிகரிக்கும் வெப்பம், காற்று மாசு மற்றும் அலர்ஜி காரணமாகக் கண்கள் பொங்குதல் (வீக்கம், சிவத்தல், அரிப்பு) ஏற்படுகிறது. தூசி, பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றுகள் இதற்கு முக்கிய காரணங்களாகும். சில எளிய பராமரிப்பு முறைகள் (Eye care) மூலம் இதிலிருந்து எளிதில் நிவாரணம் பெறலாம்.

காரணங்கள்: 

ஒவ்வாமை (Allergic Conjunctivitis): கோடைக்காற்றில் கலந்திருக்கும் தூசி, புகை மற்றும் மகரந்தத் துகள்கள் கண்களில் ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன. 

கண் வறட்சி(Dry Eyes): அதிக வெப்பத்தால் கண்ணில் உள்ள ஈரப்பதம் விரைவாக ஆவியாகி, கண்கள் சிவந்து வீங்க வழிவகுக்கிறது.

தொற்று(Eye Infections): சுற்றுப்புறச் சூழல் மாற்றத்தால் வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகள் எளிதில் பரவுகின்றன. 

அழுக்கு கைகள்: தூய்மையற்ற கைகளால் கண்களைத் தேய்ப்பது கிருமிகளை நேரடியாக கொண்டு சேர்க்கும். தூக்கமின்மை, நீண்ட நேரத்திற்கு டிஜிட்டல் சாதனங்களைப் பார்ப்பது, குறைந்த ஒளியில் நீண்ட நேரமாக புத்தகம் படிப்பது, அலர்ஜிகள் போன்றவை பொதுவான காரணங்களாக பார்க்கப்படுகிறது. 

அறிகுறிகள்: 

கண்களில் தாங்க முடியாத அரிப்பு மற்றும் எரிச்சல் உண்டாகுதல். கண்கள் சிவந்து காணப்படுதல். கண்களில் இருந்து அதிகப்படியான நீர் வடிதல் அல்லது மஞ்சள்/வெள்ளை நிறத்தில் பிசுபிசுப்பான திரவம் வெளியேறுதல். கண் இமைகளில் வீக்கம் அல்லது வலி ஏற்படுதல். ஒளிக்கதிர்களைப் பார்க்கும்போது கூச்ச உணர்வு ஏற்படுதல்.

தீர்வுகள்:

சுத்தமான குளிர்ந்த நீரால் கண்களை அடிக்கடி மெதுவாகக் கழுவவும். 

சுத்தமான பருத்தித் துணியில் ஐஸ் கட்டிகளை வைத்து, மூடிய கண்களின் மீது சில நிமிடங்கள் ஒத்தடம் கொடுக்க வீக்கம் மற்றும் அரிப்பைக் குறைக்க உதவும். இது கண்களைச் சுற்றியுள்ள தசைகளை அமைதியடையச் செய்யும். களைப்பைக் குறைக்கும். வறண்ட கண்களுக்கு இதமளிக்கும்.

வெளியே செல்லும்பொழுது புற ஊதாக் கதிர்களைத் தடுக்கும் தரமான கூலிங் கிளாஸ்கள் அணிவது கண்களை தூசியிலிருந்து பாதுகாக்கும். 

கண்களில் அரிப்பு இருந்தாலும் கைகளால் தேய்ப்பதைத் தவிர்க்கவும். இல்லையெனில் இது பாதிப்பை அதிகமாக்கும். 

கணினி அல்லது மொபைல் திரைகளைப் பார்க்கும் போது அடிக்கடி இமைகளை மூடித் திறக்கவும் (Blink).

இதையும் படியுங்கள்:
வெறும் தண்ணீரை வைத்து இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்: எப்படி தெரியுமா?
A womaan with eye problem

தடுப்பு முறைகள்: 

கண்களின் களைப்பை போக்குவதற்கு கண் இமைகளின் மீது தினமும் மென்மையாக மசாஜ் செய்யலாம். இது கண்களுக்கு ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். மேலும் கண்களைச் சுற்றியுள்ள தசைகளை ஆசுவாசப்படுத்தும். அதே நேரம் கண்ணீர் சுரப்பிகளை ஊக்குவித்து கண்கள் வறண்டு போவதைத் தடுக்கும்.

உள்ளங்கை சிகிச்சை களைப்படைந்த கண்களுக்கு அமைதியை ஏற்படுத்தும். குறிப்பாக கணினி, மடிக்கணினி அல்லது தொலைக்காட்சி முன்பு நீண்ட நேரம் அமரும்போது கண்கள் மேலும் சோர்வடையாமல் அதனை அமைதியான நிலைக்கு கொண்டு வரும். அதற்கு இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றாகச் சேர்த்து வேகமாகத் தேய்த்து சூட்டை உண்டாக்கவும்.

கண்களை மூடிக்கொண்டு சூடாக இருக்கும் நம் உள்ளங்கைகளை அதன் மீது வைக்கவும். கண்ணிமைகளின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டாம். 30 நொடிகளுக்கு அப்படியே இருந்து பிறகு கண்களை மெதுவாகத் திறந்து சுற்றி பார்க்கவும். நான்கைந்து முறை இவ்வாறு செய்ய களைப்படைந்த மற்றும் சோர்வடைந்த கண்கள் அமைதி பெறும்.

அறிகுறிகள் இரண்டு நாட்களுக்கு மேல் தொடர்ந்தாலோ, பார்வை மங்கலாகத் தெரிந்தாலோ அல்லது வலி அதிகமாக இருந்தாலோ சுயமாக மருந்து போடாமல் அருகிலுள்ள கண் மருத்துவரை அணுகி முறையான ஐ- டிராப்ஸ் பயன்படுத்த வேண்டும்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

logo
Kalki Online
kalkionline.com