
Sugar Cut Benefits: இன்றைய காலத்தில் பலரும் சர்க்கரையை அதிகமாக உட்கொள்கிறோம். காபி, டீ, ஸ்வீட்ஸ், ஜூஸ்கள் போன்றவற்றில் உள்ள சர்க்கரை நம் நாவிற்கு சுவையாக இருந்தாலும், நீண்ட காலத்தில் உடல் எடை அதிகரிப்பு, ஹார்மோன் பிரச்னைகள், சருமத்தில் பருக்கள் போன்ற பல பிரச்னைகளுக்கு காரணமாகிறது. சர்க்கரை உட்கொள்வதை தவிர்ப்பதால் நம் உடல் மற்றும் மனதில் ஏற்படும் நல்ல மாற்றங்களை பற்றி இந்த பதிவில் வாசிக்கலாம்.
முதல் 3 நாட்கள் சவாலானது!
சர்க்கரையை திடீரென தவிர்ப்பது முதல் சில நாட்களில் மிகவும் கடினமாக இருக்கும். அதாவது, தலைவலி, சோர்வு, மனநிலை மாற்றங்கள், பசி அதிகம் எடுக்கும் உணர்வு ஏற்படலாம். இதன் காரணம், சர்க்கரை சாப்பிடும் போது மூளையில் டோபமைன் ஹார்மோன் அதிகமாக சுரக்கும். அதை திடீரென நிறுத்தும்போது மூளைக்கு தேவையான சிக்னல்கள் குறைந்துவிடும்.
தீர்வு: பசி எடுக்கும் போது தண்ணீர் குடிப்பது, புரதம், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. இதனால் பசி குறைவதோடு, சோர்வும் குறையும்.
4வது நாள் முதல் 7வது நாளில் உடல் உற்சாகமாகும்!
ஒரு வாரம் தொடர்ந்து சர்க்கரையை தவிர்த்தால் ரத்த சர்க்கரை அளவு சீராகும். அடிக்கடி ஏற்படும் கோபம், எரிச்சல் போன்ற கடுமையான உணர்வுகள் குறையும். உடலும் மனமும் உற்சாகமாக இருக்கும்.
2வது வாரத்தில் சருமம் பளபளக்கும்
இரண்டு வாரங்கள் சர்க்கரை தவிர்த்தால் முகத்தில் பருக்கள் குறையும். சர்க்கரை எடுத்துக் கொள்ளாததால் இன்சுலின் சுரப்பி குறைந்து சருமத்தில் உற்பத்தியாகும் எண்ணெய் பசை குறையும். அதே போல மெலட்டோனின் ஹார்மோன் சீராக சுரந்து நல்ல தூக்கமும் கிடைக்கும்.
3வது வாரத்தில் கல்லீரல் சுத்தமாகும்
சர்க்கரை தவிர்த்த மூன்றாவது வாரத்தில் கல்லீரல் சுத்தமாகும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்கும். இதனால், செரிமானம் சீராகி, உடல் சுறுசுறுப்பாக இயங்கும்.
4வது வாரத்தில் நீண்ட கால நன்மைகள்
ஒரு மாதம் தொடர்ந்து சர்க்கரை தவிர்த்தால் டைப்-2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் குறையும். இதய ஆரோக்கியம் மேம்படுவதோடு, மூளை சுறுசுறுப்பாகி கவனம் அதிகரிக்கும்.
சர்க்கரை சாப்பிடும் ஆசை வந்தால் என்ன செய்யலாம்?
சர்க்கரை சாப்பிடும் ஆசை வந்தால் வாழைப்பழம், ஆப்பிள் போன்ற இயற்கை இனிப்பு நிறைந்த பழங்களை சாப்பிடலாம். டீ, காபி குடிக்க விரும்பினால் ஹெர்பல் டீ, லெமன்-மின்ட் டிரிங்க் குடிக்கலாம்.
பொதுவாக, ஆண்களுக்கு ஒரு நாளில் அதிகபட்சமாக 37.5 கிராம், பெண்களுக்கு 25 கிராம் சர்க்கரை மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது.
ஆரம்பத்தில் சர்க்கரை குறைப்பது சவாலாக இருந்தாலும், சில நாட்கள் தொடர்ந்து முயற்சி செய்தால் உடல் அதற்கேற்ப பழகிவிடும். சர்க்கரையை குறைப்பது மூலம் சருமம், கல்லீரல், இதயம், மூளை என முழு உடலும் ஆரோக்கியமாகும். இனிப்புகளை இயற்கையான பழங்களால் மாற்றிக்கொண்டு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை எளிதாக பின்பற்றலாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)