டிடாக்ஸ் பானங்கள்: முன்னோர்கள் காட்டிய ஆரோக்கியப் பாதை!

இளநீரும், பதநீரும், பழைய சாதத்து கஞ்சியும் தமிழர்களின் பாரம்பரிய நீரேற்று பொக்கிஷங்கள் என்பது அனைவரும் மறுக்க முடியாத உண்மை.
Woman Drinking Detox water
Woman Drinking Detox waterImage credit- AI Image
Updated on

சித்திரை மாதத்து சூரியன் பூமியை தழுவத் தொடங்கும் போதே, நம் உடல் ஒருவிதமான சோர்வையும் தாகத்தையும் தழுவிக் கொள்கிறது. தாகம் எடுக்கும் வரை காத்திருக்காமல், சீரான இடைவெளியில் தண்ணீர் அருந்துவது அவசியம். குறிப்பாக ஒவ்வொரு 30 நிமிடத்திற்கும் ஒருமுறை சிறிது தண்ணீர் குடிப்பது சிறந்தது. தாகம் எடுக்கும் வரை காத்திருப்பது என்பது ஒரு செடி வாடிய பிறகு அதற்கு தண்ணீர் ஊற்றுவதை போன்றது.

நம் உடலின் 70 சதவீதம் நீராகவே இருக்கிறது. கோடையின் வெம்மை அந்த நீரை வியர்வையாக உறிஞ்சும் போது, உடல் ஒரு காய்ந்த நிலத்தை போல வெடிக்க தொடங்குகிறது. வெறும் தாகத்தை தணிப்பதோடு மட்டுமல்லாமல், நம் உடலின் தாகத்தை தணிப்பதோடு, நம் உடலில் தேங்கியிருக்கும் நச்சுகளை நீக்கி, புத்துணர்ச்சியூட்ட முன்னோர் பின்பற்றிய வழிமுறைகளை பற்றி இங்கே பார்ப்போம்.

கோடை காலத்தில் தண்ணீர் குடிப்பது என்பது வெறும் தாகம் தீர்ப்பதற்கான செயல் மட்டுமல்ல. அது நம் உடலின் வெப்ப நிலையை சீராக வைக்கும் ஒரு தற்காப்பு நடவடிக்கையாகும்.

ஒருவர் போதுமான அளவு தண்ணீர் குடிக்காத போது தலைவலி, மயக்கம், செரிமான கோளாறுகள் மற்றும் சிறுநீரக பிரச்சனைகள் வருகின்றன. கோடைகாலத்தில் உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்தவும், நீரிழப்பைத் தவிர்க்கவும் தினமும் குறைந்தது 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். சராசரி பெரியவர்கள் 2-3 லிட்டர் (8-10 கிளாஸ்) தண்ணீர் குடிக்க வேண்டும். வெயிலில் வேலை செய்பவர்கள் இன்னும் அதிகமாகப் பருக வேண்டும்.

ஆனால் வெறும் தண்ணீரை குடிப்பது சிலருக்கு அலுப்பை தரலாம். அந்த அலுப்பை போக்கி உடலுக்கு கூடுதல் சத்துக்களை தருவதுதான் டிடாக்ஸ் (Detox Water) எனப்படும் நச்சு நீக்கும் பானங்களாகும்.

இதையும் படியுங்கள்:
உடல் நச்சுகளை வெளியேற்றும் வெள்ளரி மற்றும் ரோஜா இதழ் Detox water!
Woman Drinking Detox water

நம் முன்னோர்கள் மண்பானை தண்ணீரில் வெட்டிவேர் மற்றும் நன்னாரி வேர்களை போட்டு வைத்திருந்தார்களே, அதுதான் உலகின் முதல் மற்றும் மிகச்சிறந்த டிடாக்ஸ் முறையாகும். இன்று நவீன உலகில் சுவைக்காகவும் ஆரோக்கியத்திற்காகவும் பழங்களையும் காய்கறிகளையும் தண்ணீரில் கலந்து அருந்துவது பிரபலமாகி வருகிறது.

