

கல்யாண வீட்டிற்கு சென்று பந்தியில் உணவருந்தும் போது கவனித்திருந்தால் தெரியும்... முதலில் உணவுகளை வைத்துவிட்டு அதை சாப்பிட்டு முடித்ததும் கடைசியாக பாயாசம் தருவார்கள். அதை முடித்துவிட்டு வந்ததும் பீடா, ஐஸ்கிரீம் என்று இனிப்புகளை எடுத்துக் கொள்வோம். இவ்வாறு கடைசியாக இனிப்பு எடுத்துக் கொள்வது உணவு நன்றாக செரிக்க உதவும் என்று சொல்லி கேள்விப்பட்டிருப்பீர்கள்.
உணவு சாப்பிட்டு முடித்ததும் அதிக அளவிலான இனிப்பை (Sweet) எடுத்துக் கொள்ளும் போது அது ரத்த சர்க்கரை அளவை ஏற்றுகிறது. ரத்த சர்க்கரை அளவு ஏறும் போது உங்களுக்கு தற்காலிகமாக உடலில் சக்தி ஏறுவது போன்ற உணர்வு ஏற்படும். இதன் காரணமாக உணவுகள் நன்றாக ஜீரணமாகிக் கொண்டிருக்கிறது என்று தவறாக நினைத்துக் கொள்வீர்கள். ஆனால் உண்மையிலேயே என்ன நடக்கிறது என்றால், உணவுக்கு பின் இனிப்பு சாப்பிடுவது உங்களுக்கு அதிக சர்க்கரை லோடை தருகிறது.
உதாரணத்திற்கு வாஷிங் மிஷினில் நிறைய துணிகளை போட்டுவிட்டு அது ஓடிக்கொண்டிருக்கும் போது இன்னும் அதிகமாக துணியை சேர்த்து போட்டுவிட்டு அதற்கு உதவுகிறேன் என்று சொன்னால் அது சரிவாராது இல்லையா? அதேதான் இங்கும் நடக்கிறது. வயிற்றுக்கு சென்ற உணவு சிறிது நேரத்தில் குடல் பகுதிக்கு மெதுவாக நகர்ந்து சென்றுவிடும். ஆனால் இனிப்பை சாப்பிடும் போது அந்த உணவு வயிற்றிலேயே தங்கக்கூடிய வாய்ப்பு உருவாகிறது. இதனால் மெதுவாக தான் ஜீரணமாகும்.
அதுமட்டுமில்லாமல் நாம் கொடுக்கக்கூடிய அதிக சர்க்கரை கொழுப்பாக மாறும். இது ரத்தத்தில் கலந்து உடல் கொழுப்பில் கலந்து விடுகிறது. இந்த கொழுப்புகள் தான் உங்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. பெண்களில் நிறைய பேர் குண்டாக இருந்தால், PCOD, PCOS பிரச்னைகளால் அவதிப்படுகிறீர்கள் என்றால் இந்த குறிப்பிட்ட பழக்கத்தை கடைப்பிடிப்பது கொழுப்புகளை குறைய விடாது.
இதற்கான தீர்வாக ஆயுர்வேத சித்த மருத்துவத்தில் ஒரு தீர்வு இருக்கிறது. எப்போதுமே சாப்பிடும் போது முதலில் இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம், கசப்பு, துவர்ப்பு இது தான் நீங்கள் உணவு சாப்பிட வேண்டிய முறையாகும். ஏன் எடுத்த உடனேயே இனிப்பு சாப்பிட வேண்டும் என்றால், முதலில் சாப்பிடும் உணவு சீக்கிரமாக செரிமானமாகிவிடும். போக போக செரிமான செய்யக்கூடிய வேகம் குறையும். அச்சமயம் இனிப்பு சாப்பிடும் பழக்கத்தை வைத்துக் கொள்வது மிகவும் தவறு.
சாப்பிட்டு முடித்ததும் ஜீரணத்திற்கு வெற்றிலை, சோம்பு, ஏலக்காய், மோர் போன்றவற்றை சாப்பிடலாம். இது நம் ஜீரணத்திற்கும் நல்லது, நம் உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்காது. இனிப்பிற்கு பதில் பேரிச்சம்பழம், நட்ஸ், உலர்ந்த பழங்கள் சாப்பிடலாம். உணவு சாப்பிட்டு முடித்ததும் பழங்கள் கூட சாப்பிடுவதை தவிர்த்துவிடுவது நல்லது. முடிந்த அளவு உணவு உண்டபிறகு 15 நிமிடம் நடப்பது நல்லது.
சர்க்கரை நோய் உள்ளவர்கள், இதய நோய் பிரச்னை உள்ளவர்கள், PCOD பிரச்னை உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள், Fatty liver, தைராய்ட் பிரச்னை உள்ளவர்கள், acidity, நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் உணவு சாப்பிட்ட பிறகு இனிப்பு சாப்பிடுவதை தவிர்த்துவிடுவது நல்லது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)