

சர்க்கரை நோய், இன்று ஒவ்வொரு வீட்டிலும் சர்வ சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் பலருக்கும் இருக்கும் மிகப்பெரிய குழப்பம், ரத்தத்தில் சர்க்கரை அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதுதான். பக்கத்து வீட்டுக்காரருக்கு ஒரு அளவு இருக்கிறது, எனக்கு ஒரு அளவு இருக்கிறது, இதில் எது சரி என்று பலரும் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் சர்க்கரை நோய்க்கான அளவுகோல் என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.
ஒருவருடைய வயது, உடல் நிலை மற்றும் அவருக்கு இருக்கும் மற்ற நோய்களைப் பொறுத்து இந்த அளவு மாறுபடும் என்று அமெரிக்க நீரிழிவு சங்கம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டிற்கான புதிய வழிகாட்டுதல்களின்படி, ஒவ்வொரு வயதினருக்கும் இருக்க வேண்டிய பாதுகாப்பான சர்க்கரை அளவுகளைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இளமைப் பருவம் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள்!
பதின்ம வயது என்று சொல்லப்படும் டீனேஜ் பருவத்தில் இருப்பவர்களுக்குக் கண்டிப்பான கட்டுப்பாடு அவசியம். இவர்களுக்குச் சாப்பிடுவதற்கு முன்பு 90 முதல் 130 வரை சர்க்கரை அளவு இருக்கலாம். இவர்களின் மூன்று மாத சராசரி அளவான HbA1c - 7 புள்ளிகளுக்குக் கீழே இருப்பது நல்லது. பதினெட்டு வயதைக் கடந்த வாலிபர்களுக்கு, உணவுக்குப் பின் இரண்டு மணி நேரம் கழித்துச் சோதிக்கும்போது 180க்கு மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
கர்ப்பிணிப் பெண்களுக்குச் சர்க்கரை நோய் வந்தால், அது வயிற்றில் வளரும் சிசுவையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே இவர்கள் மிகத் துல்லியமான கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். வெறும் வயிற்றில் 95க்கு குறைவாகவும், சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 140க்கு குறைவாகவும் இருப்பது அவசியம். இரண்டு மணி நேரம் கழித்து 120க்குக் கீழே இருந்தால் மட்டுமே தாயும் சேயும் பாதுகாப்பாக இருக்க முடியும்.
நடு வயது!
நாற்பது முதல் ஐம்பது வயதுக்குட்பட்டவர்கள் தான் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய கட்டத்தில் உள்ளனர். இந்த வயதில் உடல் உறுப்புகளின் செயல்பாடு குறையத் தொடங்கும். இவர்களுக்கு உணவுக்குப் பின் 140க்குக் குறைவாகவும், இரவு உணவுக்குப் பின் 150க்குக் குறைவாகவும் இருக்க வேண்டும். இந்த எல்லையைத் தாண்டினால் உடனடியாக மருத்துவரை அணுகுவது சிறந்தது.
முதியவர்கள்!
அறுபத்தைந்து வயதைக் கடந்த முதியவர்களுக்குச் சர்க்கரை அளவு மிகவும் குறைந்துவிடுவது, சர்க்கரை அதிகரிப்பதை விட ஆபத்தானது. எனவே இவர்களுக்குச் சிறிது தளர்வு அளிக்கப்படுகிறது. இவர்களின் மூன்று மாத சராசரி அளவு 8 சதவீதம் வரை இருக்கலாம். சர்க்கரை நோய் இல்லாத ஆரோக்கியமான முதியவர்களுக்கு இது 7.5 வரை இருக்கலாம்.
எது உண்மையான அளவுகோல்?
தினசரி சோதனையை விட, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை எடுக்கப்படும் HbA1c பரிசோதனையே ஒருவரின் உண்மையான உடல் நிலையை எடுத்துக் காட்டும். இந்த அளவு சீராக இருந்தால் பயப்படத் தேவையில்லை. மேலும் சிறுநீரகம், இதயம் மற்றும் கல்லீரல் பாதிப்பு உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் தனிப்பட்ட அளவுகளைப் பரிந்துரைப்பார்கள்.
மருந்துகளை விட உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியே சர்க்கரையைக் குறைக்கும் மந்திரக் கோல். தினமும் நடைப்பயிற்சி செய்வது, யோகா செய்வது உடலைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். வெள்ளைச் சர்க்கரை, அதிகப்படியான உப்பு மற்றும் குளிர்பானங்களை அறவே தவிர்க்க வேண்டும்.
தட்டில் சாதத்தின் அளவைக் குறைத்துவிட்டு, வெள்ளரிக்காய், கேரட் போன்ற பச்சைக் காய்கறிகள் மற்றும் கீரைகளை அதிகமாகச் சேர்த்துக்கொள்வது ரத்தச் சர்க்கரையைச் சீராக வைத்திருக்க உதவும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)