

1. வெயிலின் தாக்கத்தால் வரும் தலைவலியை போக்க சில வழிகள்
தலைவலி என்பது சில சமயங்களில் எதனால் வருகிறது என தெரியாமல் காரணத்தை தேடுவோம். ஆனால், இந்த வெயில் காலத்தில் வெளியில் சென்று விட்டு வந்தாலே தலைவலி வந்து விடும்.
கைவைத்தியம் ஆக வீட்டில் உள்ள பொருட்களை வைத்து தலைவலியை போக்கிக் கொள்ளலாம்.
அகத்தி இலைச்சாறு எடுத்து நெற்றியில் தடவிட தலைவலி தீரும்.
தலைவலி குணமாக மிளகுப் பொடியுடன் வெல்லம் சேர்த்து சாப்பிடலாம்.
முள்ளங்கி சாறு சாப்பிட தலைவலி தீரும்.
தலைவலி குணமாக வில்வ இலையை பொடியாக்கி 1/2 டீஸ்பூன் தேனுடன் கலந்து சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.
தலைபாரம், தலையில் நீர்க்கோத்தல் காரணமாக தலைவலி ஏற்பட்டால் உலர்ந்த நெல்லிக்காயை அரைத்து பற்று போடலாம்.
சுக்கை அரைத்து நெற்றியில் பற்று போட சட்டென தலைவலி குறையும்.
எலுமிச்சை சாறுடன் தேன் சேர்த்து குடிக்க வலி மட்டுப்படும்.
நீர்ச்சத்து குறையாமல் சரியான நேரத்தில் சாப்பிட பசியால் உண்டாகும் தலைவலி குறையும்.
தலைவலி, பித்தம் அதிகமானால் கீழாநெல்லிச் சாறுடன் தேன் கலந்து அருந்தலாம். வெந்நீரில் காபி பவுடரைப் போட்டு அந்த ஆவியை பிடிக்க தலைவலி சட்டென குறையும்.
யுடிகுலோன் கலந்த தண்ணீரில் முகத்தை அலம்பிட தலைவலி போகும். சுக்கு காபி, க்ரீன் டீ அருந்திட தலைவலி குறையும்.
வெயிலில் வெளியே செல்லும் போது குடை, கூலர்ஸ் எடுத்து செல்ல பாதிப்பிலிருந்து விடுபட உதவும்.
வலி நிவாரணி மருந்துகளை தலைவலி அதிகம் இருந்தால் மட்டுமே போட வேண்டும். எப்போதும் போட்டுக் கொள்ள பின்னாளில் அதுவே உடல் ஆரோக்கியத்திற்கு தீங்காக மாறும்.
****************
2. கோடைக்கால பயிற்சியாக நீச்சல் தரும் நன்மைகள்
கிராமப்புறங்களில் குழந்தைகளுக்கு பிடித்த பொழுது போக்கு நீச்சல். ஆற்றில், குளத்தில் கண்மாயில் நீச்சல் அடிப்பது பிள்ளைகளுக்கு உடல், மன வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
கோடைக்கால பயிற்சியாக நீச்சல் பழகும் நகர்புற பிள்ளைகளை விட கிராமத்துக் குழந்தைகள் தசை வலிமையோடு, நோய் எதிர்ப்புச் சக்தியை பெற்றவர்களாக வளர்கிறார்கள்.
குழந்தைகளுக்கு மட்டுமன்றி பெரியவர்களுக்கும் நீச்சல் பயிற்சி என்பது உடலையும், உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மன அழுத்தத்தை குறைக்க, டென்ஷன் ஏற்படாது இருக்க நீச்சல் ஒரு சக்தி வாய்ந்த வழி. உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க ஒருவர் 150 நிமிடங்கள் மிதமான செயல்பாடுகளில் ஈடுபட அறிவுறுத்தப் படுகிறார்கள். அதற்கு நீச்சல் நல்லது.
இதனால் முழு உடல் மற்றும் இதய அமைப்புகள் திறம்பட இயங்கும். இதிலுள்ள பல ஸ்டைல்கள் உடலின் தசைகளை வலுப்படுத்தும். நீச்சல் அடிப்பதால் தசைகளுக்கு நல்ல இயக்கம் கிடைக்கிறது. இதயம், நுரையீரல் பலப்படுகிறது.
நீச்சல் ரத்த அழுத்தத்தை குறைக்க, ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. ஆர்த்ரைடீஸ் உள்ளவர்களுக்கு நீச்சல் ஒரு பாதுகாப்பான உடற்பயிற்சி.
மூட்டுவலி பிரச்சனை உள்ளவர்கள் மிதமான நீச்சல் மற்றும் சைக்கிளை ஓட்டுவதால், பிரச்சனைகள் குறைவதாக நிபுணர்கள் சொல்கின்றனர்.
ஆஸ்துமா நோயாளிகளுக்கு நீச்சல் சிறந்த பயிற்சி. இது நுரையீரல் திறனை விரிவுபடுத்தும். சுவாசக் கட்டுப்பாட்டை பெறவும் உதவும். தண்டுவட மரப்பு உள்ளவர்களுக்கும் நீச்சல் நன்மை பயக்கும்.
கலோரிகளை எரிக்க நீச்சல் சிறந்த வழி. ஒரு மணி நேரத்தில் நீச்சல் பயிற்சி செய்ய 800 கலோரிகளை எளிதில் எரிக்கலாம் என சொல்கின்றனர்.
எளிதாக எடையைக் குறைக்க, நீச்சல் பயிற்சி தினசரி செய்யலாம். இரவில் நன்றாக தூங்கவும் நீச்சல் உதவுகிறது.
நீச்சல் பயிற்சியில் என்டோர் பின் வெளியாவதால் உற்சாகத்தை தந்து மனநிலையை மேம்படுத்துகிறது. டிமென்ஷியா பாதிப்பு உள்ளவர்கள் நீச்சல் பயிற்சி செய்ய நல்ல பலனைத் தருவதாக ஆய்வுகள் சொல்கின்றன.
குழந்தைகளின் உடல் வளர்ச்சியை ஊக்குவித்து, அவர்களின் மன, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. செலவில்லாத நீச்சல் பயிற்சி நம் அனைவருக்கும் அளவில்லா ஆரோக்கியத்தை தந்து இளமையை தக்க வைக்க உதவுகிறது.