ஏசி, ஃபேன் இல்லாமலேயே வெயிலை ஈஸியாக சமாளிக்க சிம்பிளான வழிகள் இதோ!

Summer Food Tips
Summer Food Tips
Updated on

பனி காலம் மெல்ல விடைபெற, சூரியன் தனது பவரை முழு வீச்சில் காட்டத் தொடங்கிவிட்டான். இனி வரும் மாதங்களில் வெயில் நம்மை வறுத்தெடுக்கக் காத்திருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. மதிய நேரங்களில் வெளியில் தலை காட்டவே யோசிக்கும் அளவுக்கு அனல் காற்று வீசப்போகிறது. 

ஆனால், இதைப் பார்த்து நாம் பெரிய அளவில் கவலைப்படத் தேவையில்லை. நமது அன்றாட வாழ்க்கை முறையில் சில சின்னச் சின்ன மாற்றங்களை செய்துகொண்டாலே, இந்த கோடையை மிக ஈஸியாக கடந்துவிடலாம். குறிப்பாக நாம் தினமும் சாப்பிடும் உணவில் கொஞ்சம் அக்கறை காட்டினால், உடல் சூடு நம்மை ஒன்றும் செய்ய முடியாது.

நீர்ச்சத்து!

கோடைகாலம் வந்துவிட்டாலே நமது நெருங்கிய நண்பன் தண்ணீர் தான். தாகம் எடுக்கிறதோ இல்லையோ, குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்க வேண்டும். சாதாரண பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீருக்குப் பதிலாக, மண்பானை நீரை குடிப்பது உடலுக்கு அலாதியான குளிர்ச்சியைத் தரும். இதைத் தவிர, இளநீர், நுங்கு, மோர் போன்றவை இயற்கை நமக்குக் கொடுத்த அருமருந்துகள். 

கொளுத்தும் வெயிலில் சென்று வந்தவுடன் ஃப்ரிட்ஜில் உள்ள குளிர்ந்த நீரை குடிப்பதை விட, ஒரு டம்ளர் கம்மஞ்சோறு நீராகாரம் அல்லது சீரகத் தண்ணீர் குடித்தால் உடம்பு சில்லென்று மாறிவிடும். இது உடல் சூட்டை தணிப்பதோடு மட்டுமல்லாமல், செரிமானத்தையும் சீராக்கும்.

கோடைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்!

அடுத்ததாக நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது பழங்கள் மற்றும் காய்கறிகள். தர்பூசணி, முலாம்பழம், வெள்ளரிக்காய் போன்ற நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தினசரி நமது மெனுவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அடிக்கிற வெயிலுக்கு காரமான, மசாலா நிறைந்த மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்ப்பது குடலுக்கு மிகவும் நல்லது. 

இதையும் படியுங்கள்:
மாம்பழச்சாறு: இயற்கையின் இனிமையான ஆரோக்கிய பானம்!
Summer Food Tips

பிரியாணி, ஃபாஸ்ட் ஃபுட் போன்றவற்றை சில மாதங்களுக்கு மூட்டை கட்டி வைத்துவிட்டு, தயிர் சாதம், பழைய சோறு, கேழ்வரகு கூழ் போன்ற எளிதில் செரிமானமாகும் உணவுகளுக்கு மாறுவது புத்திசாலித்தனம். அதேபோல, எலுமிச்சை ஜூஸ், சாத்துக்குடி சாறு போன்றவற்றை வெள்ளைச் சர்க்கரைக்கு பதிலாக நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் கலந்து குடிக்கலாம். இது உடலுக்குத் தேவையான எனர்ஜியை உடனடியாக கொடுக்கும்.

ஆடைகளில் கவனம்!

உணவைத் தாண்டி, நாம் உடுத்தும் உடைகளிலும் சிறிது கவனம் செலுத்துவது அவசியம். உடலோடு ஒட்டிய இறுக்கமான ஆடைகளைத் தவிர்த்துவிட்டு, தளர்வான காட்டன் உடைகளை அணிவது உடலுக்கு மிகவும் இதமாக இருக்கும். கறுப்பு நிற ஆடைகளை தவிர்ப்பது நலம், ஏனெனில் அவை வெப்பத்தை அதிகம் ஈர்க்கும் தன்மை கொண்டவை. 

வெயிலில் வெளியே செல்லும்போது மறக்காமல் குடை அல்லது தொப்பி அணிந்து செல்வது, சூரியக் கதிர்களின் நேரடி தாக்கத்திலிருந்து நம் சருமத்தை பாதுகாக்கும். கண்களுக்கு குளிர்ச்சி தர சன்கிளாஸ் பயன்படுத்துவதும் நல்ல சாய்ஸ் தான்.

இதையும் படியுங்கள்:
கோடைக்காலம் Vs பலாப்பழம்: சாப்பிடலாமா? கூடாதா?
Summer Food Tips

கோடைக்காலம், ஒரு சாதாரண இயற்கை சுழற்சி மட்டுமே. அதைக் கண்டு நாம் முகம் சுளிக்கவோ, வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கவோ அவசியமில்லை. நம் உடலுக்கு ஏற்றவாறு உணவுகளையும் பழக்கவழக்கங்களையும் ஸ்மார்ட்டாக மாற்றிக்கொண்டால், இந்த கோடையையும் நாம் ஆரோக்கியமாகவே கொண்டாடலாம்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

logo
Kalki Online
kalkionline.com