

கோடை வெப்பம் அதிகரிக்கும் நாட்களில் திடீரென மழை பெய்யும் பொது ஒரு நிம்மதி பெருமூச்சு ஏற்படும். அதே சமயம், அந்த மழை மனதிற்குப் புத்துணர்ச்சி அளித்தாலும், அது நமது முடிக்கும் உச்சந்தலைக்கும் அமைதியான முறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வெளிப்படையாக சுத்தமாகத் தோன்றும் மழைநீர், உண்மையில் தலைமுடியின் ஆரோக்கியத்தை பாதிக்கும் பல காரணிகளை உள்ளடக்கியிருக்கிறது.
மழைத்துளிகள் வானத்தில் இருந்து விழும் போது, காற்றில் இருக்கும் தூசி, புகை, வேதிப்பொருட்கள் மற்றும் மாசுபாட்டுத் துகள்களை உடன் எடுத்துக் கொண்டு கீழே விழுகின்றன. இந்த மாசுபட்ட தண்ணீர் தலைமுடியில் படும்போது, தலைமுடியை பாதுகாக்கும் இயற்கை எண்ணெய்களை நீக்கிவிடுகிறது. இதனால் தலைமுடி வறண்டு போகிறது. தொடர்ந்து மழையில் நனைவது தலைமுடி உதிர்வு போன்ற பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும்.
குறிப்பாக, கலர் செய்யப்பட்ட தலைமுடி அல்லது வேதியியல் சிகிச்சை செய்யப்பட்ட தலைமுடிக்கு இந்த மழைநீர் இன்னும் அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தும். மழைநீரில் உள்ள மாசு துகள்கள் தலைமுடியின் நிறத்தை விரைவாகக் குறைக்கவும், அதன் வலிமையை குறைக்கவும் காரணமாகின்றன. இதனால் தலைமுடி தன் இயல்பான மென்மையையும் பொலிவையும் இழக்கிறது.
உச்சந்தலை நீண்ட நேரம் ஈரமாக இருக்கும் போது, அது பூஞ்சை வளர்ச்சிக்கு உகந்த சூழலை உருவாக்குகிறது. இதனால் பொடுகு, அரிப்பு, சிவப்பு மற்றும்செபொர்ஹெயிக் டெர்மடிடிஸ் போன்ற சரும பிரச்சனைகள் தோன்றக்கூடும். குறிப்பாக எண்ணெய் தன்மை கொண்ட அல்லது சென்சிட்டிவ் ஸ்கேல்ப் உடையவர்களுக்கு அசௌகரியமும் தொற்றுயும் அதிகரிக்கிறது.
இத்தகைய பிரச்சினைகளை தவிர்க்க, சில எளிய ஆனால் முக்கியமான பராமரிப்பு முறைகளை பின்பற்றலாம். முதலில், மழையில் நனைந்த பிறகு உடனே தலைமுடியை சுத்தமான தண்ணீரால் கழுவ வேண்டும். இதனால் மாசுபட்ட துகள்கள் நீங்கும். அதன் பிறகு மென்மையான ஷாம்புவை பயன்படுத்தி தலைமுடியை சுத்தம் செய்ய வேண்டும். இது தலைமுடியின் சமநிலையை பாதுகாக்க உதவும்.
நனைந்த தலைமுடியை வலுக்கட்டாயமாக கட்டுவதை தவிர்க்கப்பட வேண்டும். ஈரமான தலைமுடி மிகவும் பலவீனமாக இருக்கும்; அதனால் அதை இறுக்கமாக கட்டினால் வேர் பகுதி இழுக்கப்பட்டு முடி உடைய வாய்ப்புள்ளது. அதற்கு பதிலாக, மெதுவாக துடைத்து உலர விடுவது நல்லது.
மேலும், லேசான கண்டிஷனர் அல்லது சீரம் பயன்படுத்துவது தலைமுடியின் ஈரப்பதத்தை சமநிலைப்படுத்தவும், முடி வறண்டு போவதையும் கட்டுப்படுத்த உதவும்.
கோடை மழை ஒரு புத்துணர்ச்சி தரும் அனுபவமாக இருந்தாலும், அது தலைமுடி மற்றும் ஸ்கேல்ப்-க்கு மறைமுக பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே, மழையை ரசிப்பதோடு சேர்த்து தலைமுடியை சரியாக பாதுகாப்பது மிகவும் அவசியம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)