வீட்டிலேயே எளிதாக தயாரிக்கக்கூடிய டிடாக்ஸ் பானங்கள் கோடைக்கு வரப்பிரசாதம் எனலாம். ஒரு லிட்டர் தண்ணீரில் சில துண்டு எலுமிச்சை, புதினா இலைகள் மற்றும் வெள்ளரிக்காய் துண்டுகளை போட்டு இரண்டு மணிநேரம் ஊறவைத்தால் அற்புதமான புத்துணர்ச்சி பானம் தயாராகி விடும்.

இது குளிர்ச்சியூட்டும் பண்புகளையும் ஆன்டிஆக்ஸிடன்ட்களையும் வழங்கி, புத்துணர்ச்சியான, ஆரோக்கியமான மற்றும் குறைந்த கலோரி கொண்ட அன்றாட வழக்கத்திற்கு உதவுகின்றன. வெள்ளிரிக்காய் உடலை குளிர்ச்சியாக்கும். எலுமிச்சை வைட்டமின்-சி வழங்கி நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும். புதினா செரிமானத்தை சீராக்கும்.

அதேபோல் இஞ்சி மற்றும் சீரகம் கலந்த நீர், ரத்தத்தை சுத்திகரிப்பதோடு தேவையற்ற கொழுப்பையும் கரைக்க உதவும்.

தர்பூசணி துண்டுகளை தண்ணீரில் போட்டுவைப்பதன் மூலம் உடலுக்கு தேவையான எலக்ட்ரோலைட் சத்துக்களை இயற்கை முறையிலேயே பெற முடியும். கடையில் இருந்து வாங்கப்படும் பாட்டில் பானங்களையும், சர்க்கரை கலந்த செயற்கை குளிர்பானங்களையும் தவிர்த்து, இத்தகைய பானகங்களுக்கு மாறுவது உடலை ஆரோக்கியமாக ஆக்கும்.

இதையும் படியுங்கள்:
நேச்சுரல் டிடாக்ஸ்: உடல் ஆரோக்கியத்திற்கு ‘Reset Button’... அதிகாலை வெந்நீர் பழக்கம்!
Woman Drinking Detox water

இளநீரும், பதநீரும், பழைய சாதத்து கஞ்சியும் தமிழர்களின் பாரம்பரிய நீரேற்று பொக்கிஷங்கள் என்பது அனைவரும் மறுக்க முடியாத உண்மை.

குறிப்பாக காலையில் வெறும் வயிற்றில் நீராகராம் அல்லது பழைய சோற்று தண்ணீரை குடிக்கும் போது அது குடலில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களை அதிகரித்து கோடை கால வயிற்று புண்களை குணமாக்கும் ஆற்றல் கொண்டது.

டிடாக்ஸ் என்ற பெயரில் வெளிநாட்டு முறைகளை பின்பற்றுவதற்கு முன்னால் நம் வீட்டு சமையலறையில் இருக்கும் சீரகம், வெந்தயம், ஏலக்காய் ஆகியவற்றை பயன்படுத்தி குளிர்ந்த பானங்களை தயாரிப்பது பொருளாதார ரீதியாகவும் ஆரோக்கிய ரீதியாகவும் சிறந்தது. தண்ணீர் குடிப்பதை கடமையாக கருதாமல் அது நம் உடலை புதுப்பிக்கும் ஒரு மருந்து என்று எண்ணி பருக தொடங்கினால் கோடையையும் நாம் புன்னமையோடு கடக்கலாம்.

இயந்திர பாகங்கள் சிறப்பாக இயங்க எவ்வாறு எண்ணெய் தேவையோ, அதுபோல் மனித உடலுக்கு நீர் தேவை. நாம் குடிக்கும் ஒவ்வொரு மிடறு தண்ணீரும் செல்களுக்கு புத்துயிர் அளிக்கிறது. இனிமேல் தாகம் வரும் முன் நீர் அருந்துவோம். நம் ஆரோக்கியத்தை பாதுகாப்போம். உடல் நலம் என்பது ஒரு நீரில் தான் தொடங்குகிறது என்பதை மறக்க வேண்டாம்.

logo
Kalki Online
kalkionline.com