நீங்க டெய்லி தலைக்கு குளிக்கிறீங்களா? யாரு குளிக்கணும், யாரு கூடாதுன்னு முதல்ல தெரிஞ்சுக்கோங்க!

Bathing
Bathing
Published on

இன்றைய காலகட்டத்தில், வெளியே சென்று வந்தாலே வாகனப் புகை, தூசு என்று தலை முழுவதும் அழுக்காகி விடுகிறது. இதனால் சிலர் தினமும் தலைக்குக் குளிக்கிறார்கள். ஆனால், சைனஸ் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்களோ, தலைக்குக் குளிப்பதையே தள்ளிப் போடுகிறார்கள். உண்மையில், நோயின் வலையில் விழாமல் இருக்க, யார், எப்போது, எப்படித் தலைக்குக் குளிக்க வேண்டும்? வாருங்கள் பார்ப்போம்.

யாரெல்லாம் தினமும் குளிக்கலாம்?

  • சிலருக்குத் தலையில் எண்ணெய் வளம் அதிகமாக இருக்கும். இதனால், ஒரு நாள் குளிக்காவிட்டாலும், தலை பிசுபிசுப்பாக ஆகிவிடும். இவர்கள் தினமும் குளிக்கலாம். 

  • அதேபோல, தலையில் அரிப்பு அல்லது பொடுகுத் தொல்லை அதிகமாக இருப்பவர்களும், தினமும் தலைக்கு அலசும்போது, அந்தப் பகுதியில் அழுக்குகள் சேராமல் தடுத்து, பிரச்சனையின் தீவிரத்தைக் குறைக்கலாம். 

  • ஜிம்முக்குச் செல்பவர்கள், ஓயாமல் வியர்க்கும் உடம்பு கொண்டவர்கள் போன்றோர், வியர்வை தலையில் தேங்காமல் இருக்க, தினமும் குளிப்பதே நல்லது.

யாரெல்லாம் தினமும் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும்?

 சிலருடைய முடி, இயற்கையாகவே மிகவும் வறண்டு போய் இருக்கும். இன்னும் சிலருக்கு, தொட்டாலே 'கயிறு' போலக் கடினமான முடி அமைப்பு இருக்கும். இப்படிப்பட்டவர்கள் தினமும் ஷாம்பூ போட்டுத் தலைக்குக் குளித்தால், தலையில் இருக்கும் கொஞ்ச நஞ்ச இயற்கை எண்ணெய்ப் பசையும் போய்விடும். இதனால், முடி இன்னும் அதிகமாக வறண்டு, உடைய ஆரம்பித்துவிடும். இவர்கள், இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை குளிப்பதே சரியானது.

குளிக்கும்போது செய்யும் தவறுகள்!

"நான் வாரத்துக்கு ஒரு தடவைதான் குளிப்பேன்" என்று சிலர் பெருமையாகச் சொல்வார்கள். அதுவும் ஒரு தவறான பழக்கம்தான். ஒரு வாரம் முழுக்க, தலையில் சேரும் அழுக்கு, தூசு, வியர்வை எல்லாமே வேர்க்கால்களில் தங்கி, பெரிய பிரச்சனைகளை உண்டாக்கிவிடும்.

இதையும் படியுங்கள்:
இரும்புக் கடாயை எளிதாக சுத்தம் செய்ய ஓர் எளிய முறை!
Bathing

அதேபோல, தலைக்குக் குளிக்கும்போது, ஷாம்பூவை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதும் தவறு, பயன்படுத்தாமலே இருப்பதும் தவறு. சிலர், "நான் ஷாம்பூவே போட மாட்டேன், வெறும் தண்ணீர்தான் ஊற்றுவேன்" என்பார்கள். இதனால், தலையில் உள்ள பிசுக்கு மற்றும் அழுக்குகள் கொஞ்சம் கூடப் போகாது. அவை அங்கேயே தேங்கி, முடி உதிர்வுக்கு வழிவகுக்கும்.

தலைக்குக் குளிக்கும்போது, மிதமான அளவில் ஷாம்பூ எடுத்து, அதை நன்றாகத் தேய்த்து, அதைவிட முக்கியமாக, முடி மற்றும் வேர்க்கால்களில் ஷாம்பூ துளியும் மிஞ்சாத அளவுக்கு நன்றாகத் தண்ணீரில் அலச வேண்டும். முடிந்தவரை, அதிக ரசாயனங்கள் இல்லாத ஷாம்பூவாகப் பயன்படுத்துவது நல்லது.

இதையும் படியுங்கள்:
உடலில் ஓடும் இரத்தம்... அதை எப்படி செய்வது சுத்தம்?
Bathing

குளிப்பது, உடலைச் சுத்தம் செய்யும் ஒரு செயல் மட்டுமல்ல, அது மனதை ஆசுவாசப்படுத்தும் ஒரு தியானம் போன்றது. தலைக்குக் குளிக்கும்போது, டென்ஷன், மன அழுத்தம் போன்ற கவலைகளை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு, ரிலாக்ஸாகக் குளியுங்கள். 

உங்கள் முடியின் தன்மை என்ன என்பதை நீங்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப, உங்கள் குளியல் முறையை அமைத்துக்கொண்டால், முடியின் ஆரோக்கியமும் மேம்படும், நோய்த் தொல்லைகளும் நெருங்காது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com